கோவில்பட்டியில் சர்வதேச புலிகள் தின விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
நாடு முழுவதும் ஜூலை 29ஆம் தேதி சர்வதேச புலிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி கோவில்பட்டி ஐசிஎம் நடுநிலைப்பள்ளியில் நடந்த சர்வதேச புலிகள் தின விழாவில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் புலி வேடம் அணிந்து புலிகள் வாழ்வதற்கு தேவையான வாழ்விடங்களை உருவாக்கிடவும், இயற்கை வளங்களையும், சுற்றுச்சூழலை பாதுகாத்திடவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டு ஊர்வலமாக கையில் பதாகைகள் ஏந்தி சென்றனர்.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளி செயலாளர் இன்ஜினியர் நடராஜன் தலைமை வகித்தார். நாடார் நடுநிலைப்பள்ளி செயலாளர் கண்ணன், சுற்றுச்சூழல் ஆர்வலர் முத்து முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பள்ளி தலைமையாசிரியை ராதா வரவேற்றார். கோவில்பட்டி வனச்சரக வனவர் பிரசன்னா கலந்து கொண்டு உலக புலிகள் தின விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி விழிப்புணர்வு ஊர்வலத்தை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி ஆசிரியர் செல்வகுமார் நன்றி கூறினார்.


