தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தில் நேற்று நற்கருணை பவனி நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
உலக பிரசித்தி பெற்ற தூத்துக்குடி பனிமயமாதா பேராலய திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் செபமாலை, மறையுரை, அருளிக்க ஆசீர், நற்கருணை ஆசீர் மற்றும் சிறப்பு திருப்பலிகள் நடந்து வந்தன. 5-ம் திருவிழாவான நேற்று காலை 7.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் தலைமையில் புதுநன்மை சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் சிறுவர், சிறுமிகளுக்கு முதல் திருவிருந்தை பிஷப் வழங்கினார்.
தொடர்ந்து பல்வேறு பங்கு மக்கள் சார்பில் திருயாத்திரை திருப்பலிகள் நடந்தன. காலை 9 மணிக்கு பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் பேராலய உபகாரிகளுக்கான சிறப்பு திருப்பலி நடந்தது. தொடர்ந்து காலை 11.30 மணிக்கு மதுரை உயர் மறைமாவட்ட பிஷப் அந்தோணி பாப்புசாமி தலைமையில் மறைமாவட்ட துறவியருக்கான சிறப்பு திருப்பலி நடந்தது.
மாலை 6.15 மணிக்கு செபமாலை வழிபாடும், அதைத் தொடர்ந்து பிஷப் ஸ்டீபன் தலைமையில் நற்கருணை பவனியும் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் நற்கருணையை பிஷப் ஸ்டீபன் கையிலேந்தி, பெரிய கோயில் தெரு, செயின்ட் பீட்டர் தெரு, மணல் தெரு, விக்டோரியா தெரு, கடற்கரை சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக பவனியாக எடுத்து வந்தார்.
தொடர்ந்து பேராலயம் முன்பு உள்ள மைதானத்தில் பிஷப் ஸ்டீபன் தலைமையில் மறையுரை மற்றும் நற்கருணை ஆசீர் நடந்தது. நற்கருணை பவனி மற்றும் நற்கருணை ஆசீரில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். நற்கருணை பவனியை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.


