இந்திய அஞ்சல்துறை சார்பில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி சேவையை பயன்படுத்த பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அஞ்சல் கோட்டத்தில் தேசிய அஞ்சல் வாரம் அக்.09 முதல் 13 ம் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் இரண்டாவது நாளான நேற்று அஞ்சல் சமூக வளர்ச்சி விழா அம்மன்புரம் கிராமத்தில் நடைப்பெற்றது. இதில் அக்கிராமத்தில் உள்ள மக்கள் அனைவருக்கும் சிறு சேமிப்பு கணக்கு துவங்குவது, டிஜிட்டல் கணக்கு துவங்குவது, ஆதார் புதுப்பித்தல், அஞ்சலக காப்பீடு திட்டத்தில் சேர்த்தல் போன்ற எண்ணற்ற பயன்களை பெற்றுள்ளார்கள்.
மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் இந்திய அஞ்சல்துறை, இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி மூலம் பொதுமக்களுக்கு எளிய முறையில் சிறப்பான வங்கி சேவையை அளித்து வருகிறது. இந்த வங்கியில் குறைந்தபட்ச இருப்புத் தொகை எதுவும் இல்லாத சேமிப்பு கணக்கு துவங்கும் சேவை உள்ளது.
இந்த கணக்கை துவங்கி பயன் பெறுபவர்கள், நூறு நாள் வேலைத்திட்ட பயனாளிகளின் சம்பள கணக்கு, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பயனாளிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் ஊக்கத்தொகை பெறும் வசதி,, விவசாயிகள் அரசின் மானியத்தை நேரடியாக பெறும் வசதி, கர்ப்பிணி பெண்களின் கர்ப்பகால உதவித் தொகையை பெறும் வசதி, அரசு தரும் திருமணத்திற்கான உதவித்தொகையை பெறும் வசதி, கியாஸ் மானியங்களை நேரடியாக பெறும் வசதி,, தொழிலாளர் நலவாரிய உதவித்தொகை பெறும் வசதி, மீன்பிடி தடைக் கால மானியம் பெறும் வசதி, அரசு தரும் மற்ற உதவிகளை பெறுவதற்கும் இந்த கணக்கை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இவ்வாறு அஞ்சலகம் மூலம் கணக்கு துவங்கும் பயனாளிகளுக்கு தபால்காரர் மூலம் இல்லத்திற்கே பணம் பட்டுவாடா செய்யப்படும். மேலும் விபத்து காப்பீடு முகாம், டிஜிட்டல் கணக்கு முகாம், ஆதார் மொபைல் நம்பர் திருத்தும் முகாம் தூத்துக்குடி NLC-Tamil nadu power Limited, Tuticorin harbor estate அலுவலக வளாகத்தில் 13.10.2023 அன்று நடைபெற உள்ளது. மேலும் ஒரு சிறப்பு நிதி கல்வியறிவு முகாம் சாயர்புரம் அருகில் உள்ள வலசைக்காரன்விளை கிராமத்தில் 13.10.2023 அன்று நடைபெற உள்ளது. இவ்விடங்களில் நடைபெறும் முகாம்களில் மக்கள் அனைவரும் திரளாக கலந்துக்கொண்டு அஞ்சல் துறையின் அனைத்து சேவைகளையும் பெற்று பயன் அடையுமாறு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர். மு. பொன்னையா தெரிவித்துள்ளார்.


