இயேசு கிறிஸ்துவின் 12 சீடர்களில் ஒருவரான புனித சந்தியாகப்பருக்கு 1938ம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி நதிக்கரையில் ஆலயம் எழுப்பப்பட்டு ஆண்டு தோறும் ஜூலை 16ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஜூலை 25ம் தேதி வரை திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
அதே போல் இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு ஸ்ரீவைகுண்டம் குருசுகோயில் மக்கள் மற்றும் மீனவ மக்களுக்கான சிறப்பு திருப்பலிகள் நடந்தது.
தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு புனித சந்தியாகப்பர் சொரூபம் வண்ண விளக்குகளாலும், பூக்களாலும் அலங்கரிக்கப்பட்டு குருசுகோயில் முன்பிருந்து நகரின் முக்கிய பகுதிகளுக்கு வேனில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது சந்தியாகப்பர் கொடிகள் ஏந்தி பாடல்கள் பாடியவாறே முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக இசை வாத்தியங்கள், வாண வேடிக்கைககள் முழங்க கோயிலை பக்தர்கள் வந்தடைந்தனர்.
தூத்துக்குடி மறைவட்ட முதன்மை குரு ஜான் பென்சன் கொடிகளை அர்ச்சித்து புனிதம் செய்தார். தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு ஆலயம் முன்புள்ள கொடி மரத்தில் வாணவேடிக்கை, மேல தாளம் முழங்க பக்தர்களின் கரகோஷத்துடன் கொடியேற்றப்பட்டது.
இரவு 8 மணிக்கு ஸ்ரீவைகுண்டம் பங்குதந்தை ஸ்டார்வின் தலைமையில் மறையுரையும் நற்கருனை ஆராதனையும் நடந்தது. இதில் பல்வேறு கடலோர மீனவமக்கள் உள்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
கொடியேற்றத்தை தொடர்ந்து திருவிழா நாட்களில் தினமும் காலை 6.30 மணிக்கு திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு நற்கருணை ஆராதனையும் நடைபெறும்.
ஆலயத்தின் முக்கியத் திருவிழாவான 10ம் திருவிழா வரும் 25ம் தேதி காலை 10 மணிக்கு ஆலயத் திருத்தேரில் மாதாவும், சப்பரத்தில் புனித சந்தியாகப்பரும் வீதியுலா வருகின்றனர்.
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீவைகுண்டம் குருசுகோயில் ஆலய பங்குத்தந்தை கிஷேக் மற்றும் அருட்சகோதரிகள், ஊர்நல கமிட்டியினர், பங்குமக்கள் செய்து வருகின்றனர்.


