செய்துங்கநல்லூர் தென்னஞ்சோலை தெருவை சேர்ந்தவர் ராமசாமி தேவர் மகன் ராமசுப்பு( வயது 53). இவர் வடவல்லநாடு பஞ்சாயத்தில் மக்கள் நலப்பணியாளராக பணியாற்றி வருகிறார். மக்கள் நலப்பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவராகவும் இருந்து வருகிறார். இவர் இன்று காலை 10 மணி அளவில் வடவல்லநாடு பஞ்சாயத்து பாறைக்காடு அருகில் உள்ள காலனி தெருவில் சாலை போடுவதற்காக ஜல்லி தட்ட வந்த லாரியை கண்காணித்துக்கொண்டிருந்தார். பின்பக்கமாக வந்த லாரிக்காக இவர் வழி காட்டிய போது எதிர்பாராத விதமாக லாரி சக்கரத்தில் சிக்கிக்கொண்டார். இதில் இவர் கால் துண்டிக்கப்பட்டது. உயிருக்கு போராடிய நிலையில் இருந்த இவரை மீட்டு பாளை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைகாக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்தார். அவருக்கு பேச்சியம்மாள் என்ற மனைவியும், ஜான்சி என்ற மகளும், காசி மணிகண்டன் என்ற மகனும் உள்ளனர். இவர் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் மருமகன் என்பது குறிப்பிடதக்கது.
மக்கள் நலப்பணியாளர் பணியை மீண்டும் அரசு கொண்டு வர வேண்டும் என்ற பல்வேறு போராட்டங்களை நடத்தியவர். இதற்காக தொடர்முயற்சியில் மக்கள் நலப்பணியாளர் பணியை மீண்டும் பெற்ற பிறகு இவர் வடவல்லநாடு பகுதியில் மக்கள் நலப்பணியாளராக பணியாற்றி வந்தார். தொடர்ந்து மக்கள் நலப்பணியாளர் பணியை நிரந்தரம் செய்ய வேண்டும் என போராடி, பல்வேறு தலைவர்களை நேரில் சந்தித்து மனு கொடுத்து வந்தார்.
இந்த விபத்து குறித்து முறப்பநாடு போலிசார் வழக்கு பதிவு செய்து லாரியை ஓட்டிய இராமனுஜம்புதூரை சேர்ந்த முத்துபாண்டி மகன் பாலமுருகன்(27) என்பரை கைது செய்தனர்.


