தூத்துக்குடியில் ஹெல்த் வாக் சாலையை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்துள்ளார்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று 04.11.2023 சென்னையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் நடப்போம் நலம் பெறுவோம்- சுகாதார நடைபாதை (8KM Health Walk) ஹெல்த் வாக் சாலையை திறந்து வைத்ததை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் பெல் ஹோட்டல் முன்புறம் இருந்து மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
விழாவில் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் ஹெல்த் வாக் சாலையை திறந்து வைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து தூத்துக்குடியில், பெல் ஹோட்டல் முன்புறம் இருந்து தொடங்கி மீன்பிடி துறைமுகம், இனிகோ நகர், ரோச் பூங்கா, படகு குழாம் வரை 4 கீ.மி தூரம் சென்று மீண்டும் அதே வழியில் திரும்பி பெல் ஹோட்டல் முன்புறம் முடியும் நடைப்பயிற்சி நடைபெற்றது.
மீனவர்களை மீட்க நடவடிக்கை
மாலத்தீவு மீனவர்கள் மட்டுமல்லாமல் ராமேஸ்வரம் மீனவர்களையும் படகோடு திரும்ப பெற ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள். தருவைகுளம் மீனவர்கள் மாலத்தீவில் தவறுதலாக போகும்போது பிடிபட்டிருக்கிறார்கள். 12 பேரரையும் விடுதலை செய்கிறோம், படகை பிடித்துக் கொள்கிறோம் என்று மாலத்தீவு அரசு கூறியுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மத்திய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து படகோடு அந்த மீனவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.
தொடர்ந்து ஒன்றிய அரசை தொடர்பு கொண்டு மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும், படகுகளை விடுவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். கூடிய சீக்கிரம் அதற்குண்டான நடவடிக்கை எடுக்கப்படும். எந்தவித பிரச்சனையாக இருந்தாலும் ஒன்றிய அரசு தலையிட்டு அதற்கான நடைமுறைகளை எடுக்க வேண்டும். கடந்த வாரம் பிடிப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்க வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு மத்திய உள்துறை இணை அமைச்சர் அவர்களை சந்தித்து அழுத்தத்தை கொடுத்திருக்கின்றார்.
மத்திய அரசு தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறைக்காக 300 வாகனங்களை வழங்கியுள்ளது. ஆனால் நடைமுறைக்கு வழங்க வேண்டிய டீசல், மற்றும் மருத்துவர்களுக்கு ஒன்றிய அரசு 60 சதவீத மானியமும் மாநில அரசு 40 சதவீத மானியமும் வழங்கும். ஆனால் தற்போது வரை ஒன்றிய அரசின் பங்களிப்பான 60 சதவீத மானியத்தை வழங்க வில்லை. ஒன்றிய அரசு தர வேண்டிய மானியத்தை வழங்கிய பின் ஆம்புலன்ஸ் வாகன சேவை தொடங்கப்படும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி. தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையர், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ச.தினேஷ் குமார். மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், சார் ஆட்சியர் கௌரவ் குமார். துணை இயக்குனர் சுகாதார பணிகள் எஸ்.பொற்செல்வன் மற்றும் செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


