லால் பகதூர் சாஸ்திரி (அக்டோபர் 2, 1904 – சனவரி 11, 1966) இந்திய குடியரசின் இரண்டாவது பிரதமர் ஆவார். இவர் ஒரு முக்கியமான விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். சுதந்திர இந்தியாவின் முதலாவது பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு 1964 ஆம் ஆண்டு மே மாதம் காலமானதைத் தொடர்ந்து லால்பகதூர் சாஸ்திரி பதவிக்கு வந்தார். இவர் முறையாகத் தெரிவு செய்யப்படும் வரை குல்சாரிலால் நந்தா 14 நாட்கள் இடைக்காலப் பிரதமராக இருந்தார். இவர் பதவியேற்று 2 ஆண்டுகளுக்கு உள்ளாகவே, சோவியத் ஒன்றியத்திலுள்ள தாஷ்கண்டில் கூட்டப்பட்ட உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட போது காலமானார்.
லால் பகதூர் 1904ம் ஆண்டு தற்போதய உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள முகல்சராய் என்ற ஊரில் பிறந்தார். பிறந்த போது அவருக்கு வைத்த பெயர் லால் பகதூர் சிறிவஸ்தவா. இவரின் தந்தை சரதா பிரசாத் பள்ளி ஆசிரியர். பின்பு அலகாபாத்திலுள்ள வருவாய்த் துறையில் எழுத்தராகப் பணியில் சேர்ந்தார் .


