தூத்துக்குடி மாவட்ட அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் பெண் பயிற்சியாளர்களின் சேர்க்கையை அதிகரிக்க “நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் நமது சகோதரிகள்” விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆகஸ்ட் 17ம் தேதி நடைபெறுகிறது
தமிழ்நாடு அரசு,வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி, திருச்செந்தூர், வேப்பலோடை ஆகிய அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2023-ம் ஆண்டிற்கான மாணவர்கள் நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதில் பெண் பயிற்சியாளர்களின் சேர்க்கையை அதிகரிக்க ஆகஸ்ட் 17ம் தேதி “நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் நமது சகோதரிகள்” (Our Sisters in Our ITI)என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் நவீன தொழிற்பிரிவுகளில் சேர்க்கையை ஊக்குவிக்கும் வகையில் தொழில் 4.0 தர தொழில் நுட்பமையங்களின் ஆய்வகங்கள், பணிமனைகள் மற்றும் இதர நவீன வசதிகளை மாணவிகள், பெற்றோர்கள் பார்வையிட ஏற்பாடு செய்துள்ளோம். தொழில் 4.0 தர தொழில் நுட்பமையங்களில் உள்ள ரோபோ உடன் பெற்றோர் மற்றும் உறவினர் பெண்கள் செல்பி எடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு வருகை புரிபவர்களைக் கொண்டு கையெழுத்து இயக்கம் நடைபெற உள்ளது. தொழிற்பயிற்சி நிலைய பயிற்சியாளர்களால் செய்யப்பட்ட அனைத்து புராஜக்ட்களையும் காட்சிபடுத்தி விருந்தினர்கள் பார்வையிட வசதிகள் செய்யப்பட்டுள்ளது. வருகை புரியும் விருந்தினர்களை ஊக்குவிக்கும் விதமாக தொழிற்கல்வி குறித்த பேச்சுப்போட்டி, ஓவியப் போட்டி, கவிதைப்போட்டி நடைபெறவுள்ளது. முந்தைய ஆண்டுகளில் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து பயிற்சி நிறைவு செய்து முன்னனி நிறுவனங்களில் பணிபுரியும் பயிற்சியாளர்களைக் கொண்டு தொழிற்பயிற்சி நன்மைகள் குறித்து எடுத்துரைக்கப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கு விருந்தினர்களாக அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தற்போது இரண்டாம் ஆண்டு பயிற்சி பெற்று வரும் பயிற்சியாளர்கள் மற்றும் புதிதாக சேர்க்கை செய்யப்பட்ட பயிற்சியாளர்களின் சகோதரிகள் பயிற்சி பெறும் நிலையில் உள்ள உறவினர் பெண்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இதில் கலந்து கொள்ளலாம் என தூத்துக்குடி அரசு தொழிற் பயிற்சி நிலைய துணை இயக்குநர் / முதல்வர் வா.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.


