4. தாமிரபரணியால் இணைந்த ஜோடி
“செத்தாலும் இருவரும் சேர்ந்தே சாவோம்” என முடிவு செய்து விட்டனர் செல்வியும் காளிமுத்துவும்.
எனவே தான் கட்டிய இருக்கத்தை இருவரும் விடவே இல்லை. கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் சென்று இருக்கும். எதுவுமே அசைவு தெரியவில்லை. புலி நிற்கிறதா? போய் விட்டதா? என கூட தெரியவில்லை.
மெதுவாக கண்ணைத் திறந்துப் பார்த்தனர்.
அங்கே புலி இல்லை.
இவர்கள் இருவரும் அமைதியாக இருந்ததைப் பார்த்து புலி பயந்தே போய் விட்டது. தூரத்தில் ஒத்தையடி பாதையில் காட்டை நோக்கி அந்த புலி மெதுவாக நடந்து கொண்டிருந்தது.
புலி போன பாதையில் காணி இன பாட்டி ஒருவர் வந்து கொண்டிருந்தார்.அவர் புலியைப் பார்த்து பயப்படவில்லை.
அந்த பாட்டி நேற்று இரவு இவர்கள் விழிப்புணர்வு நாடகம் நடித்த போது ரசித்துப் பார்த்த பாட்டி.
“என்ன சாரே, புலியைப் பாத்து பயந்தீட்டியளோ?” என்றார்.
“ஆமாம் பாட்டி, எங்க மேலே பாஞ்சிருமோன்னு பயந்துட்டோம்”. இருவரும் நடுங்கிய படியே அவளிடம் பேசினர்.
“அட போங்க சாரே, ஊர் கதையெல்லாம் நாடகத்தில நல்லா பேசுதீய. புலி கதை உங்களுக்கு தெரியாதோ?” நகைப்புடன் கேட்டாள் பாட்டி.
அவர்கள் இருவரும் பாட்டி பேசுவதை ஆச்சரியத்துடன் கேட்டனர்.
“இங்க பாருங்க சாரே, எப்போதுமே மிருகங்க நம்மள பாத்து தான் பயப்படும். நம்மபாட்டுக்கு போனா அதுபாட்டுக்கு போவும். எதுத்தால பாத்தேன். அந்த அந்தானிக்கு பயந்து ஓடிச்சி. எதை பாத்துன்னு இங்க வந்து பாத்தேன். உங்களை பாத்துதான் ஓடிருக்கு” சிரித்தாள் பாட்டி. அவள் வாயில் கரை பற்கள் பெரிதாக தெரிந்தது. அந்த பற்கள் சிரிக்கும் போது பளிச்சென தெரிந்தது.
“இங்க பாருங்க. காட்டுக்குள்ள இங்க யானை இருக்கு. பெரிய மிருகம் தான். அந்தா பாருங்க பள்ளிக்கூடம் அதுவரைக்கும் வந்து நிக்கும். நாங்க அதை கண்டுக்கதே கிடையாது. கொஞ்ச நேரம் நின்னு பாத்துட்டு அதுபாட்டுக்கு போயிரும்”.
ஆச்சரியத்துடன் பாட்டி பேசுவதை கேட்டனர் இருவரும்.
“அந்தா பாருங்க அங்க கரடி வரும். அதுக்கிட்ட வம்பு பண்ணுனா நம்ம் முகத்தை பரண்டி அப்படியே ஒரே இடத்தில உட்கார வைச்சிரும். புளியங்குடி பக்கம் எங்கள மாதிரி பளிஞ்சர் இன மக்கள் இருக்காவ அதுல ஒருத்தன் காட்டுக்குள்ள போயி இருக்கான். கரடிக்கிட்ட ஓட்டம் காட்டிருக்கான். அது இவனை இரண்டு நாளு ராத்திரி பகலா உட்கார வச்சிட்டு. கடையில வேட்டைக்காரவிய போயி காப்பாத்தி கொண்டு வந்திருக்காவ. அதுக்குள்ள மூஞ்சை நல்லா பரண்டி வச்சிட்டு”
வச்ச கண் மூடாமல் பாட்டியைப் பார்த்தனர்.
“மூஞ்சி புராவும் ரத்தம். அவனை மலையை விட்டு கீழே தூக்கிட்டு வந்து, புளியங்குடி கவர்மெண்ட ஆஸ்பத்திரியில போட்டு கடைசியில காப்பாத்தி இருக்காவ”.
சிரித்தாள் பாட்டி. “சத்தம் காட்டாம இருந்து இருந்தா அவனுக்கு இந்த கதி வருமா?”
காளிமுத்து ஆச்சரியத்துடன் கேட்டான். “யானை ஒண்ணும் செய்யாதா?”
ஆச்சி பேசினாள்.“ அது யாரையும் ஒண்ணுமே செய்யாது. ஆனால அதை நோக்கி யாரும் லைட் அடிச்சா யானைக்கு கோபம் வரும். அது துதிக்கையால தூக்கி தரையில அடிச்சு காலை வச்சி மிதிச்சு கொன்னுரும். ஆனால நாம எதுவும் செய்யலைன்னா ஒண்ணுமே செய்யாது சாரே”.
இருவரும் அமைதியாக இருந்தார்கள்.
“நல்ல பயந்திய. நான் பாத்தேன். ஒண்ணுமட்டும் சாரே. உங்க பயத்தில அந்த பிள்ளையை நல்லா கட்டிப் பிடிச்சிகிட்டிய. அதை பார்த்தா சினிமா படத்தில எம்.ஜி.ஆரும் சரோஜா தேவி மாதிரியும் இருந்துச்சு சாரே”. என்றால் பாட்டி.
பாட்டி முகத்தில் புன்சிரிப்பு. செல்வி வெட்கத்தினால் கன்னம் சிவந்தாள்.
“சாரே நல்ல ஜோடி. கல்யாணம் பண்ணுங்க நல்லா இருப்பிய” என்றாள்.
அதன் பின் சிரித்துக்கொண்டே கம்பை ஊனியப்படி செல்ல ஆரம்பித்தாள்.
காளிமுத்தும் செல்வியும் ஒருவரை ஒருவர் பார்த்தப்படி நின்றனர். இருவரையும் அறியாமலேயே வெட்கம் வந்தது.
****
இருவரும் மலையை விட்டு ஊருக்கு வந்தனர்.
காரையார் பஸ்சில் வரும் போது இருவர் இருக்கும் சீட்டில் ஜோடியாக இருக்க செல்விக்கும் காளிமுத்துவுக்கும் வாய்ப்பு வந்தது. திருநெல்வேலி வரை இருவரும் ஜோடியாக இருந்தனர். இருவரும் ஒருவருக்கொருவர் தொட்டுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அது தப்பு தானே என மனதில் பட்டாலும். இருவரும் அதை ஏற்றுக்கொண்டனர்.” ம். இணையராகப் போகிறோம். இப்போது இணைந்து இருப்பதில் தவறில்லை” என நினைத்தனர்.
ஊருக்கு போய், பெற்றோரிடம் சொல்லி இருவரும் மணமுடிக்க வேண்டும் என்று திட்டமிட்டனர். உண்மைத்தான் இவரும் மனதும் சேவையை நோக்கியே செல்கிறது. இது இவர்களுக்கு முதல் பொருத்தம். இருவரும் மாநிறம், இது இரண்டாம் பொறுத்தம். செல்வியை விட காளிமுத்து இரண்டு இன்ஞ் வளர்ந்து இருப்பான் இது மூன்றாவது பொருத்தம். இவரும் அத்தை மகன் மாமன் மகள் உறவு. இது எல்லாவற்றிற்கும் மேலான பொருத்தம். இத்தனை பொறுத்தம் இருக்கும் போது திருமணம் தடையாப்பட போகிறது. எனவே ஆனந்தமாக இருந்தார்கள்.
ஆனால் விதி வேறு மாதிரி வேலை செய்தது.
திருநெல்வேலியில் இறங்கி , உள்ளூர் டவுண் பஸ்சில் ஊருக்கு வந்தனர். தாமிரபரணி ஆற்றில் குளித்து, இன்று இரவு தாய் தந்தையரோடு பேசிக்கொண்டிருக்கும் போதே தங்கள் திருமண பேச்சை எடுத்து விட வேண்டும் என நினைத்தார்கள். ஆனால் அதற்கு முன்பே இங்கு வேறு மாதிரியாக பிரச்சனை ஆரம்பித்தது.
இருவரும் பஸ் நிலையத்தில் இறங்கி நடக்கும் போதே அங்குள்ள சங்க மடம் பரபரப்பாக இருந்தது.
காளிமுத்துவின் நண்பர்கள் ரகுவும் மாரியப்பனும் வந்தனர். “ஏலே காளி நம்ம ஊரு ஆத்து மணலை அள்ள வந்துருக்கானுவலே. இன்னைக்கு ராத்திரி ஊர் கூட்டம் வைச்சி இருக்காவ”. பரபரப்பாக பேசினான் ரகு.
செல்வியை வீட்டுக்கு போகச் சொல்லிவிட்டு காளிமுத்து அவர்களிடம் பேசினான்.
“என்னலே சொல்லுத?”
“ஆமாலே ராத்திரி வந்துரு. நாம மணலை அள்ள உடக்கூடாது. மணல் அள்ளுனா நம்ம தாமிரபரணி சீரழிஞ்சு போயிருமுலே”. ரகுவுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.
“ஆமா. நாம சின்ன வயசுல இருந்து பாத்த ஆறுல்லாடே. மண்ணு எப்படியிருக்கும். சும்மா மலை மாரி குவிஞ்சி இல்லா கெடக்கும். தண்ணீ எப்படி வந்தாலும் சுத்தமாயிருமே. அதை போய் அள்ளப்போறனுவலே” மாரியப்பனுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.
“கோயில் கொடைக்கு ராத்திரி நேரம் பௌர்ணமி வெளிச்சத்துல மணலுல படுத்துகிடப்போமே அந்த ஆத்து மணலை அள்ளிட்டா முள்செடிலா முளைச்சிரும்”. ரகுவின் கவலை அதிகரித்தது.
“ராத்தரி பொண்டு புள்ளைய ஆத்துக்குள்ள போவ முடியுமா? எங்க பாத்தாலும் ஆத்து மணல் இருக்கும். தூரத்துல நடந்து வருதவிய எல்லோரும் நல்லா தெரிவாவ. மணல் அள்ளி புதர் மண்டிபோச்சின்னா, பொறுக்கிகளோட புகழிடமா இல்லை நம்ம ஆத்து கரை ஆயிரும்”.
“ஏற்கனவே சீமை கருவேல மரம் பல இடங்களுல ஊருக்காட்டுக்குள்ள வளந்து கிடக்கு. அதையே அழிக்க முடியாம கஷ்டப்படுதோம். இங்க மணலை அள்ளிட்டா இன்னும் நதி அழிஞ்சில்லா போயிரும்”. காளிமுத்து ரத்தம் கொதித்தது.
“சரி. நாம இன்னைக்கு ஊர் கூட்டம் போவும். விடக்கூடாது ஆத்து மணலை அள்ள விடக்கூடாது. ஆமாம். ஏடே நம்ம தேன்கூடு இளைஞர் மன்றத்தினர் கிட்ட ஒவ்வொரு ஆளா போயி பாரு. அவ்வளவு பேரையும் கூட்டத்துக்கு கூட்டிட்டு வா”. ரகு கட்டளையிட்டான்.
மூவரும் சுறுசுறுப்பாய் கிளம்பினர்.
“ஆத்து மணல் இல்லாட்டி ஆறு மட்டுமா? பாழு. இந்த ஊரும் பாழு. குடிக்க தண்ணீயும் பாழு. எல்லாமே பாழாயிரும்”. என்பது தெரியாமல் நாட்டாமை ஆற்று மணலை அள்ள திட்டமிட்டுக்கொண்டிருந்தார்.
****
இரவு நாட்டாம்மை தலைமையில் மக்கள் கூடினார்கள்.
“ இங்க பாருங்கடே. நம்ம ஊருல வர வர வெள்ளமை குறைஞ்சு போயிக்கிட்டே இருக்கு”.
“எப்படி வெள்ளாமை வெளையும். நம்ம நல்ல வெளையிற வெள்ளமை நிலத்தை செங்க சூளைக்கு வித்துப்புட்டோம். அவன் அதில உள்ள பனையை வெட்டி சூளையில போட்டு எரிக்கான். மணலை அள்ளி செங்க தயாரிக்கான். அன்னைக்கு நம்ம சேப்புக்கு பணம் கிடைச்சா போதுமுன்னு நினைச்சோம். இப்போ வெள்ளாமை விளையிலைன்னு வாயிலையும் வவுத்திலையும் அடிக்கோம். நல்ல ஞாயமுய்யா இது”. அங்கிருந்த பெரியவர் ஒருவர் துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு கூட்டத்தை விட்டு எழுந்தார்.
“இங்க பாரும் இப்போ எவனோ ஒரு காவாலை பய ஆத்துல மணல் அள்ளப்போறன். அவனுக்கு சப்போட்டா கூட்டத்தை கூட்டியிருக்கீறீரே. பொறவு எப்படி வெள்ளாமை வெளையும்”. இன்னொரு பெரிசு வெற்றிலை எச்சிலை புளிஞ் என துப்பி விட்டு பேசினார்.
“என்னடே எடுத்தவுடனே கரைச்சல் பண்ணுதீய. எதுனாலும் நம்ம ஊருல நாட்டாமை சாவன்னா மூன்னதான். அவா சொன்னா சரியாத்தாண்டே இருக்கும்”. இன்னொரு பெரிசு நாட்டாமைக்கு உதவியாக பேசினார்.
“எந்த காரியமுன்னாலும் மூவான்னா கானாவை கூப்பிடாம பேச முடியுமா?” இது இன்னொரு பெரிசு. நாட்டாமை எதிர் கோஷ்டியைக் கூட்டத்துக்கு அழைத்தார்.
“அட கூப்பிடும் அவாளை”. மற்றொரு பெரிசு மீசையை முறுக்கியப்படி சத்தம் கொடுத்தது.
“யோவ் நீர் என்ன குத்துக்கல்லு கணக்கா நிக்கீரு. கூப்பிடுவே” பக்கத்தில் சும்மா நின்ற பெரிசு ஒன்றை மற்றொரு பெரிசு உசுப்பேத்துது.
“தீயை வைச்சும் கொளுத்தும். உமக்கு என்னை இழுக்காம இருக்க முடியாதுவே”. அந்த பெரிசு மெதுவாக ஒதுங்கினார்.
“என்னடே சொல்லுதீய. இந்த எடக்குத்தானே வேண்டாம்முங்குது. நாட்டாமை பேசுனா கரெக்டாத்தான் இருக்குமுவே”. இது நாட்டாமை ஆதரவாளர்.
“பூடம் தெரியாம சாமி ஆடாதீயுடே. இங்க என்ன நடக்குதுன்னு உமக்கு தெரியாதாக்கும்”.
“என்னலே சொல்லுத”. அப்பாவியா கேட்டார் பெரிசு.
“தெரிஞ்சு கிட்டே நடிக்காதீயும்”.
சிரித்தார்.மனிசன் எல்லாவற்றையும் தெரிஞ்சு வச்சிக்கிட்டுத்தான் நக்கல் பண்ணுறாரு.
“சிரிப்பாணியை பாரு சிரிப்பாணியை ஆக்கங்கெட்ட மூதி. பேச வேண்டியதை முழுசா பேச விடுவுமே. இப்படி தெரிஞ்சும் தெரியாத மாரி நடிச்சிக்கிட்டு”. மற்றொரு பெரிசு அவர் மீது எரிந்து விழுந்தது.
“சோலியை பாருலே”.
கோபம் வந்தது. நாட்டாமையைப் பார்த்து அந்த பெருசு பேசினார்.
“நாட்டாமை பார்த்து’கிருங்க . கண்டமேனிக்கு ஏசுதான் .பொறவு ஒரு சாத்து சாத்தி புடுவேன்”.
நாட்டாமை அவனைப் பார்த்து சத்தம் போட்டர்.
“ஏதுக்குலே தொரண்டி இழுக்கிய. ஏலே இன்னும் பஞ்சாயத்தே ஆரம்பிக்கல. அதுக்குள்ள ஏமுல்லே இப்படி போட்டு சரவலை இழுக்கிய. சும்மா கிடங்க”.
கோபமாக பேசினார் நாட்டாமை.
“ நாட்டாமை என்ன சொல்லுதிய முதலுல நீங்க பேசுங்க”.
நாட்டாமை. “ஏலே இன்னும் கூட்டமே ஆரம்பிக்கலை ஆதுக்குள்ள ஆளு ஆளுக்கு பேச ஆரம்பிச்சிட்டியலே. நல்லா இருக்காடே. பொறவு எதுக்கு நான் குத்துகல்லாட்டம் இங்க இருக்கேன்”.
“நாட்டாமை. நீரு. பேசனும். எல்லாரையும் பேச விட்டுட்டு வேடிக்கை பாக்கீரு. பொறவு எப்படிவே சரிப்படும்”.
“ஆமாண்டே நான் வேடிக்கை பாக்கேன். ஒரு விசயத்தை பேசுனாத்தாண்டே முடிவுக்கு வரும். நீங்க தான் பேசவுட மாட்டுக்கியளே”. நாட்டாமைக்கு மேலும் கோபம் வந்தது.
“இங்க பாரும் நாட்டாமை. அரசல் புரசலா கேள்விபட்டேன். நீரு புல் டீடைலா சொல்லும்”. பெரிசு ஒன்று பஞ்சாயத்தை தெளிவாக்கி பேசினார்.
“சொல்லுதேன் கேளுங்கடே. ஏடே நம்ம ஊரு ஆத்து மணலை கலெக்டரு, ஏலம் விட்டுட்டாருடே. மேக்க எவனோ ஒருத்தன் ஏலம் எடுத்துட்டான். அவன் மணலை அள்ள வாரான்”.
“அவன் வந்தா நாம உடனே கொடுத்திற முடியுமா?” ரகு எழுத்து கூச்சலிட்டான்.
“ஏடே கலெக்டர் ஆடரை கொடுத்துட்டாரு. நாம என்ன செய்ய முடியும்”.
“ பொறுப்பில்லாம பேசாதேயும் நாட்டாமை. இது நம்ம மணலு. நம்ம ஊரைதாண்டி போவனும். நம்ம புள்ளைய அங்க இங்க ரோட்டில அலையும். இந்த சமயத்தில காரு கீரு ஏறி நம்ம புள்ளைய கதி அதோ கதியா ஆயி போயிடக்கூடாதே”. ரகுவுக்கு கோபம் தலைக்கேறியது.
“அது இருக்கட்டும். மணலை பறி கொடுத்துட்டு, வெத்து ஆத்தை வச்சி வேடிக்கை பாக்க சொல்லுதீயளோ”. காளி மனமுடைந்து போய் பேசினான்.
“ஏடே நம்ம அம்மன் கோயில் சுவர் இடிஞ்சு இடிஞ்சு போவுது. அதை கட்டி தாரேன்னு சொல்லியிருகான்டே” நாட்டாமை பொறுமையாக சொன்னார்.
“ஒரு சுவருக்காக மண்ணை புராவும் கொடுக்கணுமா?” ரகு கர்ஜித்தான்.
“ஏடே இப்ப வயக்காடு புராவும் தீய்ஞ்சு போய் கிடக்கு, வேலை இல்லை. நம்ம ஊரு பயலுவளுக்கு மணலை அள்ளி லாரியில போடுத வேலை தாறேன்னு சொல்லியிருக்கானுவ”.
“நாட்டாமை நாம என்ன வேலை இல்லாமலயா இருக்கோம். இவனுவ சம்பளம் தந்தா நாம பொழைக்கப்போறோம்”.
“எங்க ஊரு மண்ணு எங்க கண்ணு. நாங்க விட மாட்டோம். நாட்டாமை”. ரகு மேலும் வேகமாக கூச்சலிட்டான். அவனை சுற்றி தேன்கூடு இளைஞர் மன்றத்தில் கூடி நின்றனர்.
“ஏலே இங்க பாரு நாமலே ஒரு நேரத்து கொடை கொடுக்கவே பரபரக்க முழிக்கோம். அவன் கோயிலுக்குக் காம்பவுண்ட் சுவர் கட்டித்தாரேன்னு சொல்லுதான். சும்மா மல்லுகட்டிக்கிட்டு நின்று என்ன புரயோசனம். கவர்மெண்ட கதை. நாம உதவி பண்ணாட்டாலும் யார் உதவியை வச்சாவது ஜோலியை முடிச்சி புடுவானுவ. நாம கொஞ்சம் விட்டு கொடுத்து போவுமுடே”.
ஆனால் இளைஞர்கள் மூன்று பேரும் கேட்பதாக தெரியவில்லை.
“நாட்டாமை எங்க உயிர் போனாலும் போகுமே தவிர தாமிரபரணி ஆத்துல இருந்து 1 குத்து மணலை நாங்க இழக்க மாட்டோம்”.
“ஏம்முல்லே”.
“யோவ் கேரள மாநிலத்தை பாருவே. கனிமம் எதையும் இழக்கானுவலா பாரும். அவன் மாநிலத்தில இருந்து ஒரு பிடி மண்ணை கூட நீர் அள்ளிட்டு வர முடியாது. அப்படி இருக்கும் போது நாம மட்டும் அள்ளி அள்ளிக் கொடுத்து நதியை சீரழிக்கணுமோ?”
அமைதியாக இருந்தார் நாட்டாமை.
“முடிவா என்னத்தான்சொல்லுதிய?”
முடிவாக மூன்று பேரும் சொன்ன அந்த செய்தியை கேட்டு மக்களே அதிர்ந்து நின்றனர்.
( அந்த முடிவுதான் என்ன-?)


