முன்கதை சுருக்கம்
ராஜதுரையின் கிராமத்தில் எதிரிகள் தீ வைத்தனர். அடிக்கடி தீ வைக்கிறார்கள் இனிமேல் ஓலை குடிசை கட்டக்கூடாது என ராஜதுரையின் ஊர் மக்கள் பிடிவாதமாக இருக்கிறார்கள். இதனால் சொந்தமாக செங்கல் சூளை உருவாக்கும் முதலாளியை ஊருக்கு கூட்டிக்கொண்டு வருகிறார்கள். அனைவருக்கும் ஓடு வீடு கட்டிகொடுக்கும் முயற்சியில் ஈடுபடுகிறான் ராஜதுரை. அவனை மற்ற சமூகத்தினர் பொறாமையில் கொலை பலியில் சிக்க வைத்து விடுகிறார்கள். இதனால் தாமிரபரணி ஆற்றங்கரையில் இருந்து சிற்றாற்றங்கரைக்கு ஓடினான் ராஜத்துரை. அங்கே உள்ள அரண்மனையில் ராஜதுரையை வேலைக்கு சேர்த்து விட்டாள் அவள் அக்காள் கற்பகம். ஆனால் கற்பகம் மீது காம மோகம் கொண்ட தலைமை காவலன் அவள் கற்பை சூறையாட நாள் குறித்தான். அதை கேள்வி பட்ட ராஜத்துரை கொதித்தெழுந்தான். அந்த காவல்காரை தீர்த்துக்கட்ட முடிவுசெய்தான். அவனை தீர்த்து கட்ட அவன் மனைவியே ராஜத்துரைக்கு உதவுகிறாள்.
இனி.
60. சிட்டாய் பறந்த ராஜத்துரை
வீர நாச்சியார் எழுந்தாள்.
“கற்பகம். நீ.அழகா இருக்கே. நீ பனையேறி மனைவியா இருக்கிறதால உன்னோட அழகு யாருக்கும் தெரியலை. கலைஞ்ச உடையில இருந்தாலும் அழகாத்தான் இருக்க. பாவம் பயினி காய்க்கிறது. விறவு பொறுக்கிறது. இதனால காஞ்சி போய் கிடக்கிற. எங்களை மாதிரி நீ அரண்மனை பொன்னா இருந்து பட்டு சேலை கட்டி, நகை நட்டு நீயும் மகராணி மாதிரிதான் இருப்ப”.
பெரும் மூச்சு விட்டாள்.
“நாங்கள் அரண்மனை காவல் காரவிங்க. எங்க பொன்னை மட்டுமில்ல , எங்கள் அரண்மனை ஆட்சிக்குள்ள இருக்கிற எல்லா பொன்னையும், பெண்ணையும் காப்பாத்துற கடமை எம் புருசனுக்கு உண்டு. அதனாலத்தான் அவன் தலைமை காவலன். ஆனா அவன் அதை மறந்துட்டான். உன்னை காக்க வேண்டியவன் என் புருசன், ஆனால் அவன் மோசமா அலையுதான். நிறைய பொம்பளையல மோசம் பண்ணுயிருக்கான்னு இன்னைக்கு காலையிலத்தான் தெரிஞ்சுகிட்டேன். நாங்க வீர மறவர் சமுதாயம்தான். மல்லுக்கு நிக்கிற சமுதாயம் தான். ஆனா காவலுன்னு எங்க கிட்ட ஒப்படைச்சா, உயிரை கொடுத்தாவது அந்த இடத்தையையோ, எங்க கிட்ட ஒப்படைச்சவங்க மானத்தையோ காப்பாத்துவோம். இதுதான் நாங்க அரண்மனை மேலே எடுத்துக்கொண்ட சத்திய பிரணாமம். அதை மீறினா அவன் என் புருசனா இருந்தாலும் விட மாட்டோம். அதான் என் புருசனுக்கு பாயசத்துல விசத்தை வச்சி கொடுத்துட்டேன்”.
வீர நாச்சியார் சொல்றதை கேட்ட அனைவரும் அதிர்ந்தார்கள்.
“என்னம்மா சொல்றீய?”. கற்பகம் அதிர்ச்சியுடன் உறைந்து போனாள்.
“ஆமாம். அவன் கொட்டத்தை அடக்க, இதை விட்டா எனக்கு வேறே வழி தெரியலை”. வீர நாச்சியார் சொன்னதை கேட்டு வாயடைத்து போனாள் கற்பகம்.
“இனிமே அவனை காப்பாத்த முடியாது. இந்த விசம் மோசமான விசம். அவன் இனிமே உனக்கு மட்டுமல்ல. இந்த அரண்மனையில எந்த அபலை பெண்ணையும் மோசம் செய்ய மாட்டான்”. வீர நாச்சியாள் எழுந்தாள்.
“அம்மா” கற்பகம் வீர நாச்சியாரின் கைகளை பிடித்தாள்.
அவள் புன்சிரிப்போடு கற்பகத்தின் கையை பிடித்தாள். அதன் பின் வீட்டை விட்டு வெளியே வந்தாள்.
அந்த சமயம் ஒருவன் ஓடி வந்தான். “யம்மோ நாம மோசம் போயிட்டோம் நம்ம தலைமை காவலாளி வாயில முறை தள்ளி களத்து மேட்டுல மயங்கி விழுந்துட்டாரு. அவரை வயித்தியர் கிட்ட தூக்கிட்டு போனாம். அவரு நம்ம காவல் காரவிய செத்து போயிட்டாவன்னு சொல்லிட்டாவ”
கதறிய அவனை யாரும் கண்டு கொள்ளவில்லை.
குறிப்பாக வீர நாச்சியாருக்கு முகத்தில் எந்தவொரு மாற்றமும் தெரியவில்லை.
அங்கிருந்து சிற்றாங்கரையை நோக்கி நடந்தாள். சிற்றாற்றங்கரையில் இறங்கி நடு ஆற்றுக்குள் சென்றாள். அரண்மனையை நோக்கி நின்றாள். ஆவேசமா தலையில் இருந்து பூவை கலைந்து எரிந்தாள். தன் முகத்தில் உள்ள பொட்டை அழித்தாள். ஆற்றில் மூழ்கி தலை முழுகினாள். எழுந்தவள் முகத்தில் நிம்மதி. அவளுடைய பாவம் எல்லாம் கழிந்தது போல அங்கிருந்து அரண்மனை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
கற்பகம் எதுவுமே பேச முடியாமல் அமைதியாக நின்றாள். “இங்கே என்ன நடக்கிறது. அந்த கொடியவன் செத்து போயிட்டானா? பத்ரகாளி தாயி நீ நியாயம் வழங்கிட்டீயா?”
இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தான் ராஜத்துரை. எல்லாமே புதிதாக இருந்தது. என்ன நடக்கிறது என்பது புரியவே இல்லை.
கற்பகம் கேட்டாள். “என்ன ல ஆச்சி”.
“அக்கா நான் கொண்டு போன பாயசத்தை கொடுத்தேன் அந்த மனுசன் கீழே சாஞ்சிட்டான். அவனை மருத்துவருகிட்டே தூக்கிட்டு போறாவ”.
“அவன் செத்து போயிட்டாமு லே. இனிமே நம்ம யாருக்கும் அவனால பிரச்சனை இல்லை”. கற்பகம் உறுதியாக சொன்னாள். கற்பகத்தினையும், ஆற்றுக்குள் தலை மொழுகி விட்டு மறுகரையில் நடைபோட்டுக்கொண்டிருக்கும் வீரநாச்சியாரையும் மாறி மாறி பார்த்தான் ராஜத்துரை.
“ம். தப்பு பண்ணுறவன் எவனா இருந்தாலும் அவனுக்கு இது தான் கதி. அதுவும் கட்டின பெண்டாட்டியே ஒருத்தனுக்கு விஷம் வச்சி கொன்னுருக்கான்னா”. கற்பகம் முடிக்கும் போதே அவன் எவ்வளவு பெரிய கொடியவன் என்பது இந்த உலகத்திற்கே தெரிந்துவிட்டது.
அப்படியே ஒரு நிமிடம் நின்றவள். மீண்டும் பேச ஆரம்பித்தாள்.
“ஏலே தெரிஞ்சோ தெரியாமலேயோ நீ தான் பாயாசம் கொண்டு கொடுத்து இருக்க. உன் கை ரேகைத்தான் அதில இருக்கு. போலீசு வந்தா உன்னை சும்மா விட மாட்டாவ. இயற்கனவே நீ நம்ம ஊருல போலிசுக்கு பயந்து தான் இங்க வந்த. இங்கேயும் திரும்பவும் போலீசு கேசு. யய்யா. போயிருய்யா. இங்க இருந்து போயிருய்யா”.
கற்பகம் தம்பியை கட்டிப்பிடித்துக்குகொண்டு கதறி அழுதாள். ராஜத்துரைக்கும் கண்களில் கண்ணீர் வந்தது.
வண்டிக்கார தாத்தா ஓடியே வந்தார்.
“ஏலே ராஜத்துரை. காவல்காரன் வாயை பொழந்துட்டான். பாயசம் கொடுத்தது யாருன்னு தெரிஞ்சு போச்சு. அரண்மனை காவலர் எல்லாம் உன்னை தேடி வாராவ. ஏலேய் இங்க இருந்து ஓடிரு. உம் மேலே தான் போலீசுல கம்ளய்ன்ட் கொடுப்பாவ. அதுக்குள்ள ஓடிரு”.
கற்பகத்தை விட்டு பிரிந்தான் ராஜத்துரை.
“அக்கா. நான் ஓடத் தயார இருக்கேன். ஆனா எதுவும் தப்பு செய்யாமலேயே ஓடுதேனேன்னு நினைக்கும் போது தான் எனக்கு வருத்தமா இருக்கு”.
இருவரும் தேம்பி தேம்பி அழுந்தாள் கற்பகம்.
“எனக்கு ஒரு சந்தோசம். உன்னை காப்பாத்திட்டேன். அதுமட்டுமில்லை. இனிமே இங்க நம்ம பிள்ளைய யாருக்கும் பிரச்சனை வராது. தப்பு பண்ணுதவன் எவனா இருந்தாலும் தட்டிக்கேட்க பத்ரகாளி தாயி என்ன மாரி ஒரு ஆளை அனுப்பி வைப்பா”. தீர்க்கமாக சொன்னான் ராஜத்துரை.
வண்டிக்காரத்தாத்தா சொன்னார்.
“ஏலே ராஜத்துரை சீக்கிரம். கிளம்பு”
“தாத்தா என்னால எங்க அத்தானுக்கும் அக்காளுக்கும் பிரச்சனை வரும் போல தெரியுது. அதுதான் மனசுக்கு கஷ்டமாக இருக்கு . தயவு செஞ்சு அவியள பாத்துக்காங்க. எந்த இடத்திலும் கை விட்டுறாதீங்க ”.
“நான் பாத்திக்கிறேமுல்ல. நீ கிளம்பு.”
வண்டிக்கார தாத்தா ராஜத்துரை கை பிடித்து இழுத்து, அங்கிருந்து ஓடச்சொன்னார்.
“நான் வாறேக்கா”.
கற்பகம் காலில் விழுந்து வணங்கினான். வண்டிக்கார தாத்தாவை கட்டிப் புடித்தான். “தாத்தா ஒரு நாளுத்தான் உம்ம கூட இருந்தேன். நீர் பெரிய ஆளுவே. உம்மை ஒருத்தரும் ஜெயிக்க முடியாதுவே. நம்ம புள்ளையளை பாத்துகாரும்வே”.
எல்லோருடைய கண்களில் இருந்தும் கண்ணீர் வடிந்தது.
அழுத படியே தாத்தா பேசினார். “ஏலேய் ராஜத்துரை அரண்மனை ஆளுக ஒரு புறமும், போலிசு ஒரு புறமும் உன்னை தேட ஆரம்பிப்பாவ. அதுக்குள்ள இங்க இருந்து ஓடிரு. மெயின் ரோட்டு வழியா போவத. ஆத்துக்குள்ள கூடியே ஓடிரு.”
இந்த பக்கம் எல்லா ஊருமே தனக்கு புதுசு. எப்படி போவ. ஆத்து வழியே போனா பயமில்லை. ஓடிறலாம். அப்படியே எங்கயாவது மெயின்ரோடு வரும். அங்கிருந்து லாரியோ, எதுவோ பிடித்து ஓடி விடலாம். அவன் மனது சொன்னது.
ராஜத்துரை திடமான முடிவு எடுத்தான். “நல்லதே செஞ்சு இருக்கேன். என் அக்காளை காப்பாத்திட்டேன். நான் வெசம் கொடுக்கல. ஆனா பலி எம்மேலே விழுந்துட்டு. பாவம் அந்த வீர நாச்சியார். வீரப்பெண் அவளையும் காட்டிக் கொடுக்க வேண்டாம். அவளும் தவறை தட்டிக்கேட்கிற என்னை மாதிரி சகோதரித்தான். சாதி வேறேயா இருந்தாலும் மனசு சரித்தான் இருக்கு. பாராவாயில்லை. என் மக்களுக்கு இனிமே இந்த பகுதியில் இந்த சனியனால ஆபத்து இல்லை. இனிமே தைரியமா இந்த இடத்தை விட்டு போறேன்”.
மனதை திடப்படுத்தக்கொண்டு ஆற்றுக்குள் இறங்கினான். நதி போகும் போக்கில் தானும் நடக்க ஆரம்பித்தான். சூரியன் மேற்கே மறைத்தது. அந்த இருள் இவன் வாழ்க்கையிலும் சூழ ஆரம்பித்தது.
எங்கும் மணல்வெளி. நடுவில் ஓடிவரும் நதி. எந்த தடையும் இல்லை. பௌர்ணமி வெளிச்சம் வேறு. நீண்ட நெடு நெடுவென இருக்கும் ஆற்று மணல் எங்கேயும் மறைவு இல்லை. தண்ணீர் கரையிலேயே நடந்தான். சில இடங்களில் அணைக்கட்டு தென்பட்டது. அந்த இடங்களில் கரை வழியே ஏறினான். இரவு நேரத்தில் மிக வேகமாக நடந்தான். கால் போன போக்கில் நடந்தான். பல ஊர்களை கடந்தான். கங்கைகொண்டான் என்ற இடத்தில் ரயில்வே தண்டவாளம் குறுக்கே சென்றது. அதில் ஏறியவன். தண்டவாளம் வழியாக நடக்க ஆரம்பித்தான். இறுதியில் மணியாச்சி ரயில் நிலையம் வந்து சேர்ந்தான். அதிகாலையில் அந்த நிலையமே வெறிச்சோடி கிடந்தது. அங்கே ஒரு கூட்ஸ் ரயில் நின்று கொண்டிருந்தது. அதில் திறந்து கிடந்த பெட்டி ஒன்றின் உள்ளே போய் படுத்தான்.
அழுப்பில் அப்படியே தூங்கி போய் விட்டான். இறுதியில் அந்த ரயில் பெட்டி கிளம்பியது கூட தெரியாமல் தூங்கி விட்டான். அந்த பெட்டியோடு மறு நாள் இரவு சென்னை வந்து சேர்ந்தான் ராஜத்துரை. அதன் பின் ரயில் நிலையத்தினை விட்டு இறங்கி வெளியே வந்தான்.
சென்னையின் பரபரப்பு இவனுக்கு மிகவும் வித்தியாசமாக இருந்தது.
அமைதியான, அழகான கிராமத்தில் தாமிரபரணி கரை யில் வாழந்த இவனுக்கு இந்த சென்னை நகரமே புதிதாக இருந்தது. தள்ளுவண்டி, குதிரை வண்டி என தன்னை தாண்டிச் செல்லும் மக்களும் அவர்களின் பேச்சும் மிக வித்தியாசமாக இருந்தது.
அவர்களை பார்க்கும் போதே இவனுக்கு சந்தேசம் வந்தது-. “இவர்களோடு இணைந்து நம்மால் வாழ்க்கை நடத்த முடியுமா? நமது சொந்தங்கள், நமது உறவுகள் இவர்கள் அரவணைப்பில் தானே இதுவரை வாழ்ந்தோம். இனி அவர்கள் இல்லாமல் நாம் எப்படி தனித்து வாழப்போகிறோம். இனிமேலும் நம்மால் வாழ முடியுமா?” அழுகை முட்டிக்கொண்டிருந்தது.
நேற்று மதியம் சங்கரன்கோயிலில் சாப்பிட்டது. அதுவும் சரியாக சாப்பிட வில்லை. அதன் பின் ஓட்டம் நடை , தூக்கம் என இரண்டு நாள் இரவு, இரண்டு நாள் பகல் போய் விட்டது. இப்போதுதான் பசி மயக்கம் வருகிறது. கால்கள் பிண்ணுகிறது.
இனி என்ன செய்ய போகிறோம். கையில் பணமில்லை. அடுத்த வேளை சாப்பாட்டுக்கும் வழியில்லை. சென்னை சென்ரல் ரயில் நிலையம் அருகில் நின்று கொண்டிருக்கும் போது, பசி மயக்கம் ஏற்பட்டது.
அருகில் இருந்த குதிரை வண்டியில் சாய்ந்த படியே மயங்கி விழுந்தான் ராஜத்துரை.
அதை பார்த்த குதிரை வண்டிகாரர் துடித்து துடித்து போனார். அவன் மயக்கத்துக்கு காரணம் பசித்தான் என்பது நன்றாக புரிந்தது.
அருகில் உள்ள கடையில் இருந்து சாம்பார் சாதம் வாங்கி கொடுத்தார். அதன் பின் குடிக்க தண்ணீர் கொடுத்தார்.
சாப்பிட்டு பசி மயக்கம் தீர்ந்த ராஜத்துரை எழுந்தான் “நீ யார்?” என்று குதிரை வண்டி காரர் கேட்டார்.
ராஜத்துரை பதில் சொல்லவில்லை.
“நீ என்ன ஊமையா? ஏன் பதில் சொல்ல மாட்டேன் கிறே” வண்டிக்காரன் எவ்வளவோ கேட்டும் பதில் இல்லை.
அந்த வேளையில் தான் மிகவும் டிப்டாப்டாக ஒரு பெரியவர் வந்து நின்றார்.
என்னய்யா இங்க நடக்குது.
“ஒண்ணுமில்லை அண்ணாத்தே. இவன் சாப்பிடாம கொள்ளாம இருந்து மயங்கி சாஞ்சிட்டான் அண்ணாத்தே. சோறு துன்ன வாங்கி கொடுத்தேன். துன்னான். ஆனா யாருன்னு கேட்டா பதில் பேசமாட்டுக்கான் அண்ணாத்தே” வண்டிக்காரன் மெட்ராஸ் பாஷையில் பேசினான்.
அந்த பெரியவர் இவனை வைத்த கண் வாங்காமல் பார்த்தார். அழகாய் இருக்கிறான். களைந்த முடி, சோர்வான தேகம், சோர்ந்த முகம், எதையோ இழந்திருக்கிறான். எதை இழந்தான். ஒன்றும் புரியவில்லை. ஆனால் இவனை கூட்டிச்சென்றால் நமக்கு உதவியாக இருப்பான் என்று அவர் உள் மனம் சொன்னது.
“தம்பி. என் கூட வாறீயா” என கேட்டார்.
அவர் முகத்தினை பார்த்தவுடனேயே இவனுக்கு பிடித்து போய்விட்டது.
“சரி. அய்யா”.
“ம். என் கூட வா. என்றார். அவருடைய பெட்டி படுக்கைகளை தூக்கி கொண்டு அதே குதிரைவண்டியில் ஏறினார்கள். குதிரை வண்டிகாரர் இவர்களை சுமந்து கொண்டு சென்னை மாநகரில் முக்கிய வீதியில் உள்ள அவரது வீட்டில் கொண்டு விட்டான்.
அதன் பின் அவருக்கு கூலியை கொடுத்து விட்டு, அவருடைய லக்கேஸை தூக்கி கொண்டு பின்னாலலே நடந்தான் ராஜத்துரை.
மிகப்பெரிய அரண்மனை போலஇருந்தது அந்த வீடு. அந்த வீட்டுக்குள் இவர்கள் வந்த வுடன் ஓடியே வந்து வேலைக்காரர்கள் பெட்டியை வாங்கிக்கொண்டு ஒடினார்கள். இவன் பெட்டியை கொடுத்து விட்டு, எஜமான் பின்னால் குட்டி போட்ட நாய் போல நடந்தான்.
என்ன உலகம் இது. எப்படியெல்லாம் தனது போக்கை மாற்றுகிறது. மனிதனின் வாழ்க்கையை புரட்டிப்போடுகிறது.
சொந்த ஊரில் கொடிகட்டி பறந்தவன்.
தனது சமூக முன்னேற்றத்துக்காக குரல் கொடுத்தவன்.
சிறிய வயதிலேயே சிலம்பு கலையை கற்று ஆசான் ஆனவன். அதை நல்ல வழியில் பயன்படுத்தியவன். வர்மம், வையித்தியம் தெரிந்தவன். தன்னோட சொந்த உறவுகளுக்கு எல்லாம் இலவசமாக வைத்தியம் பார்த்தவன். எதிரியாக இருந்தாலும் அவர்கள் மீது கருணை காட்டியவன்.
தன் இனம். தன் மக்கள் .தன் வளர்ச்சி என போராடியவன்.
அவர்களுக்கு இடம் வேண்டும் வீடு வேண்டும் என போராடி வெற்றியும் பெற்றவன். குடிசை வீட்டிலேயே இருந்த தன் மக்களுக்கு கான்கிரிட் வீடு கட்டிக்கொடுத்தவன்.
இதற்காக தனது வாழ்க்கை , வாலிபம் என எல்லா வற்றையும் தொலைத்தவன். இதோ அனாதையாக ஒரு வேளை சோற்றக்காக யாரோ பெயர் ஊர் தெரியாத ஒரு பெரிய மனுசன் பின்னால் தன் வாலை சுருட்டி வைத்துக்கொண்டு செல்கிறான்.
தனது இன மக்களுக்கு நல்லது செய்கிறான் என்கிற ஒரே காரணத்துக்காக கொலை பழி சுமந்தப்பட்டு அங்கிருந்து விரட்டப்பட்டான்.
தப்பித்து மற்றொரு இடத்தில் இது தான் இனி வாழக்கை என வாழத்துடித்தவனுக்கு அங்கேயும் பிரச்சனை.
சகோதரி மானத்தை காப்பாற்ற மற்றொரு போராட்டம் போராடினான். அங்கேயும் கஷ்டப்பட்டு, அங்குள்ள மக்களின் துயரத்தினை துடைக்க பாடு பட்டான்.
ஓரே நாளில், மற்றொரு கொலைப்பழி இவன் மீது விழுகிறது. இந்த தனது பெண் இனத்தினை காக்க இந்த பழியையும் தானே சுமக்கிறான். அதன் பின்னும் ஓட்டம். ஓட்டம். ஓட ஆரம்பித்து விட்டான்.
நடையாய் நடை நடந்து, போலிசிடமிருந்தும், எதிரியிடமிருந்து தப்பித்து இன்று சென்னை பட்டனத்தில் யாரோ ஒருவர் அவரிடம் பெயர் கேட்காமல் , அட்ரஸ் கேட்காமல் தன் வயிறு சோற்றுக்காக நடையாய் நடை நடந்து கொண்டிருக்கிறான்.
யோசிக்கிறான். இனிமேல் எனது பயணம் இனி எப்படி தொடரும் . என் வாழ்க்கை எப்படி இருக்கும். என் எதிர்காலம் நிலை என்ன?
இப்போது ராஜத்துரைக்கு அழுகை வரவில்லை. மனதில் ஒரு இறுக்கம் ஏற்பட்டது. எல்லாம நன்மைக்கே . எல்லாமே நல்லதே நடக்கிறது.
ம். விதி யாரை விட்டது.
ஆனால் ஒன்றை மட்டும் தீர்க்கமாக முடிவு செய்தான். எந்த காரணத்தினை கொண்டும் நேற்று வரை நடந்த சம்பவங்களை இனி யாரிடமும் சொல்லக்கூடாது.
அதில் முடிவாய் இருந்தான்.
ஆம். இன்றிலிருந்து ராஜத்துரை தனிப்பிறவி. ஆனால் விதி யாரை விட்டது.
******
தென்காசி சர்க்கிள் இன்ஸ்பெக்டராக அன்று தான் ஒருவர் பொறுப்பேற்று இருந்தார்.
வந்த நாளிலே முதல் கொலை கேஸ். அதுவும் வித்தியாசமான கேஸ்.
பொறுப்புக்கு வந்த சர்க்கிள் இன்ஸ்பெக்டர் வேறு யாருமல்ல. ஸ்ரீவைகுண்டம் சர்க்கிளாக இருந்த தாணுலிங்க பிள்ளை தான்.
அரண்மனையில் தீடீர் சாவு. எல்லா இடத்திலும் பரபரப்பானது. இதனால் காவல் நிலையமும் பரபரப்பானது.
தென்காசியில் இருந்து சர்க்கிள் இன்ஸ்பெக்டர் போலீஸ் படையுடன் அரண்மனைக்கு கிளம்பி வந்தார்.
அவரது ஜீப் அரண்மனை வளகாத்துக்குள் நுழைந்தது.
ஏட்டையா ஓடி வந்த அவரை பார்த்தார்.
கண்ணால் ஏறிட்டு சர்க்கிள் பார்க்கும்போதே அவருக்கு புரிந்தது “என்ன நடந்தது?” என்று கேட்கிறார்.
“அய்யா. பாயசம் குடிச்சு இருக்காரு. அது குடிச்சவுடன் வாயில நுரை நுரையா தள்ளி செத்து போயிட்டாரு”.
“ம்”. இறங்கி பாடி இருக்கும் இடத்தினை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
“வீட்டில தானா இல்லை”. ஆச்சரியமாக கேட்டார்.
“இல்லை அய்யா களத்து மேட்டில”
“களத்து மேட்டுல எதுக்கு பாயசம் கொடுத்தாங்க”.
“தெரியலை அய்யா-. யாரோ புதுசா ஒருத்தன் வேலைக்கு சேர்ந்தானாம்?”.
“புதுசா சேர்ந்தவன் எதுக்கும் உடனே பாயசம் கொடுக்கிறான். யாரு அவன்”.
“பேரு ராஜத்துரையாம்”.
“ராஜத்துரையா. எங்கோ கேள்வி பட்ட பேரு மாதிரி தெரியுது”. மனதுக்குள் நினைத்தார். கடந்த 10 நாள்களுக்குள் அடிக்கடி கேள்வி பட்ட பெயர் போல தெரியுது.
“சரி என்ன நடந்ததாம்.” ஏட்டையா கதை சொல்ல ஆரம்பித்தார்.
“அய்யா. அவன் தான் பாயசம் கொடுத்து இருக்கான். அதை வாங்கி இந்த காவல் காரன் குடிச்சு இருக்கான். அதுவும் இவன் தான் அரண்மனை தலைமை காவலன். குடிச்ச உடனே வாயில நுரைத் தள்ளியிருக்கு. வயித்தியரை போய் பாக்கும் முன்பு செத்து போயிட்டாரு”.
“யார் அந்த ராஜத்துரையாம்?”.
“யாரோ கற்பகமுன்னு ஒரு பனையேறி குடும்பம் இருக்கு. அவுகளோ தம்பி”.
“சொந்த ஊரு இதுதானா?”
“இல்லைய்யா. அவுக ஏதோ ஸ்ரீவைகுண்டம் பக்கமுன்னு சொன்னாங்க. பனையேற இந்த பக்கம் வந்து இருக்காங்க.”
சர்க்கிள் இன்ஸ்பெக்டருக்கு பொறி தட்டியது.
“ஸ்ரீவைகுண்டம் பக்கமா? பேரு என்ன சொன்ன”. யோசித்தப்படி கேட்டார்.
“ராஜத்துரை”.
“அவன் தான் இவனா?” சந்தேகம் வலுத்தது.
“இவன் எத்தனை வருசமா இந்த ஊருல இருக்கான்”.
“இப்போ 3 நாள் தான் ஆவுது”.
“3 நாள்”. சர்க்கிள் தாணுலிங்கம் தலை நிமிர்ந்தார்.
“நிச்சயம் அவனாத்தான் இருப்பானோ?. மூனு நாளுக்குள்ள அவனுக்கு என்ன பகை” அவன் முகம் பிரகாசமானது.
நிச்சயம் இவன் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கிராமத்தில் கொலை செய்து விட்டு தப்பித்து வந்தவனாகத்தான் இருப்பான்.
அவர் சந்தேகம் வலுத்துக்கொண்டே இருக்கிறது.
“அவன் யார்?. அவன் மனநோயாளியா?. போகும் இடத்தில் எல்லாம் அங்குள்ள காவல் காரர்களை கொலை செய்கிறான். அவனுக்கு என்னத்தான் வேண்டும்?. எதற்காக கொலை செய்கிறான்?”. பலவேறாக சர்க்கிள் தாணுலிங்க பிள்ளையின் எண்ணம் ஓடியது.
“ஏட்டையா. அவனை பத்தி வேறே என்ன தகவல் தெரியும்”.
“அவள் அக்கா கற்பகம் விடிலி காட்டில் இருக்கிறாள் . அவளிடம் கேட்டாள் எல்லாம் தெரியும்”.
“அவள் கள்ளு பதனீர் விற்பாளா?”
“இல்லை அய்யா. அரண்மனையில் வைத்தியம் பார்த்து இருக்கிறாள். மிகவும் நேர்மையானவள். அவளை தேடி சென்றால் யாரா இருந்தாலும் தர்ம பதனீர்தான் கொடுப்பாளாம். அந்த அளவுக்கு நல்ல பெயரை சம்பாதித்து வைத்திருக்கிறாள்”.
“சரி சரி. அவளை விசாரிக்க வேண்டாம். விட்டு விடு”.
சர்க்கிள் காவல்காரன் உடலை பார்க்க சென்றார். அருகில் அவனின் மனைவி வீர நாச்சியார் இருந்தாள். கண்ணீல் ஒரு சொட்டு கண்ணீர் கூட வரவில்லை. அவளை பார்க்கும் போதே சர்க்கிளுக்கு சந்தேகமாகத்தான் இருந்தது. “புருசன் செத்து கிடக்கிறான். கல்நெஞ்சக்காரியா? ஒரு சொட்டு கண்ணீர் கூட விடாமல் இருக்கிறாள்” வெளியே வந்தார்.
“சரி. காவல்காரனை அடக்கம் பண்ணச்சொல்லு. மற்றதை நாம பார்த்துக்கலாம்”.
சர்க்கிள் தலையசைக்க இறுதி சடங்குக்கான வேலை வேகமாக நடந்தது.
அரண்மனை காவல்காரர்களை கூப்பிட்டார். “இங்க பாருங்க கொலை காரனை நாங்க பாத்துக்கிறோம். நீங்க நடக்க வேண்டிய காரியங்களை பாருங்க” என கூறிவிட்டு ஜீப் & ல் போய் அமர்ந்தார்.
“யோவ் ஏட்டையா. செத்தவன் ரொம்ப நல்லவனா?”
“இல்லை அய்யா. பெரிய பொம்பளை பொருக்கி”.
“ம்”. யோசித்தார் சர்க்கிள் இன்ஸ்பெக்டர். “அந்த வகையில இவனுக்கும் அந்த பயலுக்கும் ஏதாவது மோட்டிவ் இருந்துச்சா?”
“தெரியலைய்யா. விசாரிக்கணும்”.
“விசாரிச்சிட்டு வந்து என்ன ஏதுன்னு சொல்லும்”
“சரிங்கய்யா” ஏட்டை சல்யூட் அடிக்க, ஜுப் கிளம்பியது.
“கடைசியில ஸ்ரீவைகுண்டம் பக்கம் பனையேறி குடும்பத்துல இருந்து காவல்காரனை கொன்னுட்டு ஓடி வந்தவன் பேரும் ராஜத்துரைத்தான். இங்கேயும் பனையேறி குடும்பத்துல இருந்து ஒரு காவல்காரனுக்கு பாயசம் கொடுத்து கொன்னுருக்கிறான். அவன் பெயரும் ராஜத்துரைத்தான். அங்கேயும் செத்தவன் மேலே நிறைய குறை இருந்தது. கொலை பண்ணினவன் மேலே தப்பே இல்லாமல் இருந்தது. இங்கேயும் அதுபோலவே இருக்குதே. எங்கேயோ இடிக்குதே”. சர்க்கிளுக்கு தென்காசியில் பொருப்பேற்ற உடனே முதல் கேஸே சாவலாக அமைந்து இருந்தது.
ஜுப்பை நிறுத்தினார். ஏட்டையா ஓடியே வந்தார்.
“யோவ் ஏட்டையா அவன் போட்டோ எதுவும் கிடைக்குமா?”
“இல்லை அய்யா. வேலைக்கு சேர்ந்து 2 நாள் தான் ஆவுது. அரண்மனையில இராஜாவே ஆடிக்கு ஒருக்க அமாவாசைக்கு ஒருக்கத்தான் படம் எடுப்பாங்க. இவுகளுக்கு யார் படம் எடுக்க போறாங்க” ஏட்டையா அலுப்புடன் சொன்னார்.
திரும்பவும் யோசனை செய்தார் சர்க்கிள் இன்ஸ்பெக்டர். தனது ஜீப்பில் தான் வைத்திருந்த ஒரு பைல்லில், ராஜத்துரையை வரைந்த படத்தினை வைத்து இருந்தார். ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து வரும்போது, இதுவும் நம்மிடம் இருக்கட்டுமே என எடுத்து வந்திருந்தார். அந்த படத்தினை இங்கு இருப்பவர்களிடம் காண்பித்தால் ஏதாவது தகவல் கிடைக்கும்.
யோசித்தார் சர்க்கிள்.
ஜீப்பில் இருந்து அந்த பைலை எடுத்தார். அதிலிருந்த வரைபடத்தினை எடுத்தார்.
“யோவ் ஏட்டு, காவலன் கூட அந்த சமயத்தில இருந்தவன் எவனெல்லாமுன்னு கேட்டு அவனுவ புறாபேரையும் கூப்பிடும் வே”.
ஜுப்பை விட்டு கீழே இறங்கி வந்தார் சர்க்கிள் இன்ஸ்பெக்டர்.
பத்து நிமிடத்தில் அரண்மனை காவலாளிகள் அனைவரும் அணி வகுத்து நின்றனர்.
தலைமை காவலாளி உடன் அன்று இருந்த இருவரை தனியாக நிறுத்தி வைக்கச்சொன்னார் சர்க்கிள் இன்ஸ்பெக்டர்.
அவ்விடத்தில் வண்டிக்காரத் தாத்தாவும் வந்திருந்தார். அவர் மனது சொன்னது. பேசாமல் சர்கிள் இன்ஸ்பெக்டரிடம் போய் “அவன் பொண்டாட்டி வீர நாச்சியார்தான் விசம் வைச்சான்னு சொல்லிறலாமா?” என நினைத்தார்.
ஆனால் யோசித்தார். “பல பிரச்சனை வரும். விசாரணையில் நம்மையும் பாடாய் படுத்தி விடுவார்கள். பாவம் அந்த நாச்சியார் அம்மா வீட்டில் சந்தோசமாக இருக்கட்டும். அவங்களை காட்டிக்கொடுக்க வேண்டாம்”. எனவே அமைதியாக இருந்தார்.
அப்படியே ஒவ்வொருவர் முகத்தினை பார்த்தப்படியே சர்க்கிள் தாணுலிங்க பிள்ளை நடந்துகொண்டே இருந்தார்.
“அந்த பாயசம் கொடுத்தவன் யார்? எந்த ஊர். அவன் இதில் இருக்கிறானா?”
“இல்லை எஜமான்”. அதில் ஒரு முறுக்கு மீசை காவல்காரன் பதில் சொன்னான்.
“ம். அவனை அடையாளம் காட்ட முடியுமா?”
“கண்டிப்பா நேரில் வந்தா காட்டுவேன்”
ஒரு காவலன் உறுதியாக சொன்னான்.
ராஜத்துரை வரைப்படத்தினை எடுத்து வந்தார் சர்க்கிள். அவனிடம் அந்த படத்தினை காட்டினார். “இந்தபடத்தில் இருப்பவன் அவன் தானா?” என கேட்டார்.
அவன் அந்த படத்தினை கூர்ந்து கவனித்தான்.
அதன் பின் தீர்க்கமாக சொன்னான்.
“ஆமாம் இவன் தான் எஜமான்”.
மறுநிமிடம் போலிஸ் பரபரத்தது. பத்திரிக்கைக்ககு செய்தி பறந்தது. ராஜத்துரை மீது எப்.ஐ.ஆர் போட்டார்கள். அவனை வலை வீசி தேடி ஆரம்பித்தார்கள்.
ஸ்ரீவைகுண்டம் அருகே காவலாளியை கொலை செய்து விட்டு தப்பி ஓடியவன். வீரகேரளம் புதூரில் மற்றொரு காவலாளியை கொலை செய்து விட்டு மீண்டும் தப்பி ஓட்டம். போலிசார் வலை வீச்சு என மறுநாள் பத்திரிக்கையில் அவன் படத்துடன் செய்தி வெளி வந்தது.
இரவோடு இரவாக அவன் தப்பித்து ஓடி விடக்கூடாது. ஆகவே போலிசார் தென்காசி, சங்கரன்கோயில், ஆலங்குளம், ஊத்துமலை உள்பட பல பகுதியில் போலீஸை குவித்தனர். அவன் தப்பித்து ஓடி விடக்கூடாது என போலீஸ் காவல் போட்டனர்.
மறுநாள் காலையிலேயே தென்காசி காவல் நிலையம் பரபரப்பானது.
இரண்டு கொலை வழக்கையும் போலிசார் ஒன்றாக சேர்த்து கொலையாளியை தேடி ஆரம்பித்தனர். அவனை எங்கு கண்டாலும் உடனே பிடிக்க வேண்டும் என்று தகவல் தெரிவித்தனர். காவல் நிலையத்தில் உயர் அதிகாரிகள் வந்து சேர்ந்தனர். அரண்மனையின் காவல்காரனையே கொன்று விட்டான். அவன் நிச்சயம் மிகப்பெரிய கொடியவனாகத்தான் இருப்பான்.
ஒன்றுக்கு இரண்டு கொலை நடத்திவிட்டான். அதுவும் ஓரே வாரத்தில் மிகப்பெரிய கொடியவனாக இருப்பான். இல்லை என்றால் சைக்கோவாக இருப்பான். ஒரு வேளை அவனை சுட்டு பிடித்து விடலாமா? என ஆலோசனை செய்தார்கள்.
சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சொன்னார். “இவனை விசாரித்து பார்த்தால் நல்லவனாக தெரிகிறான். இவன் கொலை செய்தவர்கள் யாரும் யோக்கியர்கள் அல்ல?”
“அப்படியென்றால் போலிசில் சரண் அடைந்து விட வேண்டியது தானே”.
“அது தான் புரியவில்லை. ஏன் ஓடுகிறான். எங்கே ஓடுகிறான். இவனுக்கு பின்புறத்தில் இருந்து வழி நடத்துவது யாரு?. அவன் மிகப்பெரிய தீவிரவாதியாக இருப்பானோ?”
எல்லோரும் சேர்ந்து முடிவு செய்தார்கள்.
இவன் திட்டமிட்டுத்தான் கொலை செய்கிறான். “இவனை எங்கே கண்டாலும் சுட்டு பிடிக்கச் சொல்லுங்கள்”. என்றனர்.
ஆனால் ராஜத்துரைத்தான் தப்பித்து சென்னை வந்து விட்டானே. இந்த விவரம் போலிசாருக்கு எங்கே தெரியபோகிறது.
அவன் மீது கொலை வழக்கு பதிவு செய்ததோடு மட்டுமல்லாமல், எங்கு கண்டாலும் சுட உத்தரவு இட்டார்கள். ராஜத்துரையை கண்டு பிடித்து தருவோருக்கு 5 ஆயிரம் ரூபாய் பரிசு எனவும் அறிவிக்கப்பட்டது.
மறுநாள்.
முக்கிய வீதிகளில் ராஜத்துரை போட்டோவுடன் பரிசு தொகை அறிவிக்கப்பட்ட போஸ்டர் ஓட்டப்பட்டது.
வண்டிக்கார தாத்தா ஓடிப்போய் கற்பகத்திடம் கூறினார். அவள் கதறி அழுதாள்.
“அய்யோ. அவன் என்னை தேடி வந்தது தப்பா? அவனை நானே பிடித்து படுகுழியில் தள்ளி விட்டேனே. நான் அனாதை என்று என்னிடம் உறவு தேடி வந்தானே. திரும்பவும் அவனை நான் அனாதை ஆக்கி புட்டேனே”.
தனது தலையில் தானே அடித்து அழுதாள்.
“என்ன செய்வது. அவனை எப்படி காப்பாற்ற?. நாம என்ன பெரிய குடும்பமா? இல்லை பணம் படைச்ச குடும்பமா? ஓடிப்போய் நாங்க ஒண்ணும் தப்பு பண்ணலைன்னு சொல்லி நிருப்பிக்க”
தாத்தா சொன்னார், “யம்மா பாவப்பட்ட பனையேறிக உடலை மூலதனமா வச்சி தொழில் செய்தாவ. இவுகளுக்கு பணத்தை சேக்கவும் தெரியலை . பாழப்போன இந்த உலகத்தில எதித்து நின்னு போராடவும் தெரியலை” என அலுத்துக்கொண்டார். அவர் கண்களிலும் நீர் வடிந்தது.
இருவரும் என்ன செய்யவென்றே தெரியாமல் அழுதுதான் தீர்த்தார்கள்.
போலிஸ் ராஜத்துரையை பிடிக்க பல்வேறு வகைகளில் திட்டமிட்டனர்.
“ஏட்டையா. இந்த சாணப்பயலுவ, இங்க இருந்து தப்பிக்கணுமுன்னா இரண்டு வழிதான் இருக்கு. ஒண்ணு பம்பாயிக்கு போவனுவ . அங்கே போய் தென்னங் கள்ளு இறங்கி பொழைப்பை நடத்துவானுவ. அதனால இரண்டு போலிசை பம்பாயிக்கு மாறுவேசத்துல அனுப்பி கண்காணிங்க. இன்னொரு வழி தோணியில குலசேகரபட்டினத்தில இருந்து சுலோனுக்கு போவனுவ. அங்கேயும் சொல்லி வையுங்க. அப்படியே கடற்படை போலிசுக்கிட்டேயும் சொல்லி வையுங்க. திருநெல்வேலியில இருந்து ரயில் வழியா தனுஷ்கோடிபோய் அங்கிருந்து கப்பல் வழியா சிலோன் போயிருவானுவ. அந்த கப்பலையும் கண்காணிங்க”.
மிகப்பெரிய போலீஸ் தேடுதல் ராஜத்துரையை நோக்கி முடுக்கி விடப்பட்டது.
பாவம் செய்யாத கொலைகள் இரண்டுக்காகவும், அந்த மண்ணின் மைந்தன். இந்த மண்ணில் இருந்து அனாதையாக துறத்தப்பட்டு விட்டான்.
******
ராஜத்துரையை கூட்டிக்கொண்டு வந்தவர் சாதரணமானவர் அல்ல அவர் பெயர் சுவாமி தாஸ். இவர் இளையரசனேந்தல் ஊரைச்சேர்ந்தவர். ஜமீன்தாரின் உறவுக்காரர். ஆனால் மிகவும் படித்தவர். சிறுவயதிலேய கிறிஸ்தவ மதத்தினை தழுவினார்.
அதோடு மட்டுமல்லாமல் இளையரசனேந்தலிலும் ஒரு கிறிஸ்தவ ஆலயத்தினை துவங்கினார். கிறிஸ்தவ பணி செய்த காரணத்தினால் விக்டோரியா மாகராணி இவருக்கு ஏராளமான நிலபுலன்களை வழங்கினார். கோவில் பட்டியில் இவருக்கு மிக அதிகமான இருக்கிறது.
தேனி அருகே உள்ள போடியில் எஸ்ட்டேட் ஒன்றை விக்டோரியா மகராணி கொடுத்திருக்கிறார். அதை பராமரிக்க மலை அடிவாரத்தில் உள்ள ஒரு டவுணை அமைத்து கொடுத்துள்ளார்கள். பழனியிலும் இவருக்கு பல இடங்கள் இருக்கிறது.
கிட்ட தட்ட குட்டி ஜமீன்தார் போலவே வாழ்ந்து வந்தார். அடிக்கடி இவர் வெளிநாட்டுக்கு செல்வது வழக்கம். விக்டோரியா மகராணி யோடு தொடர்ப்பு இருந்த காரணத்தினால் இங்கிலாந்து செல்வதையும் வழக்கமாக கொண்டிருநதார்.
சுவாமி தாஸ் ஏற்கனவே ஜமீன் குடும்பம். கம்பீரமான தோற்றம். நல்ல மாம்பழ கலர். நெடுநெடுவென நீண்ட உயரம். திரண்ட தோள்கள். அகன்ற மார்பு. எதிரில் இருப்பவர்கள் கவர்ந்திழுக்கும் கண்கள். உருண்ட கண்ணுக்கு மேலே அடர்ந்த இமை முடிகள். கன்னத்தில் குழி. அதோடு மட்டுமல்லாமல் அவருக்கு நீண்ட தலை முடி. அந்த தலைமுடியை பராமரிப்பதே அவருக்கு கை வந்த கலை. பெண்கள் எப்படி தலை முடியை பராமரிப்பார்களோ, அதை விட ஒரு படி மேலே போய் பராமரித்து வருகிறார். அவரின் உதடுகள் ஆங்கிலம் பேசும்போதே வித்தியாசமாக இருக்கும். அவருடைய உடை, நடை, பாவனை எல்லாமே மேலை நாட்டவர்களை விட ஒரு படி மேலே இருக்கும். இதுபோன்ற அழகான ஆண் மகனை யார் தான் மணக்க ஆசைப்படாமல் இருப்பார்கள்.
லண்டனின் இருக்கும் போது இவரின் அழகை கண்ட மேல்நாட்டு பெண் ஒருவர் சுவாமி தாஸை தீவிரமாக காதலித்து உள்ளார். தனது காதலை வெட்கத்தினை விட்டு அவரிடம் நேரிலேயே கூறியும் விட்டார்.
அதை ஏற்க மறுத்து விட்டார் சுவாமி தாஸ் நாயுடு. ‘ஏன் எனக்கு அழகு இல்லையா அறிவில்லையா என்னை ஏன் மணக்க மறுக்கீறிர்கள்’ என்று அந்த மேலை நாட்டு பெண் கேட்டார். அப்போது, ‘தாயே உன் கலாச்சாரம் வேறு. எங்கள் இந்திய கலாச்சாரம் வேறு. இந்த இரண்டு கலாச்சாரத்தினை ஒன்றாக்கி விட முடியாது. எனவே உனது காதலை மறந்து விடு’ என்றார்.
‘அப்படியென்றால் உங்களை மறக்க முடியாத அளவுக்கு எனக்கு ஒரு பரிசு தாருங்கள்’ என்றார் அந்த மேலை நாட்டு பெண்.
‘அப்படியென்ன பரிசு. அதையும் நீயே கேட்டு விடு’ என்றார் சுவாமி தாஸ் நாயுடு.
அந்த பரிசு என்ன தெரியுமா? தெரிந்தால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.
( முத்துகிளி தொடர்ந்து கூவுவாள்)
நன்றி நன்றி நன்றி
சான்றோர் மலர் வாசகர்களுக்கு நன்றி. கடந்த 5 வருடகாலமாக முத்துகிளி தொடருக்கு ஆதரவு அளித்து வருகீறிர்கள். நீங்கள் தரும் ஆதரவு எனக்கு மேலும் மேலும் உற்சாகத்தினை தருகிறது. முத்துகிளியின் முதல் பாகத்தினை சருகு என்ற பெயரிலும், இரண்டாம் பாகத்தினை தீநுண்மி எனும் பெயரிலும் இரண்டு நாவலாக உருவாக்கியுள்ளேன். விரைவில் அந்த நாவல்கள் உங்கள் கைகளில் தழுவ உள்ளது. நீண்ட காலமாக வரலாறு மட்டுமே எழு தி கொண்டிருந்த என்னை நாவல் எழுத வைத்து அழகு பார்த்த சான்றோர் மலர் ஆசிரியருக்கும், குழுவினருக்கும், வாசகர்களான உங்களுக்கும் நன்றி & அன்புடன் கலை நன்மணி முத்தாலங்குறிச்சி காமராசு, தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருதாளர், இந்து அறநிலையத்துறை அறங்காவலர், ஸ்ரீவீரபாண்டீஸ்வரர் ஆலயம், முத்தாலங்குறிச்சி, அரசு கலை இலக்கிய இசை சங்க உறுப்பினர், தூத்துக்குடி மாவட்டம்.


