நாகர்கோயில் கோட்டாறு பகுதியில் செயல்பட்டு வரும் ராஜகோகிலா அறக்கட்டளையின் 19 ஆண்டு விழா நடந்தது. கோட்டாறு ஈத்தா மொழிச்சாலை ராஜகோகிலா தமிழ் அரங்கத்தில் நடந்த இந்த நிகழ்சியில் சாதனை சிகரம அமரர் சிவலிங்கனார், கோகிலம் ராஜகோபால் ஆகியோரை நினைவு கூருதல், ஆன்மீகம் , தமிழ்த்தொண்டு , சமூக சேவை புரிந்தவர்களுக்கு ராஜகோகிலா விருதுகள் வழங்குதல், உடல் நலம் குன்றியோருக்கு உதவித் தொகை அளித்தல் ஆகிய நிகழ்வு நடந்தது. அறக்கட்டளையின் தலைவர் வழக்கறிஞர் ராஜகோபால் தலைமை வகித்தார். சிவந்தி ஆதித்தனார் கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் நடேசன், இந்து முன்னணி மிசா சோமன், தென்குமரி கல்விக் கழகம் வழக்கறிஞர் வெற்றி வேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனுசியா செல்வி வரவேற்றார். கீழப்பாவூர் சண்முகையா சிவலிங்கனார், கோகிலம் ஆகியோரை நினைவு கூர்ந்து பேசி, விழாவை தொகுத்து வழங்கினார். திருவாசக சபை செயலாளர் பொன்னம்மாள், அறிஞர் அண்ணா கல்லூரி முன்னாள் முதல்வர் முனைவர் சிவசுப்பிரமணிய பிள்ளை, சாகித்ய அகாடமி விருதாளர் பொன்னீலன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

விருதுகளை வழங்கி ஆசியுரையை திருக்கயிலாய பரம்பரை பெருங்குளம் செங்கோல் ஆதீனம் 103 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீசத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தமிழ் இலக்கியப்பணிகளுக்காக கீழப்பாவூர் சண்முகையா, தொல்பொருள் ஆய்வு, எழுத்துப்பணிக்காக முத்தாலங்குறிச்சி காமராசு, சமூக சேவைக்காக சரலூர் ஜெகன், ஆன்மீகப்பணிக்காக முனைவர் முருகலிங்கம், பதிப்பாளருக்காக சிவனீஷ் சதீஷ், ஊடகவியலாளருக்காக கோபாலகிருஷ்ணன், இளம் எழுத்தாளருக்காக மணி. தணிகை குமார் ஆகியோருக்கு ராஜகோகிலா விருது வழங்கப்பட்டது. பெரியவிளை பீச்ரோடு ராஜகுமார், செண்பகராமன்புதூர் நீலகண்டன் ஆகியோருக்கு உடல் நலம் குன்றியவர்களுக்கான நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. ஆனந்த் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவை சேர்ந்த முருகேஷ், ஜெயராம், ஷியாம் குமார், சௌதாமினி கோபால கிருஷ்ணன், சிவகாமி, சஞ்சீவ்குமார் உள்பட ராஜகோகிலா அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.


