நாட்டார்குளம் வில்வித்தை மாணவியை பாராட்டிய
செய்துங்கநல்லூர் பள்ளி ஆசிரியர்கள்.
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே நாட்டார் குளம் கிராமத்தை சேர்ந்த மனோகரன் பேச்சியம்மாள் தம்பதியினரின் மகள் சுப்புலட்சுமி என்ற மேகலா. 18 வயதான இவர் பாளையங்கோட்டை சாராடக்கர் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். ஏழ்மை நிலையில் உள்ள பெற்றோர்கள், நாட்டார்குளத்தில் இந்திராநகர் என்னும் இடத்தில் உள்ள சிறிய வீட்டில் தான் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு அண்ணன். ஒருவர் கொடிமரத்தான், இளையவர் பேச்சிமுத்து. இவர்கள் இருவதும் மின்சார வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளராக வேலை பார்த்து வருகிறார்கள். மேகலாவின் தந்தை விவசாய கூலியாக உள்ளார். தாயார் பேச்சியம்மாள் செங்கல் சூளையில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்கள். சிறு வயதில் இருந்தே விளையாட்டு மீது ஆர்வம் கொண்ட மேகலாவை நெல்லை மாவட்ட வில்வித்தை சங்கத்தில் சேர்த்துள்ளனர் பெற்றொர். இந்த சங்கத்தின் நிறுவனர் முனைவர் சண்முக நாதன் இவருக்கு வில்வித்தையில் அனைத்து வித்தையையும் கற்று கொடுத்தார். இரண்டு வருடத்தில் தேர்வு பெற்ற மேகலா சர்பதேச விளையாட்டு போட்டியில் விளையாட தயாரானார். முதலில் மாநில அளவில் சிவகாசியில் நடந்த போட்டியில் கலந்துகொண்டு இரண்டாவது இடத்தினை பெற்றார். தொடர்ந்து இவரது சாதனை தொடர ஆரம்பித்தது.
இலங்கையில் நடந்த கொழும்பு ஓபன் சர்வதேச வில்வித்தை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றுள்ளார். மறுநாள் நடந்த சோழன் உலக சாதனை நிகழ்ச்சியும் கலந்து கொண்டு உலக சாதனையாளர் சான்றிதழையும் பெற்றுள்ளார்.
தற்போது இவருக்கு பாராட்டு குவிந்துவருகிறது. இவர் செய்துங்கநல்லூரில் படித்த பள்ளியான எம்.எம்.நடுநிலைப்பள்ளியில் தாளாளர் எச். காஜா முகைதீன் பாராட்டினார். தலைமை ஆசிரியர் ஸ்ரீலதா நேரில் மேகலாவை அழைத்து பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். அப்போது ஆசிரியர்கள் பூரணலதா, பிலிப் ஜூடின், சௌந்திர லெட்சுமி, அங்களா ஈஸ்வரி ஆகியோர் உடனிருந்தனர். மாணவியை பல்வேறு அமைப்பினர் அழைத்து பாராட்டி வருகிறார்கள்.


