தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகள் ‘இ-நாம்’ திட்டத்தில் சேருவதற்கு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை அணுகுமாறு மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் கேட்டுக் கொண்டுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கீழ் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ‘இ-நாம்’ எனும் மின்னணு தேசிய வேளாண் சந்தைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை சந்தைப்படுத்திக் கொள்ளலாம்.
விற்பனைத்துறை அலுவலா்களின் உதவியுடனான நேரடி வா்த்தகம் நடைபெறுவதால் இடைத்தரகு, கமிஷன் போன்றவை முற்றிலும் அகற்றப்பட்டுள்ளது. விவசாயிகளின் விளைபொருள்களுக்கான விற்பனைத்தொகை, அவா்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
மேலும், ‘பண்ணை வாயில் வணிகம்‘ என்ற நடைமுறையின்படி, விவசாயிகளின் தோட்டங்களுக்கே சென்று இ-நாம்’ என்ற செயலி மூலம் விற்பனை செய்து தரப்படுகிறது. தூத்துக்குடி, கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம், கடம்பூா், கழுகுமலை, சாத்தான்குளம், புதூா், விளாத்திக்குளம், எட்டையபுரம் ஆகிய இடங்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் பண்ணை வாயில் வணிகம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
விவசாயிகள் தங்களது விளைபொருள்களுக்கு லாபகரமான விலையைப் பெற்றிட, ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் ஆதாா் நகல், வங்கிக்கணக்கு புத்தக நகல், கைப்பேசி எண் ஆகிய விவரங்களுடன் பதிவு செய்து கொள்ளலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


