கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் என அழைக்கப்படும் நாகர்கோயில் சுடலைமுத்துப் பிள்ளை கிருஷ்ணன் (நவம்பர் 29, 1908 – ஆகத்து 30, 1957) தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகரும் பாடகரும் ஆவார்.
நாகர்கோவில் அருகே ஒழுகினசேரியில் 1908 நவம்பர் 29 இல் சுடலைமுத்துப் பிள்ளை, இசக்கி அம்மாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தார். இவர் தந்தை அப்போதைய ஆங்கிலேயர்கள் ஆட்சியில் நடத்தி வந்த தபால் அலுவலகத்தில் தபால்களை கொண்டு செல்லும் வாகன ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். இவர் தாயார் இசக்கி அம்மாள் கணவரின் வருமானம் குறைவென்பதால், குடும்ப வறுமையை சமாளிக்க தனது வீட்டிலே சிற்றுண்டி செய்து விற்று வந்தார். இந்த வறுமையான குடும்பத்தில் கிருஷ்ணன் பிறந்தாலும் தனது ஆசையான நடிப்பில் கால்பதிக்க அவர் முதலில் நாடகக் கொட்டகைகளில் சோடா விற்கும் சிறுவனாக தனது திரை வாழ்க்கையை இளமைப் பருவத்திலே தொடங்கினார். பின் வில்லுப்பாட்டுக் கலைஞராக தனது கலையுலக வாழ்வை துவங்கினார். பின்னர் நாடக துறையில் நுழைந்தார். சொந்தமாக நாடகக் கம்பெனியையும் நடத்தினார். அப்போது தமிழகத்தில் திரைப்படத்துறை பிரபலமடைந்தது. அதிலும் நுழைந்து தமிழ் திரைப்படத்துறையில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். திரைப்படத் துறையில் இவர் அறிமுகமான திரைப்படம் 1936களில் வெளிவந்த சதிலீலாவதி ஆகும். பெரும்பாலும் சொந்தமாக நகைச்சுவை வசனங்களை எழுதி அதையே நாடகத்திலும், திரைப்படங்களிலும் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். நகைச்சுவை மூலமாக கருத்துகளை பரப்பினார். ஏறத்தாழ 150 படங்களில் நடித்தார்.


