மரியா அல்லது மரியாள் என்பவர் இயேசு கிறிஸ்துவின் தாய் ஆவார். கிறிஸ்தவ நம்பிக்கையின்படி, மரியா தூய ஆவியினால் தம் கன்னிமைக்கு எவ்வித பழுதும் ஏற்படாமலேயே இயேசுவைக் கருத்தாங்கினார். உருவில்லாத இறைவன் மரியாவின் கருப்பையில் மனித உடலெடுத்ததால், இவர் இறைவனின் தாய் என்று அழைக்கப்படுகிறார். தாவீது குலத்தைச் சேர்ந்த புனித யோசேப்பு இவரது கணவராவார். மரியாள் கிறிஸ்தவர்களால் சிறப்பாக கத்தோலிக்கர் மற்றும் கிழக்கு மரபுவழித் திருச்சபையினரால் மிகவும் மதிக்கப்படுகிறார். மரியாளை மையமாகக் கொண்ட இறையியல் கல்வி மரியாளியல் எனப்படுகிறது. மரியாளின் பிறப்பு விழாவை கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, அங்கிலிக்கன் திருச்சபை ஆகியவை செப்டம்பர் 8ல் கொண்டாடுகின்றன.
விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ள பல்வேறு இறைவாக்குகள் இயேசு கிறிஸ்துவில் நிறைவேறியதாக கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். அவற்றில் சில பெண்ணின் வித்தாக மீட்பர் தோன்றுவார் என்ற அடிப்படையைக் கொண்டுள்ளன. ஆதாம் – ஏவாள் கதையில் இடம்பெறும், “உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும்” என்ற கடவுளின் வார்த்தைகள், மரியாவையும் அவரது வித்தாக தோன்றிய இயேசுவையும் குறிக்கின்றன என்பது நம்பிக்கை. அவ்வாறே, “இதோ, கருவுற்றிருக்கும் அந்த இளம் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்; அக்குழந்தைக்கு அவள் ‘இம்மானுவேல்’ என்று பெயரிடுவார்” என்ற இறைவாக்கினர் எசாயாவின் வார்த்தைகளும் இறைமகனின் தாயாக மரியாவைச் சுட்டிக்காட்டுவதாக நம்பப்படுகிறது.


