திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார் அல்லது திரு. வி. க., (ஆகத்து 26, 1883 – செப்டம்பர் 17, 1953) அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதிய தமிழறிஞர். சிறந்த மேடைப் பேச்சாளர். இவரது தமிழ்நடையின் காரணமாக இவர் தமிழ்த்தென்றல் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்
1906-ஆம் ஆண்டில் ஸ்பென்சர் தொழிலகம் என்ற ஆங்கில நிறுவனத்தில் கணக்கர் ஆகச் சேர்ந்தார். அக்காலத்தில், பால கங்காதர திலகர் போன்றோரின் விடுதலைக் கிளர்ச்சிகளில் ஈடுபாடு கொண்டதனால் அவ்வேலையிலிருந்தும் அவர் நீங்கினார். பின்னர் 1909-இல் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள வெஸ்லியன் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்து ஆறு ஆண்டுகள் பணி புரிந்தார். அப்போது கமலாம்பிகை என்ற நங்கையை 1912-இல் திருமணம் செய்துகொண்டார்.அவருக்கு இரண்டு பிள்ளைகளும் பிறந்தனர். 1918-ஆம் ஆண்டிற்குள் தம் மனைவி, பிள்ளைகளை இழந்து மீண்டும் தனியரானார். இராயப்பேட்டை வெஸ்லி கல்லூரியில் தலைமை ஆசிரியராகச் சேர்ந்தார். நாட்டிற்கு உழைப்பதற்காக அவர் அப்பணியில் இருந்து விலகினார்.


