ஆதிச்சநல்லூரில் ஒரே தாழியில் இரண்டு மண்டையோடுகள் கிடைத்த காரணத்தினால் சங்க கால பாடல்கள் நிரூபணம் ஆகி உள்ளது என தொல்லியல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சங்க கால பாடல்கள் ஒரு காலத்தில் தமிழர்களின் கற்பனை என்றும் அதற்கு ஆதாரம் இல்லாத காரணத்தினால் அவை கட்டுகதை எனவும் பேசப்பட்டு வந்தது. ஆனால் தமிழர்களின் பராம்பரியம் அப்படியல்ல, சுமார் 5 ஆயிரம் வருடங்களுககு முந்தைய நாகரீகம். மேலும் உலக நாகரீகத்தின் தொட்டில் என பொருநை வெளியில் பொருநை எனும் தாமிரபரணி ஆற்றங்கரையில் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை, திருக்கோளூர், அகரம் என அகழாய்வு நடைபெறும் இடங்கள் எல்லாம் தமிழரின் தொன்மையையும் இரும்பு பயன்பாட்டையும் உலகிற்கு அடையாளம் காட்டி வருகிறது.
குறிப்பாக மத்திய அரசு ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கும் பணியை வேகமாக செய்து வருகிறது. இதற்காக ஆதிச்சநல்லூர் அகழாய்வு இயககுனர் முனைவர் அருண்ராஜ் தலைமையில் நடைபெறும் அகழாய்வுகள் தொல்லியல் ஆய்வாளர் யதீஸ்குமார் மற்றம் ஆய்வாளர்கள் ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் கடந்த 2021ம் ஆண்டு முதல் அகாழ்வு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த அகழாய்வு பணியில் 100க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், இரும்பு பொருட்கள், தங்க நெற்றி பட்டயம், சங்ககால வாழ்விடம் பகுதிகள், வெண்கலத்தால் ஆன நாய் உருவம், மான், ஆடு, நீர்கோழி, மீன் பிடிக்க பயன்படும் மீன் தூண்டில் முள், மரத்தால் ஆன கைப்பிடி கொண்ட கத்தி, இரும்பு வாள் என ஏராளமான பொருட்கள் கிடைத்தது.
தற்போது அகழாய்வு பணியில் கண்டுபிடிக்கப்பட்ட முதுமுக்கள் தாழிகளை ஆவணப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் அகழாய்வு பணியில் ஒரு கல்வட்டத்தின் நடுவே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு முதுமக்கள் தாழி திறக்கப்பட்டது. அதில் ஆய்வாளர்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக ஒரே முதுமக்கள் தாழியில் இரண்டு மூடிகள் இருந்தது. அதை திறந்து பார்த்த போது அதில் இரண்டு மண்டை ஓடுகள் கிடைத்தது. மேலும் அதனுடன் கை, கால் எலும்புகள், முதுகெலும்பும் இருந்தது. இதனோடு சிறு சிறு பானைகளும், இரும்பால் ஆன உளியும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு மண்டை ஓடுகளும் கணவன் மனைவியா? அல்லது தாய் குழந்தையா? என்று தெரியவில்லை. இதற்குரிய ஆய்வாளர்கள் மூலம் ஆய்வு செய்து இதற்கான தகவல் விரைவில் கிடைக்கும் என்று ஆய்வாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சங்க காலத்தில் பாடல்களை உண்மைப்படுத்தும் விதமாக புறநானூறில் 256 வது பாடலில்
“கலம் செய்கோவே கலம் செய்கோவே”
என்ற பாடல் உள்ளது.
இந்த பாடலில் கணவன் போரில் இறந்து விட்டான். அவன் உடலை அடக்கம் செய்யும் முதுமக்கள் தாழியில் தன்னையும் சேர்த்து அடக்கம் செய்யும் வகையில் மிகப்பெரிய தாழி ஒன்றை செய் என்பதாக உள்ளது. ஆகவே போரில் தலைவன் இறந்தால் தலைவியையும் சேர்ந்த புதைப்பாக சங்க இலக்கியத்தை சேர்ந்த புறநானூறு கூறுகிறது. இந்த சங்க பாடலை நிரூபிக்கும வண்ணம் தொல்லியல் ஆய்வில் இரண்டு மண்டையோடு ஒரே முதுமக்கள் தாழியில் கிடைத்து இருப்பது தொல்லியல் ஆய்வாளர்களை மகிழ்ச்சி அடைய செய்கிறது.
இதுகுறித்து தொல்லியல் ஆர்வலரும், எழுத்தாளருமான முத்தாலங்குறிச்சி காமராசு கூறும்போது,
தொல்லியல் என்பது இந்த மண்ணுலகில் பல்வேறு நிகழ்வுகளை உண்மை என பறைசாற்றுவது மட்டுமல்லாமல் பண்டைய கால மனிதர்களின் வாழ்விலை அனைவருக்கும் தெரியபடுத்தும் ஒன்றாகும். இந்த ஆதிச்சநல்லூரில் 2004 நடந்த ஆய்வின் போதே இதுபோன்ற இரண்டு மண்டையோடுகள் ஒரே தாழியில் இருந்தது. எனவே சங்க கால பாடலான புறநானூறு பாடல் களம் செய் கோவே என்ற பாடல் உண்மையில் நடந்தது என நிரூபிக்கப்பட்டு விட்டது. தற்போது மீண்டும் அந்த சங்க கால பாடலை நிரூபிக்கும் விதமாக ஒரே முதுமக்கள் தாழியில் இரண்டு மண்டை யோடு கிடைத்துள்ளது. இது மகிழ்ச்சி அளிக்கிறது. சிவகளை ஆய்வில் எடுத்த முதுமக்கள் தாழியை லக்னோ ஆய்வு மைய ஆய்வாளர் மொர்த்தகாய் ஆய்வு செய்து சுமார் 5 ஆயிரம் ஆண்டு பழமையான என நிரூபணம் செய்துள்ளார். அதை மாநில அரசு தொல்லியல் ஆலோசகர் முனைவர் ராஜன் உலக தமிழ்மாநாட்டில் கட்டுரையாக சமர்பணம் செய்துள்ளார். ஏற்கனவே இந்திய வரலாற்றை எழுத வேண்டும் என்றால் பொருநை ஆற்றங்கரையில் இருந்து தான் எழுத வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அந்த கூற்றையும் நிரூபிக்கும் வண்ணமாக பொருநை நாகரீகத்தில் தொல்லியல் ஆய்வு முடிவுகள் வெளி வந்து கொண்டே இருககிறது. இது தொல்லியல் ஆர்வலரான எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது என்றார்.
தொடர்ந்து ஆதிச்சநல்லூர் பி சைட் ல் சைட் மியூசியம் அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. இந்த மியூசியத்தினை அடுத்த மாதம் ஆதிச்சநல்லூர் வருகை தரும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைப்பார் என எதிர்பார்ககப்படுகிறது.
விரைவில் ஆதிச்சநல்லூர் உலகத்தில் பல்வேறு இடங்களில் இருந்து இந்தியா வரும் ஆய்வாளர்கள் மற்றும், ஆர்வலர்களின் பொக்கிஷமாக அமையும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.


