மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி பீட நிறுவனர் ஆன்மிக குரு பங்காரு அடிகளாருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனரான ஆன்மிக குரு பங்காரு அடிகளார் மறைந்தார். அவருக்கு வயது 82. அடிகளாரின் மறைவு, அவரது பக்தர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை கடந்த 1970-ம் ஆண்டு நிறுவினார். கோயில் கருவறைக்கே சென்று பெண்கள் நேரடியாக வழிபாடு செய்யும் முறையை ஏற்படுத்தினார். மாதவிலக்கு நாட்களிலும் இங்கு தடையின்றி வழிபடலாம் என்பது, பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் சக்திமாலை அணிந்து, இருமுடி சுமந்து மேல்மருவத்தூர் வந்து ஆதிபராசக்தி அம்மனை வழிபடத் தொடங்கினர். சித்ரா பவுர்ணமி, ஆடிப்பூரம், தைப்பூசம் போன்ற விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் மேல்மருவத்தூர் வந்து பங்காரு அடிகளாரிடம் ஆசி பெற்று வந்தனர். பக்தர்களால் ‘அம்மா’ என்று மிகுந்த அன்போடு அழைக்கப்பட்டார் பங்காரு அடிகளார்.
ஆதிபராசக்தி என்ற பெயரில் அறக்கட்டளை நிறுவினார். இதன்மூலம், மருத்துவம், பொறியியல் கல்லூரிகள், பள்ளிகள் என ஏராளமான கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. அறக்கட்டளை மூலம் சுற்றுப்புற கிராமங்கள் உட்பட பல பகுதிகளில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்து வந்தார். இந்த நிலையில், கடந்த சிலநாட்களாக வயது மூப்பு காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் பங்காரு அடிகளார் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். நேற்று காலை உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டதால் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பிற்பகலில் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்ட பங்காரு அடிகளார் மாலை 5 மணி அளவில் மறைந்தார்.
செங்கல்பட்டு இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த பங்காரு அடிகளாரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக மேல்மருத்துவர் கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு ஏராளமான பக்தர்கள் அஞ்சலி செலுத்தினர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகைதரும் செவ்வாடை அணிந்த பக்தர்கள், அவருக்கு கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினர். தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வந்திருந்த பக்தர்களும் அஞ்சலி செலுத்தினர்.
மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி பீட நிறுவனர் ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் அருள்வாக்குப்படி கோயில் கருவறைக்கும் புற்று மண்டபத்துக்கும் நடுவில் நின்ற நிலையில் அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரின் பணி முதல்முறை எங்கு தொடங்கியதோ அங்கு நல்லடக்கம் செய்ய வேண்டும் என பங்காரு அடிகளார் முன்பே கூறியதாக அவரின் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
பங்காரு அடிகளாரின் இறுதிச் சடங்கில் தமிழக அரசு சார்பில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, தொழிலாளர் நலத் துறை அமைச்சர் அன்பரசன், ஜெகத்ரட்சகன் எம்.பி., ஆளுநர் ஆர். என். ரவி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 3 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. பங்காரு அடிகளாரின் உடல் புற்றுக் கோயில் மண்டபத்தில் சிந்தர் முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது.
மேல்மருவத்தூர் சக்தி பீடத்தில் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்துள்ளதால், பாதுகாப்புக்கு காவல் துறையினர் அதிக எண்ணிக்கையில் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, தமிழக அரசு சார்பில் பங்கேற்றுள்ள அமைச்சர் பொன்முடி, பங்காரு அடிகளார் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


