தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோயிலில் புரட்டாசி 3வது சனியை முன்னிட்டு பத்மாவதி தாயார் அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் குடும்பத்தில் சகல பாவங்களும் நீங்கி சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இதனால் பெருமாள் கோவில்களில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதங்களில் வரும் சனிக் கிழமைகளில் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
இந்நிலையில், தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் புரட்டாசி 3-வது சனிக்கிழமை வழிபாடு இன்று கோலாகலமாக நடந்தது. அதிகாலையில் கோ பூஜை மற்றும் விஸ்வரூப தரிசனம் நடந்தது. பின்னர் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடந்தது. பத்மாவதி தாயார் அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


