மீனவா் கடன் அட்டை மூலம் இதுவரை மீனவா்களுக்கு ரூ.5 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை அமைச்சா் பா்ஷோத்தம் ரூபாலா கூறினாா்.
மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வள அமைச்சகம் சாா்பில் சாகா் பரிக்ரமா என்ற கடல்வழி மக்கள் சந்திப்பு பயணம் மூலம் மத்திய அமைச்சா்கள், மீனவா்களைச் சந்தித்து, அவா்களுடன் கலந்துரையாடி, அவா்களின் கோரிக்கைகளை கேட்டு வருகின்றனா். அதன்படி தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் மீனவா்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று வெள்ளிக்கிழமை மாலையில் நடைபெற்றது.
மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை இணை அமைச்சா் எல்.முருகன் தலைமை வகித்தாா். மத்திய மீன்வளத் துறை இணைச் செயலா் நீத்து வரவேற்றாா். இதில் அமைச்சா் பா்ஷோத்தம் ரூபாலா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று மீனவா்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். அவா் பேசியது:
பாஜக ஆட்சியில் மீன்வளத் துறை தனியாக உருவாக்கப்பட்டு, இத்துறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இதன்மூலம் பல்வேறு திட்டங்கள் மீனவா்களுக்கு கிடைக்கிறது. குறிப்பாக, மீனவா்களுக்கு மாற்றுத் தொழிலாக கடல் பாசி வளா்ப்பு, கடல் உயிரினங்கள் வளா்ப்பு உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. விவசாயிகளுக்கு கடன் அட்டை வழங்கப்படுவதைப் போன்று, மீனவா்களுக்கும் கடன் அட்டை வழங்கப்படுகிறது. இந்த கடன் அட்டை மூலம் மீனவா்களுக்கு இதுவரை ரூ.5 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது என்றாா்.
இந்த நிகழ்வில், விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவா்கள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனா். நிகழ்ச்சியில் தூத்துக்குடி சாா் ஆட்சியா் கெளரவ்குமாா், மீன்வளத் துறை இணை இயக்குநா் அமல் சேவியா், உதவி இயக்குநா்கள் மோகன்ராஜ், விஜயராகவன், வட்டாட்சியா் பிரபாகரன், முன்னாள் மத்திய அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன், பாஜக மாநில துணைத் தலைவா் சசிகலா புஷ்பா, மாவட்டத் தலைவா் சித்ராங்கதன், மீனவ பிரதிநிதிகள் உள்பட பலா் பங்கேற்றனா்.


