தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே உள்ள புத்தனேரியைச் சேர்ந்தவர் பூபதிராஜா. இவர் திருநெல்வேலி & தூத்துக்குடி நான்குவழிச்சாலையில் வசவப்பபுரத்தில் ஹோட்டல் நடத்தி வருகிறார்.
இந்த ஹோட்டலில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு மின் இணைப்பு பெற்றுள்ளார். இதில் முதல் 2 மின் கட்டணமும் சரியான அளவில் ரூபாய் 413 மட்டும் வந்துள்ளது. அதை பூபதிராஜா கட்டியுள்ளார்.
இந்த நிலையில் இந்த மாதத்திற்கு மின்கட்டணம் எடுக்க வந்த மின்வாரிய ஊழியர் மின் கட்டணத்தை அளவீடு செய்து இந்த டீ கடைக்கு மட்டும் ரூபாய் 61 ஆயிரம் மின் கட்டணம் வந்துள்ளது என்று தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பூபதிராஜா மீண்டும் வல்லநாட்டில் உள்ள மின் வாரிய அலுவலரிடம் சென்று இதுகுறித்து கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் அதற்கு முறையான பதில் கூறவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் இதுகுறித்து பூபதிராஜா தூத்துக்குடியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தார். மேலும் இதுகுறித்து பல்வேறு ஊடகங்களில் செய்தி வெளியானது. இதையடுத்து தூத்துக்குடியில் இருந்து மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது.
ஹோட்டலில் தவறாக மின் அளவீடு பதிவேற்றம் செய்து மின் வாரியத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய மின் கணக்கீட்டாளர் கோமதி என்ற காந்தியம்மாளை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மின்சார வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


