தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் சின்னத்துரை மகன் செல்வதிரவியம்(30). இவர் கூலித் தொழில் செய்து வருகிறார்.
நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் செல்வதிரவியம் நாசரேத் பஜார் வந்து விட்டு மூக்குப்பீறிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் திடீரென அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடியது.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் நாசரேத் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து நாசரேத் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதல் கட்டமாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மூக்குப்பீறியில் நடந்த கோவில் திருவிழாவில் செல்வதிரவியத்திற்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


