“ஆச்சி ஜமீன்தார் கதை பேசி ரொம்ப நாளாச்சி. இன்னைக்கு ஜமீன்தார் கதைத்தான் சொல்லணும்”. அழுத்தமாக பேசினான் ராசுக்குட்டி.
“சொல்லிருவோம்”. சந்தோசமாக பாட்டியும் கூறினாள்.
“சரி. ஆச்சி”.
“ஏலே உன் அப்பன் இருக்கானே அவன் மாட்டு வண்டியை ஜோடிச்சி வச்சிருக்கானே ஏன் தெரியுமா?”
“ஏன் ஆச்சி” .
“அதை முதலில அவன் கிட்ட போயி கேளு”.
“சரி ஆச்சி”. ராசுக்குட்டி கிளம்பினான். ஆச்சியும் அவன் பின்னாலேயே சென்றாள்.
தோட்டத்து முகப்பில் பள பள வென வார்னீஷ் அடித்து வைத்திருந்த மாட்டு வண்டியை பார்த்ததும் சிரித்து கொண்டே ஆச்சி ராசுக்குட்டியை பார்த்து சொன்னாள்.
“ஏலே சொடலை ஆண்டவர் கோயில் கொடைக்கு வரி போட்டதும் வீட்டுக்கு பெயிண்ட் அடிக்குறானோ இல்லியோ அதுக்கு முன்னாடி நம்ம சக்கடா வண்டிக்கு வார்னீஷ் அடிச்சுடுதான் உன் அப்பன்”.
அப்போது அப்பாவும் அங்கே வந்துவிடுகிறார். அவரை பார்த்தவுடன் ஓடிப்போய் அவரை கட்டியபடியே கேட்டான்.
“சும்மா வெயிலுல நின்னு காயுற இந்த வண்டிக்கு ஏம்ப்போ சும்மா இருபதாயிரம் முப்பாதாயிரம் செலவு பண்ணி பெயிண்ட் அடிக்குதிய” என அப்பனை பார்த்து ராசுக்குட்டி கேட்டான். அவர் பாசத்தோடு தலையை தடவிய படியே மகனை பார்த்து சொல்கிறார்.
“அது ஒரு கடமை . எங்க அய்யாவுக்கு நான் உட்பட எட்டு ஆம்பள புள்ளையளும் ரெண்டு பொம்பள புள்ளையளும் சேர்த்து மொத்தம் பத்து புள்ளைக. பொம்பள புள்ளையள கட்டி கொடுத்துட்டு அண்ணன் தம்பி எல்லோருக்கும் தலா மூணு ஏக்கர் தோட்டமும் ஒரு சோடி மயில காளைகளும் ஒரு மாட்டுவண்டியும் பாகமா தந்தாவ எங்க அய்யா.
எங்க அய்யா வைச்சிருந்த வண்டி மாட்டை எனக்கு தந்தாவ. எங்க எல்லாத்தையும் கூப்பிட்டு பத்து விரலுதாமுலேய் உங்க மூலதனம். தெத்தாம திருடாம உழைச்சு பிழைக்கணுமுன்னு சொத்தை பாகம் பிரிச்சு தந்தாவ.
உங்கம்மைய கல்யாணம் பண்ணி மாட்டோடு மாடா சேத்து இந்த தோட்டத்தில் நானும் உங்கம்மையும் மாடா உழைச்சோம். உங்க ஆச்சியும் எங்கூடவந்து மாடா உழைச்சிக்கிட்டு இருக்கா.
வெவசாய அனுபவம் எனக்கு இல்லாததால ஆடி மாச மேக்காத்து வாழையை முறிச்சுபுடுமுன்னு தெரியாம வைகாசி மாசம் வாழைக்கண்ணை ஊனிட்டேன்.
முக்கா வெளச்சல் அரை வெளச்சலான மூவாயிரம் வாழையில் முக்கா வீச்சம் ஆடி மாச மேக்காத்துல முறிஞ்சு போச்சு
நட்டம் வந்ததா. உங்கம்மையோட நகை. நம்ம வண்டி மாடு எல்லாத்தையும் விக்க வேண்டியதா போச்சு.
மனசு சடைஞ்ச போச்சு. என்னை என்னோட பொஞ்சாதி அதான் உங்க அம்ம தான் தேத்தி மறுபடியும் வெவசாயம் செய்ய வைச்சா.”
“இன்னைக்கு அப்பா சொல்லுத கதையே நல்லா இருக்கே” என ஆச்சரியத்தோடு கேட்க ஆரம்பித்தான் ராசுக்குட்டி.
“நம்ம கொல சாமி சுடலை ஆண்டவரை கும்பிட்டு மறுபடியும் நான் வாழையை தான் வைச்சேன். வாழை வாழவும் வைக்கும். தாழயும் வைக்குமுன்னு சொல்லுவாவ.
நான் நட்ட வாழை என்னை வாழ தான் வைச்சுச்சு.
வெட்டுன வாழைக்காயை பாளையங்கோட்டை சந்தைக்கு கொண்டு போக வசதி மாட்டு வண்டித்தான். மாட்டு வண்டியில வைச்சு தான் சந்தைக்கு கொண்டு போவணும். எங்கிட்ட வண்டி மாடு கிடையாதுங்குறதால பக்கத்து தோட்டத்து அண்ணன் மாட்டு வண்டியில தான் ஏத்திட்டு போவேன். அண்ணன் மாட்டு வண்டிய நம் தோட்டத்து உள்ளே கொண்டுட்டு வர மாட்டேன்னு சொல்லுவாரு. வேணுமுன்னா ரோட்டுல வாழைத்தாரை கொண்டு வை. அப்படி வைச்சா ஏத்திட்டு போவேன்னு சொல்லுவாரு.
நானும் உங்கம்மையும் தலையில வாழைத்தாரை சொமந்து தொழி சக்தியோட உள்ள வரப்புல தடுமாறி நடந்து தலச்சொமையா கொண்டு வந்து ரோட்டுல வைப்போம். சொகுசா அப்பன் வூட்டுல ராசக்கொமரியா வாழ்ந்தவ உங்கம்ம. உங்கம்மை வாழக்கொலைய சொமந்திட்டு வரும் போதே அவளுக்கு மூச்சு வாங்கும். என் பொஞ்சாதி படுற பாட்ட நெனைச்சு அப்படியே என்னோட ஈரக்கொல துடிக்கும்.
நான் தவிக்குற என்னோட ஈரக்கொல துடிப்பும், சங்கடமும் அந்த சொடலை ஆண்டவருக்கு தெரிஞ்சுடுச்சு போல. அந்த பூ வாழை வெட்டுல எனக்கு நல்ல லாபம் கெடைச்சுது. வந்த லாபத்துல புதுசா ரெண்டு ஒட்டன்காளை, சக்கடா வண்டி, அடகு வைச்ச உங்கம்மையோட நகை எல்லாத்தையும் வாங்குனேன்.
அந்த பூவுல இருந்து அந்த சொடலை ஆண்டவன் எனக்கு இப்போ வரைக்கும் எந்த கொறையில்லாம படியளக்காரு. இந்த வாழை வெவசாயத்தை வெச்சுதான் உங்களை வளர்த்துகிட்டு இருக்கேன்”.
அப்பா சொல்லி முடித்தாரு. ஆச்சி கண்ணில் லேசாக நீர் வடிந்தது.
“இது எல்லாம் கடந்து போயிடுமுன்னு எப்போதும் பழச மறக்க கூடாது .
தோட்டத்துக்குள்ள போகும் போது இந்த வண்டிய பாத்தா எங்கப்பா எங்கூட இருக்குற மாதிரியே இருக்கும்”. அப்பா சொல்லி முடித்தாரு.
அப்பா சொன்ன வரலாற்றில் அந்த மாட்டு வண்டியை தடவி பார்த்தான் ராசுக்குட்டி.
அன்று இரவு மனது கனத்த மாதிரியே இருந்தது. ஆனாலும் அன்று இரவு ஆச்சி ஊர்காடு ஜமீன் கதையை சொல்ல ஆரம்பித்தாள்.
அவள் மடியில் கிடந்த படியே வானத்தினை பார்த்தபடியே கேட்டான் ராசுக்குட்டி.
“இதெல்லாம் 7 தலைமுறைகளுக்கு முன்பு நடந்த வரலாறு. ஜமீன்தார் காலமெல்லாம் பொற்காலமாக விளங்கிய காலம். ஆம், ஊர்க்காடு ஜமீன் ராஜா என்றாலே திக்கெட்டிலும் பெயர் பெற்று வந்தாவ. 18 பட்டியேயும் தன் கட்டுக்குள் வைத்து ஆட்சி செலுத்தி வந்தாவ.
அப்போது பிரிட்டிஷ் ஆட்சி நடந்து கொண்டிருந்துச்சு. ராஜாக்கள் தங்கள் வாரிசுகளுக்கு தந்தைப் பெயரையே வைப்பதால் நிறைய பேர்களுக்கு கோட்டியப்பன் என பெயர் ஊர்காட்டுல வைச்சிருப்பாவ. அந்தப் பெயர் தாத்தாவுக்கும் பேரனுக்கும் ஒன்னுபோலவே இருக்கும். ஆகவே எங்கும் கோட்டியப்பன் என ஒலிச்சுக்கிட்டே இருக்கும்.
இந்த வேளையில் தான் பிரிட்டிஷ்காரவிய ஒரு திட்டம் கொண்டு வந்தாவ. ரூம்ம ஊரு பகுதியில் 12 வருடத்திற்கு ஒரு முறை அவுக அனுபவிச்சு வரும் இடங்களுக்கு பட்டா வழங்குனாவ. பட்டா வாங்க எல்லாரும் தின்னவேலி கலெக்டர் ஆபிசுக்குத்தான் வரணும். தாத்தா கோட்டியப்பராஜாவும், பேரன் கோட்டியப்பனும் பட்டா வாங்கின கிளம்புனாவ. அப்போ மாட்டு வண்டிக்கு சுத்தமல்லி விலக்கு வரை ஒரு ஜோடி மாடும், அதுக்கு பொறவு வேறு ஒரு ஜோடி மாடும் மாட்டித்தான் தின்னவேலி வருவாவ. சுத்தமல்லி அருகே இதுக்காவ மற்றொரு மாட்டு வண்டி ரெடியாக இருக்கும். ஆகவே பட்டா வாங்கத் தாத்தாவும், பேரனும் நெல்லைக்கு மாட்டு வண்டியில் கிளம்பினாவ. ஆனால் பேரன் கோட்டியப்பனோ தாத்தா கிட்ட இருந்து எப்படியாவது பட்டாவைப் புடுங்கணுமுன்னு நினைச்சி கங்கணம் கட்டிககிட்டு அலைஞ்சான். இதற்காகப் போதை வாஸ்துகளைக் கொடுத்து தாத்தாவை மயக்கி கீழே சாஞ்சு புட்டான். இதனால் தாத்தா கோட்டியப்பன் ஓரிடத்தில் மயங்கி சாஞ்சு புட்டாரு.
குறிப்பிட்ட நேரத்தில தின்னவேலி பிரிட்டிஷ் துரை அலுவலகம் போனான் பேரன். அங்க ஊர்க்காடு கோட்டியப்பன் ன்னு பேரு வாசிக்கும் போது, நான் தான் கோட்டியப்பன்னு பட்டாவை பேரன் வாங்கி கிட்டான். மயக்கம் தெளிஞ்ச தாத்தா பிரிட்டிஷ் துரையிடம் ஓடியே வந்தாரு. உண்மையான சொத்துக்கு சொந்த காரன் நான் தான்னு சொல்லி வாதாடினாரு. நடந்தத் தவறைச் சுட்டிக் காட்டிப் பட்டாவை மாத்தி கொடுக்கணுமுன்னு போராடினாரு. ஆனால் பிரிட்டிஷ் துரை எதுவாக இருந்தாலும் இனி 12 வருடம் கழித்து தான்னு சொல்லிப்புட்டாரு. இதனால் என்ன செய்வதுன்னு தெரியாமல் தவிச்சாரு தாத்தா ஜமீன்.
அப்புறமா வீடு வந்த தாத்தா கோட்டியப்பன் ராஜா, பேரன் மேலே கோபம் வந்து சாபம் போட்டாரு. அந்தச் சாபம், “பொய் சொல்லி பட்டா வாங்கியதால, நீ ஏழேழு தலைமுறைக்கும் விளங்காம போயிடுவே. ஆண் அற்று பெண் அற்று வாரிசு அற்று, கட்டிடம் இடிந்து உன்னோட இருப்பிடத்திலே எருக்கஞ்செடி முளைக்குமுன்னு சாபம் போட்டுட்டாராம்.
இப்போ அவர் சாபம் தான் பலிச்சிட்டு. ஊர்காடு ஜமீனே அழிஞ்சி போச்சு” என்றாள் ஆச்சி.
“ஆகா ஆச்சி கோட்டியப்பன்னு நிறைய பேரு எங்க பள்ளிககூடத்துல கூட உண்டு. அவுக இந்த ஊர்காடு ஜமீனா?”.
“இங்க இருக்கவிய ஊர்காடு கோடீலிங்கேஸ்வரர் மேலே பாசத்தில கோட்டியப்பன்னு பேரு வைப்பாவ”.
“ஒரு விசயம் தெரியுமா?”
“ஊசிக்காட்டான். ஊர்காட்டான் இப்படி பேரு வச்சா அவுக ஊர்காடு சுடலை மேலே பாசமா இருந்து இருக்காவ .அது மட்டுமா?. வெளிநாட்டு காரனே அவன் புள்ளைக்கு ஊஸ்காட்டான்னு பேரு வச்சிருக்கானுவளாம்”.
“அப்படியா ஆச்சி”.
“பொறவு”.
“ஊர்காடு அரண்மனை, ஊர்காடு சுடலை இரண்டு பேருமே பேமஸ்ன்னா பேமஸ் அப்படி பேமஸ்”.
“ஊர்காட்டு சுடலைதான் மாட்டு வண்டியில சிவலப்பேரி வந்திருக்காராம்”.
ராசுக்குட்டிக்கு மாட்டு வண்டி என்று சொன்னவுடன் அப்பா சொன்ன மாட்டு வண்டி வரலாறுதான் கண் முன் வந்தது.
மாட்டு வண்டி அந்த காலத்தில மக்களுககு எவ்வளவு முக்கியமா இருந்து இருக்கு என நினைத்தான்.
(தொடர்ந்து ஆச்சி கதை சொல்லுவாள்)


