“ஆச்சி எல்லாரும் பொங்கலுக்கு சினிமா பாக்க பக்கத்து ஊரு டவுனுக்கு போறாவ என்னையும் கூட்டிட்டு போயேன்”.
ராசுக்குட்டி கேட்டவுடன் சிரித்தாள்.
“ஏலேய் சினிமா பாக்காம இருக்க முடியாதாக்கும்”.
“இல்ல ஆச்சி. எல்லாரும் போறவ. பகல் ஷோ போட்டுருக்காவுலாம். நம்மளும் போய் பாத்துட்டு வருமே” என்றான்.
“ஆச்சிக்கும் படம் பாக்க ஆசைத்தான். இப்பத்தான் பக்கத்து டவுணுக்கு சினிமா கொட்டகை கட்டியிருக்காவ. அதை பாக்கணுமுன்னு ஆசை”.
“அதை டுரிங் டாக்கீஸ்ன்னு சொல்லுவாவ. அந்த டாககீஸ் ராத்திரி திறந்த வெளியா இருக்கும். தரை டிக்கெட் எடுத்து அதுல மண்ணை கூட்டி வைச்சு படம் பாக்க நல்லா இருக்குமுன்னு சுப்பு தாய் சொல்லுவா. நம்ம ஜோலிக்கு மாட்டையும் ஆட்டையும் கட்டிக்கிட்டு கெடக்கோம். நாம எப்படி சினிமாவுக்கு எல்லாம் போவ முடியும்”.
ஆச்சியில் ஆழ் மனது யோசித்தது.
ஆனால் ரா-சுக்குட்டி விட வில்லை.
“ஆச்சி எப்படியாவது போயிரும். எனக்கு ஆசையா இருக்கு” என்றான்.
ஒரு வழியாக ஆச்சி சம்மதித்தாள்.
அன்று சினிமா பார்க்க 20 க்கு மேற்பட்டவர்கள் அந்த கிராமத்தில் இருந்து கிளம்பினார்கள்.
“ஏலே வரிசையாத்தான் போனும். 1 கிலோ மீட்டர் கொடிக்கா போட்டு இருப்பாவ. தண்ணீக்குள்ள இறங்கித்தான் வாய்க்கால் வழியா போனும். தண்ணீ பாம்பு கிடக்கும்” ஒருவன் சொன்னான்.
“தண்ணீ பாம்பு என்ன செய்யும். நான் பிடிச்சு கழுத்தில போட்டுக்குவேன்” என்றான்.
“ஆமா இவரு பெரிய பரமசிவரு. உஸ்ன்னு சத்தம் கேட்டா போதும் இங்க போட்டுட்டு சப்பான்னுல போய் நிப்பான். வாய் பேசுறதை பாரு”.
இப்படியே பேசிக்கொண்டே இருந்தார்கள்.
மறுநாள் சினிமாவுககு கிளம்பி விட்டார்கள்.
ஊர் கூட்டம் சும்மா மேக்க பாத்து கிளம்பிட்டு. வாய்க்கால் வரப்புல சதசதன்னு மிதிச்சிகிட்டு போச்சு. கடைசியில வந்தவிய வழுக்கி விழ ஆரம்பிச்சாவ.
தெளிஞ்ச நீரோடையா ஓடின தண்ணீயை இவுக நடந்து போய கலங்கடிச்சி புட்டாவ.
கொடிக்கா பக்கத்தில போவும் போது அவுரி இலை இருந்துச்சு. அதை பறிக்க போனான் சப்பான்.
“ஏலேய். களவு மட்டும் செய்யாத. வாங்கி சாப்பிடு. பிச்சை எடுத்து சாப்பிட்டாலும் தப்பில்லைடே. களவாண்டு சாப்பிட கூடாது. கீழே போடு”.
அகதார் தாத்தா சத்தம் போட்டாரு.
“ஏலே இந்த காட்டுக்குள்ள களவாண்ட என்ன நடக்கும் தெரியுமா?”
ராசுக்குட்டி கேட்டான். “ஆச்சி என்ன நடக்கும்”.
“ஏலே அதுக்கு ஒரு கதை இருக்கு. அன்னா பாரு அந்த இடத்தில ஒரு பூடம் போட்டு சாமி கும்பிடுதாவுளா, அந்த சாமி உருவானதே. களவை தடுக்கத்தான்” என்றாள் ஆச்சி.
சிறிது நேரத்தில் பெரிய ஆலமரத்துக்கு அடியில வந்தாவ, அவ்வளவு பேரும் அங்கன உட்காந்து கையில கொண்டு வந்த புளியோதரையை பிரிச்சி சாப்பிட ஆரம்பிச்சாவ.
சிலர் சாப்பாடு கொண்டு வரலை, அவுகளுக்கு ஆச்சி அவ சாப்பாட்டை பிரிச்சி கொடுத்தா.
ராசுக்குட்டி, “ஆச்சி ஆச்சி சாப்பிட்டுகிட்டே இந்த களவாண்ட சாமியை பிடிச்ச சாமி பத்தி கதைசொல்லு ஆச்சி” என பிடித்தான்.
ஆச்சி “சரி” என சொல்ல, அருகில் இருந்த ஆலமரத்து வேரில் சாய்ந்த படியே கதை கேட்க ஆரம்பித்தாள்.
“செய்துங்கநல்லூர் ஊரில சுந்தர மூர்த்தி அய்யருன்னு ஒருத்தர் இருந்தாரு. அவருக்கு விவசாயம் நிறைய இருந்தது. அவர் விவசாயத்துக்கு உழவனா வயல் வேலை செய்ய வேலங்காட்டு ஊரை சேர்ந்த மாடன் வேலை பாத்து வந்தாரு. மாடன் மனைவி மாடத்தியும் அவரு கூட வேலை செஞ்சிக்கிட்டு இருந்தார். இவுக இரண்டு பேரும், வயல்வெளிக்கு வேலைக்கு போறது, நாற்று நடவு செய்வது. வயலில் வேலை செய்யிறது, மற்றும் மாடுகளை குளிப்பாட்டுதது. வீட்டு வேலைகளையும் நல்ல -முறையில் செஞ்சிகிட்டு வந்தாவ.
இவுக தான் சுந்தரமூர்த்தி அய்யர் வயல் முழுவதையும் நெற்பயிர் விவசாயம் பார்த்து வந்தாவ. நெற்பயிர்கள் முழுவதும் நல்ல விளைஞ்சு பருவகாலத்தில அறுவடைக்கு தயாரா இருந்துச்சு. னுங்க பாத்தாலும் கதிருவ விளைஞ்சு கிடந்துச்சு.
மாடனும் மாடத்தியும் வளர்பிறை பவுர்ணமி நாளில மாசி மாதம் வயல் அறுவடை செய்யணும். இதுக்காக சுந்தர மூர்த்தி அய்யர் கிட்ட சொன்னாவ. அவரும் சரின்னு சொல்லிட்டாரு. இவருக்கு ஏக்கர் கணக்கில நிலம். அதனால இவுக இரண்டு பேரு மட்டும் அறுவடை செய்ய முடியாது. இதனால நிறைய தொழிலாளிகளை கூட்டிட்டு வர சொன்னாரு அய்யரு. மாடனும் சரின்னு சொல்லிட்டு ஆள்களை ஏற்பாடு செஞசாவ. பொம்பளையலை மாடத்தி போய் கூப்பிட்டாவ. தாயிம் பிள்ளையுமா நூத்துக்கு மேப்பட்ட விவசாய கூலி மக்க கூடினாவ.
நாளைக்கு காலையில அறுவடை பண்ணணும். அது மாசி மாதம் 18 ஆம் தேதி, அன்னைக்கு ராத்திரி 12 மணிக்கு மேல வேலங்காட்டு சுடலையும் கூழையாத்து முண்டனும் சுந்தரமூர்த்தி அய்யர் போல மாடத்தியின் கனவில வந்தாவா. என்ன தூங்கிகிட்டு இருக்க விடிஞ்சிட்டு அ-றுக்க போவ வேண்டமான்னு கேட்டுருக்காவ. உடனே மாடனும், மாடத்தியும் எந்திருச்சாவ. ஓலை பெட்டியை ஏந்திக்கிட்டு கஞ்சி, கலையம் எடுத்துக்கிட்டு, நெல்லை கட்ட கயிறு எல்லாம் எடுத்துக் கிட்டு பயிறு பயிறுன்னு வயலுக்கு ஓடிப்போயிருக்காவ.
முன்னால சுந்தர மூர்த்தி அய்யர் போவ, பின்னால இரண்டு பேரும் போயிருக்காவ. கரைக்டா சுந்தர மூர்த்தி அய்யர் வயல் கிட்ட போனவுடனே, அய்யர் மறைஞ்சி போயிட்டாவ. இரண்டு பேரும் அதிர்ந்து போயிட்டாவ. அங்க இங்க ஓடிப்பார்த்தாவ. யாரையும் காணும். அப்பம் தான் வானத்தை பாக்காவ. நட்சத்திரத்தை பாக்கும் போது கரெக்டா மணி நடுராத்திரி இரண்டு தான் இருக்கும் போல. இதனால இரண்டு பேரும் எதுக்கு இப்படி நடந்துச்சு. அய்யர் ஏன் நம்மல நடுராத்திரி வயக்காட்டுக்கு கூட்டிட்டு வந்தாவன்னு தெரியாம தவிச்சாவ.
எதும் காரணம் இருக்கும். நம்ம வயலுவ நல்லாத்தான் இருக்கா . இல்லாட்டி எந்த களவாணி பயலுவலும் உள்ளே நுழைஞ்சி புட்டானுவளா? ன்னு மாடத்திக்கு சந்தேசம் வந்துட்டு. உடனே வரப்பு வழியா ஓடிப்போய் மூலை வயலை பாத்து இருக்கா. ஒன்னும் தெரியலை. உடனே சோர்ந்து போய் மாடன் கிட்ட சொல்லியிருக்கா.
சரி, இம்ம எதுக்கு நாம வீட்டுக்கு போவ, பேசாம விடியத் தண்டியும் இங்கே இருக்கும். விடிலியில படுத்து கிடக்குமுன்னு இரண்டு பேரும் விடிலு காட்டுக்கு போயிருக்காவ.
அப்பத்தான் வயலில் இருந்து கதிர்களை அறுத்தும் கசக்கிகிட்டு இருககிற சத்தம் கேட்டு இருக்கு. அதிர்ந்து போன மாடத்தி, யாரு வயலுக்குள்ள திருடுறது. திருட்டு தானமாக செய்யாதீங்க. அய்யர் கிட்ட மாட்டினீயனா உப்பு கண்டம் பண்ணிப்புடுவாருன்னு கத்திருக்கா.
கொஞ்ச நேரம் நின்னு போச்சு சத்தம். திரும்பவும் கொஞ்ச நேரம் கழிச்சு இரண்டு பேரு அங்க நின்னுக்கிட்டு இருக்கிறதை மாடன் பாத்துப்புட்டாரு. அவுக இரண்டு பேரும் உள்ளூரை சேர்ந்த சின்ன பலவேசத் தேவர் , பெரிய பலவேசத் தேவர். இவுக இரண்டு பேரும் ஒரு கோட்டை நெல்லை கசக்கி தூக்கிட்டு போவ தயாரா இருந்திருக்காவ”.
“கோவமா போனா மாடத்தி, யோவ் தேவரை. நீங்க தானே காவல்காரவிய. நீங்களே நெல்லை கசக்கி களவாங்கியளே. இது நியாயமான்னு கேட்டு நல்ல திட்டு திட்டுன்னு திட்டியிருக்கா. இரும். இப்பவே போய் நான் அய்யர் கிட்ட சொல்லி உம்ம காவலை நான் வேண்டாமுன்னு சொல்லப்போறேன். என்றாள்.
இரண்டு பேரும் மாடத்தி தெரியாம செஞ்சு பிட்டோம். வயித்து பசி. பிள்ளையை சோத்துக்கு வழியில்லாம பட்டினியா கிடக்கு. எங்களை காட்டி கொடுத்து புடாத . நாங்க இனிமே இப்படி செய்ய மாட்டோமுன்னு சொல்லியிருக்காவ.
ஆனா மாடத்தி கேட்கலை. “என்ன தேவரே இப்படி சொல்லுதீரு. நம்மள நம்பி தானே அய்யர் வயலை தந்து இருக்காரு. நாமளே களவாண்டா எப்படி. எப்படினாலும் உப்பு தின்னவன் தண்ணீ குடிக்கத்தான் வேணுமுன்னு சொல்லிட்டு, அய்யர்கிட்ட கிளம்ப தாயராயிட்டா.
மாச்சான் இரண்டு தேவரையும் எங்கேயும் போவாம பாத்துகிடும். நான் இப்ப போயி அய்யரை கூட்டிட்டு வாரேன்னு கிளம்பினா.
இரண்டு காவலாளியும் திட்டம் போட்டாவ. இவளை இப்படியே வுட்டா அய்யர் கிட்டே சொல்லிபுடுவா. இவளை சும்மா விடக்கூடாது.
பின்னால ஓடிப்போய் மாடத்தி தலையை தன் கையில வச்சிருந்த பன்னாருவாளால வெட்டினாரு. அவ தலை துண்டா போயி விழுந்துட்டு. மாடன் தட்டி கேட்க ஓடி வந்தாரு. அவரையும் இரண்டு துண்டா வெட்டி பக்கத்தில ஆலங்காலுல தூக்கி போட்டுட்டாரு. வெட்டிப்பட்ட மாடத்தி தலையை தேடினாவ. அந்த தலை கோரைப்புல்லுக்குள்ள மறைஞ்சு போச்சு. கடைசியில விட்டா போதுமுன்னு இரண்டு பேரும் அங்கிருந்து ஓடஆரம்பிச்சிட்டாவ.
காலையில விடிஞ்சும் விடியாமலும் இருக்கு. அந்த ஊரு மேகலிங்க முப்பனாரு. தன்னோட வயலில கோரப்புல்லு அறுக்க போறாரு. கொஞ்ச நேரம் கழிச்சி அவரு மனைவியும் மேகலிங்க மூப்பனாருக்கு கஞ்சி கொண்டுட்டு வாராக.
கோரைப்புல்லை அறுத்துகிட்டே இருக்காரு. மூப்பனாரு. தீடிருன்னு மாடத்தி தலை கிடந்தது தெரியாம, தலை முடியோட கோரைப்புல் அறுத்துப்புட்டாரு. அந்த நேரம் மாடத்தி தலை குலவை சத்தம் போட்டு இருக்கு. சத்தம் கேட்டு மனைவியும் ஓடிவந்து பாக்கா. அங்க அறுத்த தலை கிடக்கு. அதுவும் குலவை போட்டுக்கிட்டே கிடக்கு. இரண்டு பேரும் அலறி அடிச்சிக்கிட்டு வீட்டுக்கு ஓடியே வந்துட்டாவ. கடைசியில இரண்டு பேருக்கும் விரையல் காய்ச்சல் வந்துட்டு, இரண்டு பேரும் கிடுகிடுன்னு ஆடிக்கிட்டு இருந்திருக்காவ. என்ன செய்யன்னு தெரியாம சொந்தகாரவிய இரண்டு பேரையும் வைத்தியர் கிட்ட கூட்டிட்டு போயிருக்காவ. அவரும் எவ்வளவோ மருந்து கொடுத்து பாத்திருக்காரு. ஆனா காய்ச்சல் குணமாகவே இல்லை.
சீவலப்பேரி சுடலை கோயிலில பூசாரியா இருந்த சன்னியாசி கோனார் கிட்ட போய் குறி கேட்டாவ.
அவரு மாடத்திக்கு நடந்த சம்பவத்தை சொல்லி, நீங்க தெரிஞ்சோ தெரியமலையோ மாடத்தி அறுத்துக்கிடந்த தலையை பாத்துட்டிய. அவ நல்ல பிறவி. நல்லது செய்யணுமுன்னு நினைச்சவா. அவ விதி இப்படி ஆகி போச்சு. ஆனா அவ தெய்வப்பிறவியா இந்த பூமியில இருக்கணும். அவளுக்கு நீங்க பூடம் போட்டு கும்பிடுங்க. அவ உங்க சந்நிதியை முள்ளு மொறிவு இல்லாம காப்பாத்துவாவ. அவ குலைவை சத்தம் போட்ட காரணத்தினால அவளை குலைவை அம்மனு கும்பிடுங்கன்னு சொல்லி அனுப்பி வைச்சாரு.
உடனே மேகலிங்க மூப்பனாரு, தன்னோடு குடும்பத்தில 5 பேரை சேத்துக்கிட்டு மாடத்தி அம்மனை பூடம் போட்டு வணங்க ஆரம்பிச்சாவ. அதுக்கு குலவை அம்மன்னு பேரு வைச்சாவ. பிற்காலத்தில் குலவை அம்மன் குழலி அம்மனா ஆகி போச்சு.
இப்பவும் செய்துங்கநல்லூருல அந்த அம்மனுக்கு கோயிலை வச்சி கும்பிட்டுக்கிட்டு இருக்காவ.
ஆச்சி சொல்லி முடித்தாள்.
“சரி ஆச்சி. தலையை கண்டு பிடிச்சவியளுக்கே இந்த கதி. அப்போ தலையை அறுத்தவியளை சும்மாவா விட்டாவ”.
“எங்க விட்டா மாடத்தி. அவிக குடும்பத்தை போட்டு பாட படுத்திப்புட்டா. அவுக வீட்டில வாயால வயித்தால போயி பாடத பாடு பட்டுபோனாவ. வெட்டி கொன்னவிய இரண்டு பேரும் கொஞ்ச நாளுல ரத்தமாக கக்கி செத்து போயிட்டாவ. அவுக குடும்பமும் நிம்மதியா இல்லை. கடைசியில அவுகளுக்கும் பல விதத்துல கஷ்டம் வந்துட்டு”.
பெரு மூச்சி விட்டாள் ஆச்சி.
“அவுகளும் ஓடிபோய் சன்னியாசி கோனாருக்கிட்ட கேட்டு இருக்காவ. அவுகளையும் பூடம் போட்டு குழலி அம்மனை சாமி கும்பிட சொல்லியிருக்காவ. அவுக குடும்பத்து காரவியளும் குளத்து பக்கத்துல பூடம் போட்டு கும்பிட ஆரம்பிச்சிட்டாவ. அதுக்கு அப்புறம் இப்போ அவுகளும் நல்லா இருக்காவ”.
ஆச்சி சொன்ன கதையை கேட்டு சிறிது நேரம் அமைதியா இருந்து ராசுக்குட்டி.
“என்ன ஆச்சி. நல்லா விசுவாசமா காவல் காத்த மாடத்திக்கு இப்படி ஆகி போச்சே”.
ராசுக்குட்டியை பார்தாள்
“கவலை படாத. என்னைக்கும் உண்மையா உழைச்சா. அவுக பேரும் புகழும் எப்போதும் இருக்கும். அதுக்கு உதாரணமா மாடத்தி குழலி அம்மனா இன்னைக்கும் இருக்காவ”.
“உண்மைத்தான் ஆச்சி”.
கனத்த மனதுடன் சொன்னான் ராசுக்குட்டி
(தொடர்ந்து ஆச்சி கதை சொல்லுவாள்)


