தூத்துக்குடி சிவன் கோவிலில் நடந்த வித்தியாரம்பம் நிகழ்ச்சியில் ஏராளமான பெற்றோர் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.
விஜயதசமி நாளில் குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தலை தொடங்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். நவராத்திரி விழாவின் பத்தாவது நாளான விஜயதசமி அன்று கற்றலைத் தொடங்குவது சிறப்பாக கருதப்படுகிறது. எனவே இந்த நாளில் குழந்தைகளுக்கு முறையாக இசை, நடனம், மொழி, கலைகளை இந்த நாளில் குழந்தைகள் கல்வி கற்றுக் கொள்ள தொடங்கினால் சிறப்பாக அமையும் என்பதும் ஐதீகம்.
இந்நிலையில் தூத்துக்குடி சிவன் கோவிலில் விஜயதசமியை முன்னிட்டு பக்தி பேரவை சார்பில் கோவில் தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர் தலைமையில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது. பெருங்குளம் செங்கோல் ஆதினம் கலந்து கொண்டு ஆசி வழங்கினார். சரஸ்வதி படம் முன்பு தேங்காய், பழம், மஞ்சள்குங்குமம் உள்ளிட்டவை வைத்து வழிபாடு நடத்தி அரிசி மற்றும் நெல்லில் அகர வரிசையின் முதல் எழுத்தான அ என்ற எழுத்தை குழந்தைகளின் கையைப்பிடித்து எழுத கற்றுக் கொடுத்தனர்.
மேலும் குழந்தைகளின் நாக்கிலும் கல்விக்கான போதனையை தொடங்கும் வகையில் அகர எழுத்துக்களை எழுதினர். இதில் காலை முதல் ஏராளமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், அறங்காலவர் குழு தலைவர் கந்தசாமி, பக்தி பேரவை செந்தில் ஆறுமுகம், சுபாஷ் சுப்புராஜ், முத்து குமாரசாமி, முருகேசன், சரவணாஸ் செந்தில் ஆறுமுகம், கோவில் பிரதான பட்டர்கள் சுப்பிரமணியன், சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


