குலசேகரபட்டினம் முத்தாரம்மன் திருக்கோயில் தசராத் திருவிழா சிறப்பாக நடைபெற அனைத்துத்துறை அலுவலர்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (09.10.2023) மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தலைமையில், திருச்செந்தூர் வட்டம், குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயிலில் தசரா திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயிலில் தசரா திருவிழா 15.10.2023 காலை 9.30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கி முக்கிய நிகழ்வான சூரசம்காரம் 24.10.2023 அன்று இரவு 12 மணிக்கு நடைபெறும். 25.10.2023 அன்று கொடியிறக்கம் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவுபெறும்.
திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைத்திட குடிநீர் வடிகால் வாரியம்மூலம் ஏற்பாடு செய்ய வேண்டும். குலசேகரபட்டினம் கிராமம் முழுவதும் சுகாதார முறையில் குடிநீர் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் உபயோகத்திற்கு நகரிலுள்ள எல்லப்பன் நாயக்கன் குளத்திற்கு தண்ணீர் திறந்துவிட தாமிரபரணி கோட்டம் பொதுப்பணித்துறை பொறியாளர் மற்றும் குலசேகரபட்டினம் பஞ்சாயத்து மூலம் ஏற்பாடு செய்ய வேண்டும்.
திருக்கோயில் உபயோகத்திற்கு குடிதண்ணீர் திருச்செந்தூர் தனிநபர் குழாய் கிணற்றிலிருந்து லாரி மூலம் தண்ணீர் எடுப்பது வழக்கம். மேற்படி கிணற்றிலிருந்து தசரா திருவிழாவிற்கு மட்டும் அனுமதி வழங்க வேண்டும். திருக்கோயில் வளாகம் மற்றும் கடற்கரை சுற்றியுள்ள இடங்களுக்கு தங்கு தடையின்றி 1ம் திருநாள் முதல் 11ம் திருநாள் முடிய (15.10.2023 முதல் 25.10.2023) தடையின்றி மின்சார விநியோகம் செய்ய தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் ஏற்பாடு செய்திட வேண்டும். பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை மூலம் திருவிழா காலங்களில் தொற்று வியாதிகள் பரவாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
குலசேகரபட்டினம் கிராமம் பகுதியில் சேரும் குப்பை கூழங்களை அவ்வப்போது அகற்றிட குலசேகரபட்டினம் பஞ்சாயத்து மூலமாக ஏற்பாடு செய்ய வேண்டும். ஈக்கள் மற்றும் கொசுக்கள் தொல்லை இல்லாமல் இருக்க குலசேகரபட்டினம் மற்றும் திருக்கோயில் வளாகங்களில் கொசு மருந்து தெளிக்க பொது சுகாதார துறையினர் நடவடிக்கை எடுத்திட வேண்டும். திருக்கோயில் வளாகத்தில் திருவிழா காலங்களில் முழுவதும் மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ் வசதியுடன், முதலுதவி மற்றும் அவசர மருத்துவ சிகிச்சை பெரும் வசதியுடனும் தயார் நிலையில் இருக்க ஏற்பாடு செய்திட வேண்டும்.
அரசு போக்குவரத்துறை மூலம் பல்வேறு வழிதடங்களில் கூடுதல் பேரூந்துகள் இயக்கிட வேண்டும். தென்னக ரெயில்வே மூலம் 09,10 மற்றும் 11ம் திருவிழா (23.10.2023, 24.10.2023 மற்றும் 25.10.2023) திருச்செந்தூரிலிருந்து திருநெல்வேலி வழிதடங்களில் கூடுதல் ரயில்கள் இயக்கிடவும் மற்றும் சென்னை முதல் திருச்செந்தூர் சிறப்பு ரயில் இயக்கிடவும் கேட்டுக் கொள்ள வேண்டும். திருவிழாக்காலங்கள் முழுவதும் தொலைபேசி இணைப்புகள் மற்றும் இணையம் (ஐவெநசநெவ) சரிவர இயங்குவதற்கு உரிய ஏற்பாடுகள் செய்திட வேண்டும்.
தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் கடலில் பாதுகாப்பு வளையத்துடன், உயிர்மீட்பு படகுடனும் (லைப்போட்டு) பாதுகாப்பு பணிபுரியவும் மற்றும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறையினரை நீச்சல், கடலாள், முத்துகுழி பணியாளர்களுடன் பாதுகாப்பு பணிபுரியவும் வேண்டும். திருவிழா காலங்களில் தீயணைப்பு ஊர்தி முழுமையாக தண்ணீர் நிரப்பப்பட்டு, மருத்துவ ஊர்தியுடன் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
திருவிழா காலங்கள் முழுவதும் திருக்கோயில் வளாகங்களில் மற்றும் திருக்கோயில் உட்பகுதியிலும் பக்தர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கிட காவல்துறையினர் திருக்கோயில் நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட வேண்டும். திருக்கோயில் சுற்றியுள்ள பகுதிகளில், கடற்கரை பகுதிகளில் கடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றிட உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திட வேண்டும். கொடியேற்றம் நாளான 15.10.2023 அன்று சுமார் இரண்டு லட்சம் பக்தர்கள் கூடுவார்கள் அன்றும் சிறப்பு பாதுகாப்பு மற்றும் 10 மற்றும் 11ம் திருவிழா நாட்களில் 15.10.2023 மற்றும் 25.10.2023 கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திட வேண்டும்.
அம்பாள் திருவீதி உலாவின் போது கூடுதல் பாதுகாப்பு ஏற்படுத்துதல் வேண்டும். பஞ்சாயத்து மூலம் திருவிழா காலங்களுக்கு முன்பாக பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பழுதடைந்து உள்ள சாலைகள் முழுவதும் பழுது நீக்கம் செய்ய வேண்டும். திருவிழா காலங்களுக்கு முன்பாக பஞ்சாயத்திற்கு உட்பட்ட தெரு விளக்குகள் அனைத்தும் நன்கு இயங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும். நெடுஞ்சாலைத்துறை மூலம் திருவிழா காலங்களுக்கு முன்பாக நெடுஞ்சாலைத்துறை உட்பட்ட பகுதிகள் முழுவதும் பழுதடைந்துள்ள சாலைகளை பழுது பார்த்து சரி செய்திட வேண்டும்.
சாலைகளில் இருப்பக்கத்திலுள்ள உடை மரங்கள் வெட்டுதல் மற்றும் சாலைகளின் இரு பக்கங்களில் உள்ள மேடு பள்ளங்களை சரி செய்ய வேண்டும். தசராத் திருவிழா தமிழகத்தின் முதலிடமாக போற்றப்படுவதும், தமிழகத்தின் தலைசிறந்த திருக்கோயில்களில் முக்கியமானதாக கருதப்படுவதுமான குலசேகரபட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில் தசராத் திருவிழா சீரும் சிறப்போடும் நடைபெற அனைத்துத்துறை அலுவலர்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லோக.பாலாஜி சரவணன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய்சீனிவாசன் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.


