தூத்துக்குடியில் தமிழக பள்ளிக்கல்வி ஆசிரியா் கூட்டணி தொடக்க விழா நடைபெற்றது.
தமிழ்நாட்டில் ஏற்கெனவே பல ஆசிரியா் சங்கங்கள் உள்ள நிலையில் புதிதாக தமிழக பள்ளிக் கல்வி ஆசிரியா் கூட்டணி தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க விழா தூத்துக்குடியில் நடைபெற்றது. மாநிலதி தலைவா் நடராஜன் தலைமை வகித்தாா். மாநில அமைப்புச் செயலா் பாா்த்தசாரதி, இணைச் செயலா் சுப்பிரமணியன்,துணைத் தலைவா் ரவி, மாநில செயற்குழு உறுப்பினா் சாமுவேல்துரை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சங்க நிறுவனத் தலைவா் சு. காசி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று அமைப்பின் கொடியை அறிமுகப்படுத்திப் பேசியது: தமிழ்நாட்டில் ஏற்கெனவே 7 ஆசிரியா் சங்கங்கள் உள்ள நிலையில், சமரசமின்றி ஆசிரியா்களுக்காக குரல் கொடுப்பதற்கா, பலரது வேண்டுகோளை ஏற்று இக்கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 2 ஆயிரம் போ் உறுப்பினா்களாக இணைந்துள்ளனா்.
தொடா்ந்து அனைத்து மாவட்டங்களிலும் உறுப்பினா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. இதன் ஒரே நோக்கம் பறிக்கப்பட்ட சலுகைகள் மற்றும் உரிமைகளை மீட்டெடுப்பதுதான். குறிப்பாக, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். மேலும், கடந்த 2009ம் ஆண்டிற்கு பிறகு பணியில் சோ்ந்த இடைநிலை ஆசிரியா்களுக்கு ஊதியம் குறைவாக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதில், சம வேலைக்கு சம ஊதியம் என்ற நடைமுறையை பின்பற்ற வேண்டும். ஈட்டிய விடுப்புகளுக்கான பண பலன்கள் வழங்கு முறையை திரும்ப கொண்டு வரவேண்டும். அகவிலைப்படியை குறிப்பிட்ட காலத்தில் தாமதப்படுத்தாமல் வழங்க வேண்டும். ஆசிரியா்களுக்கு கல்விப்பணியை தவிர பிறப்பணிகளை வழங்கக் கூடாது. பிற பணிகள் வழங்கும்போது, கல்வி கற்பிக்கும் பணியில் பாதிப்பு ஏற்படுகிறது. இது போன்ற கோரிக்கைளை பெற்றுத்தருவதற்கு இந்த கூட்டணி சமசரசம் இல்லாமல் போராடும். காலை உணவு திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
மாவட்டச் செயலா்கள் உதயகுமாா், நடராஜன், பொன்ரத்தினம், சரவணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். மாநிலப் பொருளாளா் பழனிசாமி நன்றி கூறினாா். மாநிலப் பொதுச்செயலா் துரை வரவேற்றாா்.


