தூத்துக்குடி மாவட்டத்தில் மகாளய அமாவாசையை முன்னிட்டு கடற்கரை, மற்றும் ஆறு, குளங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.
புரட்டாசி மாதம் பிரதமை முதல் அமாவாசை வரையிலான 15 நாட்கள் மகாளய பட்சம் எனப்படுகிறது. இந்த நாட்களில் நம் முன்னோர்கள் பூமிக்கு வந்து நம் பிரார்த்தனைகளை ஏற்றுக்கொள்வதாக ஐதீகம். மகாளய பட்சத்தில் வரும் அமாவாசையன்று முன்னோரை நினைத்து தர்ப்பணம் செய்வது விசேஷம். இந்த நிலையில், இன்று மகாளய அமாவாசை என்பதால் புண்ணிய தீர்த்தங்களில் மக்கள் புனித நீராடி முன்னோருக்கு தர்ப்பணம் செய்தனர்.
மகாளய அமாவாசையை முன்னிட்டு தூத்துக்குடி புதிய துறைமுகம் கடற்கரை, திரேஸ்புரம் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சனிக்கிழமை அதிகாலையில் திரண்டனர். பின்னர், அவர்கள் கடலில் நீராடி, தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். இதனால் தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. கயத்தாறில் அருள்மிகு அகிலாண்டேஸ்வரிதிற்கு சமேத கோதண்டராமேஸ்வரர் ஆலயத்தில் மகாளய அமாவாசையை முன்னிட்டு திரளான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.


