இரணியல் ரயில்வே இரட்டை பாதை பணிகளுக்காக புதிதாக கட்டப்பட்ட சானல் பாலத்தின் வழியாக முன்னோட்டமாக தண்ணீர் திறந்து விட்டதை ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி மாவட்ட நீர்வளத்துறையின் சார்பில் புத்தன் அணையிலிருந்து இரணியல் கால்வாய் வழியாக பரம்பை பகுதியில் தண்ணீர் செல்வதை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், பத்மநாபபுரம் சார் ஆட்சியர் எச்.ஆர்.கௌசிக், முன்னிலையில் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில் – தமிழ்நாடு அரசின் ஆணைக்கிணங்க கன்னியாகுமரி மாவட்ட பகுதிகளிலுள்ள நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து கால்வாய்கள் குளங்கள், உள்ளிட்ட நீர் நிலை பகுதிகளை தூர் வாரும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதன் ஒருபகுதியாக இரணியல் பகுதியில் ரயில்வே இரட்டை பாதை பணிகளுக்காக புதிதாக கட்டப்பட்ட சானல் பாலத்தின் வழியாக இன்று முன்னோட்டமாக தண்ணீர் திறந்து விட்டதை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டது குறித்தும், பாலத்தினை மேம்படுத்துவது குறித்தும் விவசாய சங்க பிரதிநிதிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்கள். அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் இரணியல் கால்வாயானது பேச்சிப்பாறை அணையிலிருந்து துவங்கி, புத்தன் அணையிலிருந்து பிரிந்து, சித்திரங்கோடு, திருவிதாங்கோடு, இரணியல் வழியாக சென்று சேரமங்கலம் மேஜர், சேரமங்கலம் மைனர், நெய்யூர், மண்டைக்காடு உள்ளிட்ட கடைவரம்பு பகுதிகளை சேர்ந்த விவசாயிகளின் பாசனத்திற்கு பேருதவியாக அமைந்து வருகிறது. இக்கால்வாய் வழியாக செல்லும் தண்ணீர் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் முழு பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், தெரிவித்துள்ளார்கள்.
நடைபெற்ற ஆய்வின்போது, நீர்வளத்துறை கோட்டப்பொறியாளர் ஜோதிபாஸ், ரயில்வே கோட்ட செயற்பொறியாளர் உமா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கீதா, கல்குளம் வட்டாட்சியர் கண்ணன், விவசாய சங்க பிரதிநிதிகள் வின்ஸ் ஆன்றோ, புலவர் செல்லப்பா, முருகேசபிள்ளை, உதவி செயற்பொறியாளர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


