தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தின் செயல்பாடுகளை மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சக செயலர் தா.கீ. ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.
மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சக செயலர் தா.கீ. ராமச்சந்திரன் வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தை பார்வையிட்டார். தூத்துக்குடியில் அமையபெற்றுள்ள வ.உ.சிதம்பரனார் துறைமுக மருத்துவமனைக்கு மருத்துவ அறைகள் மற்றும் மருந்தகம், துறைமுக பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 5 மின்வூட்டி நிலையங்கள் மற்றும் புதுபிக்கப்பட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் அலுவலகத்தை திறந்து வைத்தார்.
மேலும் அவர் துறைமுகம் சார்ந்த மக்கள் பயன்பெறும் வகையில் துறைமுக பள்ளி வளாகத்திற்குள் 7 அறைகள், சுய திறன் மையங்கள், இசை மையம் மற்றும் விளையாட்டு பகுதிகளுடன் கூடிய புதிதாக கட்டப்பட்ட துறைமுக ஆரம்ப பள்ளியினை வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணைய தலைவர் (பொறுப்பு) பிமல்குமார் ஜா, முன்னிலையில் திறந்து வைத்தார். மேலும், சமீபத்தில் முடிவடைந்த திட்டங்களான 5 மெகாவாட் சூரிய மின் ஆலை மற்றும் 2 மெகா வாட் காற்றாலைகளின் செயல்பாடுகளின் சோதனை ஒட்டங்களை கேட்டறிந்தார்கள்.
மேலும், வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகளை நேரடியாக பார்வையிட்டு, திட்டங்களின் தற்போதைய நிலையை கேட்டு அறிந்தார். வ.உ.சிதம்பரனார் துறைமுக தலைவர் (பொறுப்பு) பிமல் குமார் ஜா, தற்போது நடைபெற்று வரும் திட்டங்களை மற்றும் வளர்ச்சி திட்டங்ககளை பற்றி செயலர், இந்திய அரசு, மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சகம், அவர்களுக்கு விளக்கமாக எடுத்து கூறினார்.
மேலும் துறைமுக உபயோகிப்பாளர்களுடன் கலந்துரையாடினார், இந்த கலந்துரையாடலில் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணித் திட்டங்களை பற்றி கலந்துரையாடினார். முன்னதாக நேற்று வ.உ.சிதம்பரனாரின் 152வது பிறந்த நாளை முன்னிட்டு தா.கி. ராமச்சந்திரன், அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.


