தாமிரபரணியை காப்பாற்ற வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. இந்தற்கான குரல் தற்போது நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் ஒலிக்க ஆரம்பித்து விட்டது.
இப்போது காப்பாற்ற வில்லை என்றால் எப்போதுமே காப்பாற்ற இயலாது. எனவே தான் நெல்லையில் பல்வேறு அமைப்புகள் போராட்டத்தினை தங்களது கையில் எடுத்துள்ளார்கள்.
நெல்லையில் ஒரு பிரிவினர் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தி போலீசாரால் கைது செய்யப் பட்டனர். சிலர் தங்களால் இயன்ற படியே சமூக வலைதளத்தில் தங்களது எதிர்ப்புகளையும், விழிப்புணர்வுகளையும் சுட்டிக் காட்டி வருகிறார்கள்.
குறிப்பாக நெல்லையில் கைது செய்யப்பட்டவர்கள் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் பிடி மண் எடுத்து ஸ்ரீவைகுண்டம் தாலூகா அலுவலகத் துக்கு கொண்டு செல்லும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை பிடிமண் எடுக்க கூடாது என போலிசார் குவிக்கப் பட்டிருந்தனர். ஆனால் அதையும் மீறி 100க்கு மேற்பட்டவர்கள் பிடி மண் எடுத்து ஸ்ரீவைகுண்டம் தாலூகா அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். இதில் அனைத்து கட்சியை சேர்ந்தவர்களும் இருந்தனர். இவர்கள் கோரிக்கை இதுவரை ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
இந்த அமைப்பில் இருந்த வியனரசு அவர்களிடம் நாம் பேசிய போது, “தாமிரபரணி நதி வற்றாத ஜீவ நதி . இந்த நதியை நாம் இப்போது காப்பாற்ற வில்லை என்றால் எப்போதுமே காப்பாற்ற இயலாது. அது மட்டுமல்லாமல் நம் எதிர்கால சந்நதிக்கு இந்த நதியை காப்பாற்றி கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம். எனவே தான் இந்த போராட்டம்.
இந்த போராட்டம் மேலும் தீவிரமடையும். தற்போது தாமிரபரணி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு வந்துள்ளது. இந்த விழிப்புணர்வு நம்மை மேலும் ஊக்கப்படுத்தியுள்ளது”. என்றார்.
ஆங்காங்கே தனித்தனியாக போராட்டம் நடத்தினாலும் அரசு கவனத்திற்கு நிச்சயம் தாமிர பரணியை காப்பாற்ற வேண்டும் என்ற கூக்குரல் போய் நிச்சயம் சேர்ந்துவிடும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.
குறிப்பாக வடக்கே உள்ள நதிகளையெல்லாம் சுத்தப்படுத்தப் பட்டுக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக கங்கை , யமுனை, சரயூ போன்ற நதிகளெல்லாம் தூய்மைப் படுத்தப்பட்டு வருகிறது.
வட நாட்டில் பல நதிகள் சுத்தப்படுத்தப்பட்டிருக்கும் போது தென்னாட்டில் வற்றாத ஜீவ நதியாக விளங்கும் தாமிரபரணி ஏன் சுத்தப்படுத்தப்படாமல் விடுபட வேண்டும். இது ஏன் மத்திய அரசு கவனத்துக்கு கொண்டு செல்லப் படவில்லை.
சாக்கடை கலந்து புளுவும் பூச்சியும் கலந்து நோய் தரும் புதராக தாமிரபரணி நதி மாறிக் கொண்டு இருக்கிறதே. இதை காப்பாற்ற வேண்டாமா?.
குஜராத்தில் உள்ள மிகப்பெரிய நதியான நர்மதா கூட மிக சுத்தமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதே இந்தியாவில் தென்கோடியில் இருக்கும் தாமிரபரணி கூவம் போல ஆகி உள்ளதே. அதுவும் நமது கண் முன்னால் இப்படி ஆகி விட்டதே. இதை கண்டு போனால் போகுது என்று இருக்க முடியுமா-?.
இதனால் தான் தற்போது பலரும் தங்களது எதிர்ப்புகளை காட்டி வருகிறார்கள்.
குறிப்பாக நெல்லை சமூக சேவகர் நயினார் குமார் என்பவர் பல்வேறு சமூக வலைதளத்தில் தாமிரபரணி பற்றி பேசி வருகிறார்.
அவர் தாமிரபரணி தண்ணீரை ஒரு டம்ளரில் எடுத்து அது மாசு பட்டிருக்கும் விதத்தினை சுட்டிக் காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். படித்துறைகளின் அவல நிலைகளை மக்கள் மத்தியில் எடுத்துச்சொல்கிறார்.
பாளையங்கோட்டை தோன்றும் பழவூர் அணைக்கட்டு சென்று அங்குள்ள தண்ணீர் சுத்தமாக இருப்பதையும், தொடர்ந்து பாளையங்கால்வாய் மேலப் பாளையம், முருகன் குறிச்சி ஆகிய இடங்களில் சாக்கடை கலந்து விஷமாக மாறும் இடங்கள் குறித்தும் பேசுகிறார். அவர் பேச்சை கேட்கும் போதே நமது மனது பதறுகிறது.
பாளையங்கால்வாய் தூத்துக்குடி மாவட்டம் வசவப்பபுரம் சாணார் குளத்தில் மிக மோசமாக இருப்பதையும், தூத்துக்குடி ரோடு போடும் போது அதில் இருந்து எடுத்த தார் பகுதியை குளத்துக்குள் போட்ட காரணத்தினால் தற்போது இந்த குளத்தில் உள்ள தண்ணீரை மிருகங்கள் கூட குடிக்க முடியாமல் போய் விட்டது என்பதை ஆணித் தரமாக எடுத்து சொல்கிறார்.
இவரின் பதிவுகளை பல்வேறு நபர்கள் படிக்கிறார்கள். சமூக வலை தளம் மூலமாக மற்றவர்களுக்கு அனுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்கள். நிச்சயம் இந்த பதிவு ஒரு மாற்றத்தினை ஏற்படுத்தி தரும் என நம்புகிறேன்.
மேலப்பாளையத்தினை சேர்ந்த இளைஞர் சிராஜ், அவரது நண்பர் டாக்டர் ராஜ் ஆகியோரும் பாளையங்கால்வாயை முதலில் காப்பாற்றுங்கள் என்று சிறுவனை வைத்து பொதுப்பணித்துறை அதிகாரியிடம் மனு கொடுத்தார். இதுவும் ஊடகங்களில் மிக பிரமாண்டமாக பேசப்பட்டது. நியூஸ் 18 தமிழ் ஊடகம், தனது ஆய்வு மூலமாக இனி தாமிரபரணி நதி குடிக்க லாயகற்றது என அறிவித்தது. அதில் இருந்து மக்கள் போராட்டம் சூடு பிடித்துக்கொண்டிருக்கிறது.
இவர்கள் போராட்டம், மனு கொடுப்பது, சமூக வலைதளத்தில் பரப்புவது ஒரு புறம் இருந்தாலும் கூட அரசுடன் இணைந்து த £மிரபரணியை காப்பாற்ற ஒரு இயக்கம் தனது பணியை துவங்கியுள்ளது.அந்த இயக்கம் செயல்பாடுகள் தாமிரபரணியை காப்பாற்றுமா? அந்த இயக்கம் என்ன இயக்கம் என்பது குறித்து தொடர்ந்து காணலாம்.
(நதி வற்றாமல் ஓடும்)


