வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் (5 அக்டோபர் 1823 – 30 சனவரி 1874) ஓர் ஆன்மீகவாதி ஆவார். “எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே” என்பதை குறிக்கும் வண்ணம், இவர் தோற்றுவித்த மார்க்கத்திற்கு “சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்க சங்கம் ” என்று பெயரிட்டார். சைவ சமயத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்த வள்ளலாரை பழமைவாதிகள் கடுமையாக எதிர்த்தனர். இவர் சாதிய பாகுபாடுகளை கடுமையாக சாடினார்.
இவர் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் புரட்டாசி 19 (5 அக்டோபர் 1823) இல் கருணீகர் குலத்தில் பிறந்தவர். பெற்றோர் இராமையாபிள்ளை, சின்னம்மையார். இவரோடு சபாபதி, பரசுராமன், உண்ணாமுலை, சுந்தராம்பாள் ஆகிய நால்வரும் உடன்பிறந்தவர்கள். இராமலிங்கர் பிறந்த ஆறாம் மாதத்திலேயே தந்தையை இழந்தார். தாயார் குழந்தைகளோடு பொன்னேரி சின்னகாவனம் பகுதிக்கு சென்று வாழ்ந்தார். பின்னர் சென்னையில் ஏழு கிணறு பகுதி 39, வீராசாமி பிள்ளை தெருவில் உள்ள வீட்டில் குடியேறினார். அண்ணன் சபாபதி சமயச் சொற்பொழிவு செய்து வந்தார்.
“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்” என்று பாடிய வள்ளலார், 1867-ல் கடலூர் மாவட்டம் வடலூரில் ” சத்ய ஞான சபை ” என்ற சபையை நிறுவினார். இங்கு வரும் அனைவருக்கும் 3 வேளையும் உணவு இலவசமாக வழங்கப்பட்டது. இன்றளவும் செயல்பட்டு வரும் இந்த தர்ம சபை வள்ளலார் பெயரால் லட்சக்கணக்கான மக்களுக்குப் பசியாற்றி வருகிறது. தர்ம சபைக்கான உணவுப் பொருட்களை தமிழ்நாடு அரசு குறைந்த விலைக்கு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
எதிலும் பொது நோக்கம் வேண்டும், பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும், மத வெறி கூடாது ஆகியவை இவரின் முக்கிய கொள்கைகள் ஆகும். இவ்வாறு பல கொள்கைகளை கொண்டிருந்த வள்ளலார் முதன்மை கொள்கையாக ‘கொல்லாமை’ கொள்கை ஆகிய உயிர்களிடத்தில் அருள் செய்யும் கொள்கையை பரப்பியவர். “எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க” என்று கூறியவர். இவர் பாடிய ஆறாயிரம் பாடல்களின் தொகுப்பே ‘திருவருட்பா’ என்று அழைக்கப்படுகிறது. இவரது சேவையை கருத்தில் கொண்டு, இந்திய அரசு 2007ல் இவருக்கு அஞ்சல் தலை வெளியிட்டு கௌரவித்தது.


