தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டிகளை அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் இன்று (07.10.2023) இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டம்-2023யை முன்னிட்டு நடைபெற்ற மாவட்ட அளவிலான அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டிகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் , மீன்வளம்- மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தலைமையில் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தூத்துக்குடி மாவட்டப் பிரிவு சார்பில், அன்றாட வாழ்வில் உடற்தகுதியை பேணுவது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதற்கும், உடற்தகுதி கலாச்சாரத்தை இளைஞர்களிடையே புகுத்துவதற்கும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாரத்தான் போட்டிக்கு இணையான அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டி 2 பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருக்கும் நடத்தப்பட்டது.
அதன்படி 17 முதல் 25 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான 5 கி.மீ ஓட்டப்போட்டியும், 25 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கான 5 கி.மீ , 17 முதல் 25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான 8 கி.மீ ஓட்டப்போட்டியும், 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கான 10 கி.மீ ஓட்டப்போட்டியும் நடைபெற்றது. இந்த நெடுந்தூர ஓட்டப் போட்டியானது மாவட்ட விளையாட்டரங்கத்தில் இருந்து ஆரம்பித்து ஜார்ஜ் ரோடு, பெல் ஹோட்டல் கார்னர், ரோச் பூங்கா, பீச் ரோடு ரயில்வே கேட் வரை சென்று மீண்டும் அதே வழியில் மாவட்ட விளையாட்டரங்கம் வந்தடைந்தது.
17 முதல் 25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான 8 கி.மீ ஓட்டப்போட்டியில் முதலிடம் பிடித்த சக்திவேல் என்பவருக்கு ரூ.5ஆயிரம் பரிசுத் தொகை மற்றும் சான்றிதழும், இரண்டாம் இடம் பிடித்த அஜித்குமார் என்பவருக்கு ரூ.3ஆயிரம் பரிசுத் தொகை மற்றும் சான்றிதழும், மூன்றாம் இடம் பிடித்த மாணிக்கத்துரை என்பவருக்கு ரூ.2ஆயிரம் பரிசுத் தொகை மற்றும் சான்றிதழும்,
25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கான 10 கி.மீ ஓட்டப்போட்டியில் முதலிடம் பிடித்த ரூபன் டேனியல் என்பவருக்கு ரூ.5ஆயிரம் பரிசுத் தொகை மற்றும் சான்றிதழும், இரண்டாம் இடம் பிடித்த முத்துசுபின் என்பவருக்கு ரூ.3ஆயிரம் பரிசுத் தொகை மற்றும் சான்றிதழும், மூன்றாம் இடம் பிடித்த வெங்கடேஷ் என்பவருக்கு ரூ.2ஆயிரம் பரிசுத் தொகை மற்றும் சான்றிதழும்,
17 முதல் 25 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான 5 கி.மீ ஓட்டப்போட்டியில் முதலிடம் பிடித்த மாணவி கோகிலா என்பவருக்கு ரூ.5ஆயிரம் பரிசுத் தொகை மற்றும் சான்றிதழும், இரண்டாம் இடம் பிடித்த மாணவி ராதிகா என்பவருக்கு ரூ.3ஆயிரம் பரிசுத் தொகை மற்றும் சான்றிதழும், மூன்றாம் இடம் பிடித்த மாணவி ரம்யா என்பவருக்கு ரூ.2ஆயிரம் பரிசுத் தொகை மற்றும் சான்றிதழும்,
25 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கான 5 கி.மீ ஓட்டப்போட்டியில் முதலிடம் பிடித்த செல்வி.செல்வமணி என்பவருக்கு ரூ.5ஆயிரம் பரிசுத் தொகை மற்றும் சான்றிதழும், இரண்டாம் இடம் பிடித்த செல்வி.ஷாலினி என்பவருக்கு ரூ.3ஆயிரம் பரிசுத் தொகை மற்றும் சான்றிதழும், மூன்றாம் இடம் பிடித்த செல்வி. பரிமலர் என்பவருக்கு ரூ.2ஆயிரம் பரிசுத் தொகை மற்றும் சான்றிதழும்,
மேலும் மூன்று பிரிவுகளிலும் நான்காமிடம் முதல் பத்தாமிடம் பிடித்தவர்களுக்கு தலா ரூ. ஆயிரமும் பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அந்தோணி அதிஷ்டராஜ், மேலாளர் விளையாட்டு விடுதி ஆர்.சிவா, அரசு அலுவலர்கள், மாணவ – மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.


