இன்று காலை பெரியவர் காங்கிரஸை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் தியாகராஜன் அவர்கள் என்னை காண எனது ஸ்டுடியோவுக்கு வந்திருந்தார். இன்றைக்கு காமராஜர் பிறந்த நாள். அவரை பற்றி என்ன நினைக்கீறீர்கள் என்று கேட்டேன். அவர் சொன்ன பதில் காமராஜர் எவ்வளவு எளிமையானவர் என்பது எங்களுக்கு புரிந்தது.
திருச்செந்தூர் சுற்று பயணம் முடித்து விட்டு, நேருவும், காமராஜரும் நெல்லை யை நோக்கி காரில் வந்துள்ளனர். அப்போது செய்துங்கநல்லூரில் வாழ்ந்த காங்கிரஸ் பிரமுகர் ஏ.வி.ஆர் . செல்லத்துரை தலைமையில் 13 வயதான தியாகராஜன் உள்பட 100க்கு மேற்பட்ட பெண்கள் காமராஜரை காணும் நோக்கோடு முதல்வர் வாகனத்தினை ஊர் எல்லையில் மறித்து உள்ளனர். அப்போது வாகனத்தினை நிறுத்தி காமராஜர் அந்த குழுவினருடன் பேசியுள்ளார். “என்ன ஏ.வி.ஆர்.செல்லதுரை எப்படி இருக்கீங்க” என கேட்டதுடன் அவர் கொடுத்த மலர் மாலையை வாங்கி நேருவுக்கு அணிந்து விட்டு மற்றொரு மாலையை தானே வாங்கி தன் கழுத்தில் மாட்டிக்கொண்டாராம். அப்போது மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்த பெண்கள் குலவை போட்டு அவர்களை வரவேற்றுள்ளனர். அதை கண்டு அதிசயத்த நேருஜி திருச்செந்தூரில் தங்களுக்கு கிடைத்த மாலைகளை எடுத்து பெண்களிடம் கொடுத்துள்ளார். அனைவரும் அதை மகிழ்ச்சியுடன் வாங்கியுள்ளனர். இன்று ஒரு முதல்வரையும் பிரதமரையும் ஊர் எல்லையில் சாதரண தொண்டன் மறித்து விட முடியுமா?. எவ்வளவு எளிமையான தலைவர். அவரை பற்றி எங்களிடம் பகிர்ந்து கொண்ட தியாகராஜன் அய்யாவுக்கு நாங்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தோம்.
இன்னொரு மகிழ்ச்சியான செய்தி, காமராஜர் முதல்வர் பதவியை இழந்த பிறகு ஒரு முறை செய்துங்கநல்லூர் வந்தார் . அவரை காண என் தந்தை என்னை அழைத்து சென்றிருந்தார். காமராஜர், “பையனுக்கு என்ன பெயர் வைச்சிருக்கீங்க” என கேட்டுள்ளார். “உங்கள் பெயர்தான் வைச்சிருக்கேன்” என என் தந்தை கூறியுள்ளார். “பேரு வச்சா போதாது. நல்லா வரணுமுன்னு சொல்லியிருக்காரு”. அந்த நாள் என் வாழ்வில் பொன்னாள் – அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு


