வல்லகுளம் முனியாண்டி சாமி கோயில் கொடை விழா நடந்தது. இதையொட்டி ஊருக்குள் இருந்து சுவாமியை குடியழைப்பு செய்து மேளதாளத்துடன் அழைத்து வந்தனர். அதன் பின் முனியாண்டி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. தொடர்ந்து கணியான் -கூத்து நடந்தது.


எழுத்தாளர் கலைநன்மணி முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய “காலசாமி நாடாரும் முனியசாமியும்” என்ற வரலாற்றை கணியான் கூத்து கலைஞர் வடக்கன்குளம் ராமகிருஷ்ணன் குழுவினர் கோயிலில் அரகேற்றம் செய்தனர். வரலாற்றுக்கு உதவியாக பாலகிருஷ்ணன், சௌந்திரராஜன் ஆகியோர் பணியாற்றினார். கணியான் கூத்து கலைஞரை கோயில் நாட்டாமை தங்கபெருமாள் நாடார் மாலை அணிவித்து கௌரவித்தார். தொடர்ந்து சாமக்கொடை நடந்தது. சாமி வேட்டைக்கு செல்லுதல் , திரளை கொடுத்தல், பின் நிலையம் வந்து பக்தர்களுக்கு அருளாசி கூறுதல் போன்ற நிகழ்ச்சி நடந்தது. அதிகாலை சமபந்தி அன்னதானம் நடந்தது. விழாவில் சாமியாடிகள் பண்டார நாடார், சீனி நாடார், கணேச நாடார், ரெபேக்நாடார் உள்பட பலர் கலந்துகொண்டனர். கோயில் கொடைவிழா ஏற்பாடுகளை வல்லகுளம் முனியாண்டி சாமி கோயில் கொடைவிழா கமிட்டியினர் செய்திருந்தனர்.


