பெண்கள் தங்களுடைய தடைகளை எல்லாம், மூடநம்பிக்கைகளை எல்லாம் உடைத்துக் கொண்டு முன்னேற வேண்டும் என்று நினைக்கக்கூடிய ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி என்று கனிமொழி எம்பி பேசினார்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கனிம நிதி அறக்கட்டளை மூலமாக ரூ.2.92 கோடி மற்றும் விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கி மூலமாக ரூ.1.17 கோடி மதிப்பில் 21 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் அடிக்கல் நாட்டி தெரிவித்ததாவது:
ஊர் கூடி தேர் இழுப்பது போன்று சில திட்டங்கள் மகிழ்ச்சியை தரக்கூடியது. அதுபோலத்தான் இன்று ஏரல் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளிக்கு கட்டிடம் கட்டுவதற்கு ரூ.4.09 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. மேலும், இது பெண்களுக்கான பள்ளி என்பது மட்டற்ற மகிழ்ச்சியை தரக்கூடியது. ஏனென்றால் பெண்கள் படிப்பது என்பதுதான் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு போராட்டமாக இருக்கிறது. பெற்றோர்கள், பெண் குழந்தைகளை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பள்ளிக்கு அனுப்பாத காலகட்டத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் தான், பெண்களை திருமணம் செய்து வைப்பதற்கு நான் உதவித்தொகை தருகிறேன் நீங்கள் அவர்களை பள்ளிக்கு அனுப்புங்கள் என்று கூறி திருமண உதவித்தொகை திட்டத்தினை கொண்டு வந்தார்கள்.
இன்றைக்கு பெண்கள் பள்ளிக்கு செல்கின்ற நிலை வந்தபின்பு மேலும் எவ்வளவு வேண்டுமானாலும் உயர்கல்வி படிப்பதற்கு மாதம் ரூ.1000 வழங்கி ஆதரவுக்கரம் நீட்டக்கூடிய ஆட்சிதான் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி. அதேபோல் செப்டம்பர் 15 முதல் பெண்களுக்கு உரிமைத்தொகையாக மாதம் ரூ.1000 வழங்க இருக்கின்ற ஆட்சி தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான ஆட்சி. இவ்வாறு பெண்கள் சொந்தக்காலில் நிற்க வேண்டும், வாழ்க்கையில் முன்னேற வேண்டும், பெண்கள் தங்களுடைய தடைகளை எல்லாம், மூடநம்பிக்கைகளை எல்லாம் உடைத்துக் கொண்டு முன்னேற வேண்டும் என்று நினைக்கக்கூடிய ஆட்சிதான் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய திராவிட மாடல் ஆட்சி.
கிராமப்புறங்களில் இருக்கக்கூடியவர்களும் படிக்க வேண்டும் என்பதற்காகத்தான் முத்தமிழறிஞர் கலைஞர் சிறிய ஊர்களில்கூட கல்லூரிகளை கொண்டு வந்தார்கள். அவ்வாறு கல்லூரிகளை கொண்டு வந்ததினால்தான், இன்றைக்கு தேசிய கல்வி கொள்கையில் 30 வருடங்கள் கழித்து இந்தியா உயர்கல்வியில் அடையக்கூடிய 50 சதவீத இலக்கினை இன்றே தமிழ்நாடு எட்டியிருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம், விரைவிலேயே இந்த பகுதியில் ஒரு கல்லூரி அமைப்பதற்கு நாங்கள் உங்கள் சார்பிலே கோரிக்கை வைத்து நிறைவேற்றி தருவோம் என தெரிவித்தார்.
விழாவில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி எஸ்.அமிர்தராஜ், மாவட்ட ஊராட்சி தலைவர் அ.பிரம்மசக்தி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தம்பிரான்தோழன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


