குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா பெரும் திருவிழா உலக பிரசித்தி பெற்றது. மைசூருக்கு அடுத்தப்படியாக இங்குதான் தசரா திருவிழா விமர்சையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டிற்கான தசரா திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதிகாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையின் மீது கொடிப்பட்டம் ஊர்வலம் நடந்தது. கொடி ஊர்வலம் கோவில் வந்து சேர்ந்ததும் காலை 9.30 மணிக்கு கோவில் முன்பு உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு பின்பு கொடி மரத்திற்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்து சிறப்பு பூஜை நடந்தது.
தசரா திருவிழா தொடங்கியதையொட்டி ஒவ்வொரு நாளும் இரவு 9 மணிக்கு முத்தாரம்மன் ஒவ்வொரு திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். சிறப்பு நிகழ்ச்சியாக தினசரி மாலை 3 மணி முதல் சமய சொற்பொழிவு, பட்டிமன்றம், இன்னிசை கச்சேரி உட்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறும். கோவிலில் தினசரி காலை, மதிய நேரங்களில் சிறப்பு அன்னதானமும், காலை முதல் இரவு வரை தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்களும், பூஜைகளும் நடைபெறும்.
10-ம் நாளான வருகிற 24-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையை தொடர்ந்து அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோவிலுக்கு முன்பாக எழுந்தருளி மகிஷாசூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடக்கிறது. 25-ந்தேதி (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு அம்மனுக்கு காப்பு களையப்படுகிறது. தொடர்ந்து வேடம் அணிந்த பக்தர்களும் காப்புகளை களைந்து விரதத்தை முடித்து கொள்கின்றனர்.
26-ந்தேதி (வியாழக்கிழமை) மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம், புஷ்ப அலங்காரத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. தசரா திருவிழாவின்போது வேடம் அணியும் பக்தர்கள், போலீஸ் மற்றும் போலீஸ் சார்ந்த சீருடை போன்ற வேடங்கள் அணிய அனுமதி கிடையாது காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


