ஓட்டப்பிடாரம் ஆதிபராசக்தி மன்றத்தில் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு விவசாயம் செழிக்க கலச விளக்கு வேள்வி பூஜை நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அம்மா அவர்களின் 83வது அவதார பெருமங்கல விழா, ஆடிப்பூர விழாவை முன்னிட்டு மழைவளம் வேண்டியும், விவசாயம் வளம்பெறவும், தொழில்வளம் சிறக்கவும், மக்கள் நலமுடன் வாழவும் கலச விளக்கு வேள்வி பூஜை நடைபெற்றது. ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க மாவட்ட தலைவர் சக்தி முருகன் தீபம் ஏற்றி தொடங்கி வைத்தார்.
இதனையடுத்து கஞ்சி கலய ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து இணைச்செயலாளர் சக்தி. முத்தையா ஆன்மிக சொற்பொழிவு ஆற்றினார். அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை மன்ற தலைவர் ராமு தொடங்கிவைத்தார். விழாவில் வேள்விக்குழு இணைச்செயலாளர் கிருஷ்ண நீலா, வட்டத் தலைவர் செல்வம், திருவிக சக்தி பீடம் பத்மாவதி, மன்ற பொறுப்பாளர்கள் பரமசிவன், ரமேஷ், மகாராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


