சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் கருங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேசிய தரச் சான்றிதழை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
2023 மார்ச் மாதம் பீகார் மற்றும் மத்திய பிரதேசத்தில் இருந்து வந்த தேசிய தரச்சான்று நிர்ணய குழுவினர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கருங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூன்று நாட்கள் முற்றிலுமாக ஆய்வு செய்து அறிக்கையை தயார் செய்து மத்திய சுகாதார குழுவிற்கு அறிக்கை சமர்ப்பித்தனர்.
அதன் தொடர்ச்சியாக சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் தேசிய தரச்சான்று வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன், தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் மருத்துவமனைக்கு வழங்கிய தேசிய தரச்சான்றிதழை மருத்துவ அலுவலர் டாக்டர்.ரமிஷ்ராஜா, செவிலியர் பேச்சியம்மாள் ஆகிய இருவரும் பணியாளர்களின் சார்பாக பெற்றுக் கொண்டனர்.


