தூத்துக்குடி மாவட்டத்தில் டெங்கு பரவலை தடுக்கும் விதமாக, அனைத்து துறை தலைவர்களுக்கான மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் டெங்கு பரவலை தடுக்கும் விதமாக, அனைத்து துறை தலைவர்களுக்கான மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் ஆட்சியர் தெரிவித்ததாவது: டெங்கு காய்ச்சல் பரவும் விதம், கொசு உற்பத்தியாகும் இடங்கள் அதனை தடுக்கும் வழிமுறைகள், தேவையற்ற கொசு உற்பத்தியாகும் பொருள்களை அப்புறப்படுத்தும் பணிகள், இரத்த பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை அவசியம் என்பதனை பற்றி அனைத்து துறை தலைவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.
காய்ச்சல் கண்ட இடங்களில் ஒட்டுமொத்த துப்புரவு பணி, மருத்துவக்குழுக்கள் அமைத்தல், கொசு ஒழிப்பு புகைமருந்து அடிக்கவும், நிலவேம்பு குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் பள்ளி கல்லூரிகளில் ஒட்டுமொத்த துப்புரவு பணிகளை மேற்கொள்ளவும், ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைகளில் அரசு மற்றும் தனியார் கட்டிடங்கள் மற்றும் வளாகங்களில் கொசு உற்பத்தி காரணிகளை கண்டறிந்து அப்புறப்படுத்தவும் சுற்றுபுறத்தை தூய்மையாக வைத்து கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமைகளில் உபயோகமற்ற டயர்களை அப்புறப்படுத்தும் முகாம்கள் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அனைத்து பகுதிகளிலும் முறையான குளோரிசன் செய்யப்பட்ட குடிநீர் வழங்கவும், மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்யவும், குடிநீர் விநியோகிக்கும் குழாய்களில் கசிவோ அல்லது உடைப்போ ஏற்பட்டால் அதனை உடனடியாக கண்டறிந்து சரிசெய்து சீரான குடிநீர் விநியோகத்தை உறுதிசெய்ய சம்பந்தபட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
டெங்கு மற்றும் காய்ச்சல் பரவல் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காய்ச்சல் கண்டறியப்பட்ட நபர்கள் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்தார்.


