திருச்செந்தூரில் ஆக்கிரமிப்பில் இருந்த ஆதிதிராவிட நலச்சங்கத்தின் பட்டா நிலம் மீட்டுதரப்படும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், திருச்செந்தூர் கோட்டம், திருச்செந்தூர் வட்டம், கீழத்திருச்செந்தூர் கிராமம், புல எண்.259ஏ/5ஏ, 259ஏ/6பி, 260ஏ/2 ஆகிய புல எண்களில் ஆதிதிராவிடர் நலச்சங்கம் பெயரில் 74 செண்ட் நிலத்திற்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தை தனியார் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், அதனை மீட்கக்கோரியும் ஆதிதிராவிடர் நலச்சங்கம் சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது.
இதற்கு சுமூக தீர்வு காணும் பொருட்டு திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் சமாதானக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நில அளவர்களை கொண்டு அளவீடு மேற்கொண்டு அதன் பின்னர் பூமியில் இருக்கும் நிலப்பரப்பின் அடிப்படையில் தீர்வு காணப்படும் என தீர்மானிக்கப்பட்டது. மேற்கண்ட முடிவுகள் அனைவராலும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு உண்ணாவிரதம் கைவிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


