மேல முன்னீர்பள்ளம் லெட்சுமி நாரயணன் கோயிலை தரிசனம்செய்ய 5.10.2023 அன்று கிளம்பினோம்.
முதல் முதலில் பரிபூரண ஈஸ்வரர் கோயிலை கண்டோம். இயற்கனவே இந்த கோயிலுக்கு சென்று நான் கட்டுரை எழுதியிருந்தேன். ஆனாலும் உடன் வந்த செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன், வியாபாரிகள் சங்க தலைவர் ஐயப்பன் ஆகியோருக்கு இந்த கோயிலில் வணங்க வேண்டும் என கூட்டிச்சென்றேன். கோயில் அர்ச்சகர் கணேசன் எங்களை வரவேற்றார். அவர் நான் தினத்தந்தியில் இந்த கோயிலை பற்றி எழுதி இருந்த கட்டுரை பிரதியை எங்களிடம் கொடுத்தார். என்னிடம், “நீங்கள் பல தகவல்களை எழுதாமல் விட்டு விட்டீர்கள்” என கூறினார்.
“நான் என்ன எழுதாமல் விட்டு விட்டேன் அய்யா” என கேட்டேன்.
நான் முன்பு எழுதிய கட்டுரைகளில் தல புராணம் படி இந்த கோயில் சிவலிங்கத்தினை உருவாக்கிய சிற்பி பல்லி வடிவத்தில் அம்மன் காலடியில் இருப்பதாக எழுதியிருந்தேன். அதை அவர் மறுத்தார். அம்மன் சன்னிதியின் முன்னால் உள்ள அறையில் தான் பல்லி வடிவம் செதுக்கப்பட்டுள்ளது. என அந்த இடத்தினை கூட்டிக் கொண்டு எங்களிடம் காட்டினார்.
நான் தினத்தந்திக்காக கட்டுரை எழுத வரும் போதும், இதற்கு முன்னால் முன்னீர் பள்ளம் பற்றி எழுதும் போதும் இந்த கோயிலை பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த கோயிலில் நான் பார்த்த பல விசயங்கள் எழுதாமல் விட்டு விட்டேனா? அல்லது எனக்கு யாரும் அடையாளம் காட்ட வில்லையா? என புரிய வில்லை. ஆனால் இந்த கோயிலில் எழுதாமல் விட்ட விசயங்கள் மிக அதிகம்.
தற்போது நான் கோயிலை நன்கு பார்த்தபோதுதான் புலப் பட்டது. எப்போதுமே இப்படித்தான் கற்றது கை அளவு. கல்லாதது உலக அளவு. நாம் எழுதிய கோயிலை மீண்டும் மீண்டும் போய் பார்த்தால் விடுபட்ட தகவல்கள் மேலும்நமக்கு கிடைத்துக்கொண்டே இருக்கும்.
எனவே மீண்டும் ஒரு முறை கோயிலை நன்கு பார்த்தேன். அர்ச்சகர் கணேசன் எங்களோடு வந்து பல விசயங்களை காட்டினார். தாமிரபரணி ஆற்றங் கரையில் தூத்துக்குடி மாவட்டம் கருங் குளத்தில் தான் தம்பதி சகிதமாக நவக்கிரகங்கள் உள்ளது என அறிந்திருந்தேன். ஆனால் மேல முன்னீர் பள்ளத்திலும் நவக்கிரகங்கள் தம்பதி சகிதமாக இருந்ததை கண்டு வியந்தேன்.
மேல முன்னீர்பள்ளம் அமைப்பும் கிட்டத்தட்ட கருங்குளம் போலத்தான் இருக்கிறது. மற்ற ஊர்களில் அக்கிரகாரம் கிழக்கும் மேற்குமாக இருக்கும். மேற்கே பெருமாள் கோயில் இருக்கும். அதன் சன்னதியின் இருபுறமும் வீடுகள் இருக்கும்.
கருங்குளத்திலோ அக்ரகாரம் வடக்கும் தெற்குமாக விளங்கும். இங்கேயும் வடக்கு தெற்காகத்தான் அக்கிரகாரம் உள்ளது. இங்குள்ள சிவன், பெருமாள் ஆகிய இரண்டும் கோயில்களும் கிழக்கு நோக்கி உள்ளது. மேலும் கோயிலை நன்கு உற்று கவனித்தேன்.
கோயில் பின்புறம் ஆதி சிவன் உள்ளார். கோயிலை சுற்றி வரும் இடத்தில் இல்லாமல் பைரவர் தனிச்சன்னதியில் உள்ளார்.
பெரும்பாலுமே நடராஜர் ஐம்பொன் சிலையாக எல்லா சிவன் கோயிலிலும் காட்சியளிப்பார். ஆனால் மேல முன்னீர்பள்ளம் கோயிலில் ஒரே கல்லில் நடராஜர் உள்ளார்.
ஒரே கல்லில் ஆன இந்த நடராஜர் சிலையில் அம்மாள் சிவகாமியும் உடன் உள்ளார். அதே கல் சிலையில் கீழே மத்தளம் கொட்டி வணங்கும் இரண்டு பக்தர்கள் இருப்பதையும் காணலாம்.
பெரும்பாலுமே இதுபோன்ற அமைப்பு கொண்ட கோயிலை காண்பது அரிது. எனவே மேல முன்னீர்பள்ளம் சிவன் கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்த கோயிலாகும்.
இந்த கோயில் தூணில் கோயிலை கட்டிய மன்னனின் உருவம் பொறிக்கப்பட்டு, அவர் சிவனையும் சக்தியையும் வணங்கும் வண்ணம் கும்பிட்ட கையோடு கம்பீரமாக உள்ளார்.
இந்த கோயிலில் கொடிமரம் வைப்பதற்கான ஏற்பாடுகளை மன்னன் செய்துக்கொண்டிருக்கும் போது அது முடியாமல் போய் விட்டது. எனவே அந்த பணியை இடையிலேயே விட்டு விட்டான். அதற்கான மேடை கோயில் வளாகத்தில் உள்ளது.
சில வேளைகளில் நடை சாத்தியிருந்தால் கூட இங்கிருந்து சிவன் சக்தியை வணங்கும் வகையில் கோயில் கூரையில் சிவன் சக்தி படம் புடைப்பு சிற்பமாக வடிக்கப் பட்டுள்ளது.
இந்த கோயில் சிவன் கோயிலாக இருந்தாலும் கூட அதிகமான பெருமாள் சம்பந்தப் பட்ட படங்கள் கல்லில் பொறிக் கப்பட்டுள்ளது. முன்னால் உள்ள மண்டபத்தில் நான்கு புறமும் இந்த சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த சிற்பங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வரலாற்றை நமக்கு சொல்லிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் விஷ்ணு அவதாரத்தில் பத்து அவதாரங்களையும் குறிக்கும் வண்ணம் பொறிக்கப்பட்டுள்ளது.
இந்த கோயிலை பொறுத்த வரை எங்கு பார்த்தாலும் சிற்பங்கள் குவிந்து கிடக்கிறது.
தொடர்ந்து லெட்சுமி நாரயணன் கோயிலுக்கு கிளம்பினோம்.
ஊருக்கு நடுவில் கிழக்கு நோக்கி பெருமாள் கோயில் உள்ளது. முதலில் கோயிலில் பிள்ளையார் அமர்ந்து அருள்பாலிக்கிறார். கோயிலை கட்டிய வல்லபராஜாவும் கோயில் சுற்றுப்புறச்சுவரில் உள்ளார்.
தொடர்ந்து உள்ளே நுழைகிறோம். நாங்கள் சென்ற காலம் புரட்டாசி மாதமாக இருப்பதால் அங்கே கருடசேவைக்காக கருட வாகனம் தயராக இருந்தது.
கோயிலுக்குள் நுழையும் முன்பு கருட சன்னதியை தரிசனம் செய்து விட்டு உள்ளே கிளம்புகிறோம். அவர் உட்காந்த நிலையில் அமர்ந்திருக்கிறார்.
இந்த கோயிலில் அர்ச்சகரான நாரயணன் நம்மை அன்போடு வரவேற்றார். இவர் 7வது தலைமுறையாக இந்த கோயிலில் சேவை செய்து வருகிறார்.
மூலவர் லெட்சமி நாரயணன் உட்கார்ந்த நிலையில் உள்ளார். இந்தகோயிலில் உற்சவர் நவநீதகிருஷ்ணன், இவருக்கு ருக்மணி சத்ய பாமா ஆகிய தயார் உடன் அமர்ந்து சேவைச £திக்கிறார்கள்.
கோயில் உள்ளே ஆஞ்சநேயர், விக்னேஷ்வர், நம் ஆழ்வார், ராமனுஜர் ஆகியோர் உள்ளனர். கோயில் சன்னதியில் சக்கரத்தாழ்வார் வழிபாடும் உண்டு.
இக்கோயிலில் வணங்கி நின்றால் திருமண தடை நீங்குகிறது. குழந்தை பேறு கிடைக்கிறது. இக்கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை விசேஷமாக நடைபெறும், ஆவணி மாதம் கிருஷ்ணர் ஜெயந்தி, மார்கழி மாதம் அனுமன் ஜெயந்தி, மார்கழி மாதம் சகஸ்கர நாமம் ஜெபம் நடந்து திருப்பள்ளி எழுர்ச்சி நடைபெறும்.
தை மாதம் வருஷாபிசேகம் உத்ர நட்சத்திரத்தில் நடைபெறும். தொர்ந்து திருக்கல்யாணம் நடைபெறும். இந்த கோயிலில் பரிகாரம் நடைபெறும். இதில் சுதர்சன ஹோமம், நவக்கிரக ஹோமம்,தன்வந்திரி ஹோமம் உள்படஹோமம் நடந்து சங்கல்பம் நடத்தப்படும். இதற்காக பல பக்தர்கள் இந்தகோயிலில் தொடர்ப்பு கொள்கிறார்கள். அர்ச்சகர் நாராயணன் இந்த சங்கல்பத்தினை மிகச்சிறப்பாக நடத்தி வருகிறார். தினமும் நடை காலை 8 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
இந்த கோயிலில் வித்தியாசமான பூஜை ஒன்று காளை மாட்டுக்கு நடைபெறுகிறது. அந்த பூஜை தான் என்ன?
(நதி வற்றாமல் ஓடும்)


