முதியோர் நலம் பேண ‘முதியோர் நலவாரியம்’ அமைக்க வேண்டும் என்று முதியோர் நல மருத்துவர் வி.எஸ்.நடராஜன் தெரிவித்துள்ளார்.உலக முதியோர் தினம் அக்.1-ம்தேதி கடைபிடிக்கப்படுகிறது. தமிழகத்தில் 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 75 லட்சம் முதியோர் உள்ளனர். 2030-ல் இந்த எண்ணிக்கை 1.5 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. முதுமை அடைந்து வரும் இந்தியா, விரைவில் முதியோர்களின் உடல் நலம் மற்றும் முதியவர்களின் நிதி, குடும்ப நலம் ஆகிய இரண்டு பெரிய சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்பதுமிகச் சிறந்த மற்றும் பயனுள்ள திட்டமாகும். இதன்மூலம் அதிகம் பயன் பெறுபவர்கள் முதியோர்களே. கரோனா தடுப்பூசியை எப்படி, 80 வயது முதியவர்களுக்கு இல்லம் சென்று இலவசமாக போடப்பட்டதோ, அதேபோல் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள 60 வயதைக் கடந்த முதியவர்களுக்கும் நிமோனியா தடுப்பூசியை இலவசமாகப் போட வேண்டும்.
சென்னை கிண்டியில் ரூ.220 கோடியில் முதியோர்களுக்காக தேசிய முதியோர் நல மையம் (மருத்துவமனை) நிறுவப்பட்டுள்ளது. அது தற்போது கரோனா நோயாளிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதை விரைவில் முதியோர்கள் பயன்பெறும் வகையில் திறக்க வேண்டும்.

இன்று நாம் நம் பெற்றோர்களுக்கு என்ன செய்கிறோமோ அதையே நாளை நம் வாழ்வில் பெறுவோம். பிறந்த குழந்தையும், பெற்ற உறவையும் என்றும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். கருவில் சுமந்த தாயும், தோளில் சுமந்த தந்தையையும் என்றும் மறக்க கூடாது. இழந்த பின் பெற முடியாத வரம், அன்பான உறவுகள்… அன்பை பகிர்வோம்…


