பாரதிராஜா (பிறப்பு: சூலை 17, 1941), ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர். தேனி-அல்லிநகரம் எனும் ஊரைச் சேர்ந்த இவர் அரங்கத்திற்குள் எடுக்கப்பட்டு வந்த தமிழ் திரைப்படங்களை வெளிப்புற படப்பிடிப்புப் பகுதிகளுக்கு கொண்டு சென்றவர் என்ற பெருமைக்கு உரியவர். பெரும்பாலும் உணர்வு நிறைந்த நாட்டுப்புறக் கதைகளை படம் பிடிப்பவர். இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்து மறக்க இயலாத இனிய பாடல்களைத் தந்தவர். ராதிகா, ராதா, ரேவதி, ரேகா, ரஞ்சிதா, போன்ற பல கதாநாயகிகளை அறிமுகம் செய்தவர். இவர் சில படங்களில் நடித்தும் உள்ளார்.
பாரதிராஜா தேனி மாவட்டம் அல்லி நகரத்தில் பெரியமாயத்தேவர், கருத்தம்மாள் இணையருக்கு பிறந்தார். இவரின் இயற்பெயர் சின்னச்சாமி ஆகும். சந்திரலீலாவை மணந்த இவருக்கு மனோஜ் மற்றும் ஜனனி என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.


