தூத்துக்குடியில் வ.உ.சி. பிறந்தநாளையொட்டி வ.உ.சி. துறைமுகத்தை மாணவ–மாணவிகள், பொதுமக்கள், ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகப் பொறுப்புக் கழகத்தில், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 152வது பிறந்த நாள் விழா இன்று நடைபெற்றது. விழாவையொட்டி தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று காலை முதல் ஏராளமான பொதுமக்கள், பள்ளி மாணவ–மாணவிகள் பஸ், கார் மற்றும் ஏராளமான வாகனங்களில் தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்தனர். அவர்கள் துறைமுக வாயிலில் உரிய சோதனைக்கு பிறகு பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டது.
இன்று காலை 9:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை பொது மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், பொது மக்கள், பள்ளி, கல்லுரி மாணவ, மாணவிகள் சாரை சாரையாக வ.உ.சிதம்பரனார் துரைமுகத்திற்கு வருகை தந்தனர். மேலும், வெளி மாவட்டங்களில் இருந்தும் சுற்றி பார்க்க மக்கள் வருகை தந்தனர். அங்கு நின்ற பெரிய, பெரிய கப்பல்களை பார்த்து ரசித்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
இது குறித்து கல்லுரி மாணவ, மாணவிகள் கூறுகையில், வருடத்தில் ஒரு தடவை வ.உ.சிதம்பரனார் பிறந்த நாளை முன்னிட்டு துறைமுகத்தை பார்வையிட அனுமதிக்கின்றனர்.. இங்கு வருகை தந்து பிரம்மாண்டமான கப்பல்களை பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும், கப்பல்களில் இருந்து நிலக்கரி, ஆயில் இறக்குமதி, ஏற்றுமதி செய்கின்றனர். இதனை பார்த்து வியந்தோம். வ.உ.சிதம்பரனார் துறைமுக கழகத்திற்கு நன்றியை தெரிவித்து கொண்டனர்.
இது குறித்து துறைமுகத்தை பார்வையிட்ட மாணவன் கூறும் போது, ‘துறைமுகத்தில் கப்பல்களை பார்க்கும் போது சந்தோசமாக உள்ளது. இது போன்ற வாய்ப்பை துறைமுகம் வழங்கி இருப்பது சிறப்பானது. கப்பல்களில் இருந்து ராட்சத எந்திரங்கள் மூலம் சரக்குகள் இறக்கப்படுவது வியப்பாக உள்ளது. கப்பல்களை அருகில் இருந்து பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது’ என்று கூறினார்.


