தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள புதுக்குடியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் செந்தில்நாதன்(43). இவர் ஸ்ரீவைகுண்டம் குமர குருபரர் சுவாமிகள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே முறுக்கு கடை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை தனது முறுக்கு கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் அவரது கடைக்குள் புகுந்த செந்தில்நாதனை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளது. இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதன்பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.
அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி மாயவன், இன்ஸ்பெக்டர் அன்னராஜ் உள்பட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அதன்பின்னர் அவரது உடலை மீட்டு ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தப்பியோடிய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இந்த கொலை சம்பவம் குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
ஸ்ரீவைகுண்டம் குமர குருபரர் சுவாமிகள் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் செந்தில்நாதனின் மகன் படித்து வந்துள்ளான். அவருக்கும் மற்றொரு மாணவனுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி உள்ளனர். மேலும் செந்தில்நாதன் தனது மகனை அடித்த மாணவனை அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த மாணவன் ஆத்திரத்தில் நேற்று 2 மாணவர்களுடன் சேர்ந்து இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக 11ம் வகுப்பு மாணவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.


