ஆச்சி இன்று புல் அறுத்து கொண்டு சுமந்தே கொண்டு வந்தாள்.
மாடுகளுக்கும், ஆடுகளுக்கும் புல் பிரித்து போட்டாள் ஆச்சி. அதன் பின் தண்ணீர் காட்டினாள்.
அம்மா கருவாட்டு குழம்பு வைத்திருந்தாள். பெரிய கும்பாவில் ஆச்சி சோற்றையும், கருவாட்டு குழம்பையும் குழப்பி சாப்பிட்டாள்.
அவள் குழப்பி கருவாட்டு குழம்பு சாப்பிடும் சுவையே தனிச்சுவைத்தான்.
அந்த சுவை அப்படியே ராசுக்குட்டிக்கு எச்சில் ஊறியது.
ஆச்சி பக்கத்தில் போய் நின்றான்.
“என்னலே சோறு வேணுமா?”
ராசுக்குட்டி தலையை ஆட்டினான்.
“ஏலே வேணுமுன்னா வேணுமுன்னு கேளு. கொதிக்கி போட்டுறாத”
சோற்றை கருவாட்டு குழம்போடு அள்ளி கொடுத்தாள்.
ஆச்சி தந்ததை வாய்நிறைய வாங்கினான் ராசுக்குட்டி. “என்னா சுவை. ஆகா. இப்படி சுவை எங்க அம்மா கூட தந்தது இல்லையே”.
“ஆச்சி நீ சோத்தை வெறவி சாப்பிடும் போது வேறே எதையாவது கொழப்பி வைப்பியோ?”.
“இல்லையே . ஏன் கேக்கிற”.
“இல்லை உன் கை ராசி. நீ அள்ளித்தந்தா என்னா சுவையா இருக்கு”.
ஆச்சி சிரித்தாள்.
இருவரும் சாப்பிட்டு முடித்தார்கள். பாயை தூக்கி கொண்டு மொட்டை மாடிக்கு கிளம்ப ஆயத்தமானான் ராசுக்குட்டி.
“ஆச்சி சீக்கிரம் வந்து கதை சொல்லு”.
“ஏலே சாரல் அடிக்க மாரி இருக்குல . இன்னைக்கு மொட்டை மாடி வேண்டாம். திண்ணையில ஓலை கொட்டகைக்கு கீழே படுபும்லே”
“அட போ ஆச்சி. சாரல் மழையில படுத்தா நல்லாத்தான் இருக்கும். வா ஆச்சி”.
“ஏலே தடுமம் புடிக்குமுலே”.
“அதெல்லாம் புடிக்காது”.
பிடிவாதமாக மச்சி மீது ஏறினான் ராசுக்குட்டி. சத்தம் போட்டுக்கொண்டே ஆச்சியும் பின்னாலேயே மாடி ஏறினாள்.
அங்கே தூறல் நின்னு போச்சி.
சிரித்துக்கொண்டே கதை சொல்ல ஆரம்பித்தாள் ஆச்சி.
“ஏலே ராசுக்குட்டி தாமிரபரணி ஆத்தங்கரையில தான் எத்தனை தெய்வங்க இருக்கு தெரியுமா?”
ராசுக்குட்டி நிமிர்ந்து உட்கார்ந்தான்
“அதுல ஒண்ணுத்£ன் கீரைத்தண்டு சுடலை”.
“அது என்ன ஆச்சி. கீரைத்தண்டு சுடலை?”
“ஆமாம் ஊர்க்காட்டு சுடலை, சீவலப்பேரி சுடலை, மாராடிச்சான் சுடலை, ஆறுமுக மங்கலம் சுடலை, ஒத்தப்பனை சுடலை, ஐந்து மரத்து சுடலைன்னு சொல்லிக்கிட்டே போவலாம். அதுல ஒண்ணுத்தான் கீரைத்தண்டு சுடலை”.
“ஆச்சி சுடலை நம்ம ஊரு சைடுல தான் நிறைய இருக்காரு”. ராசுக்குட்டி கேட்டான்.
“ஆமாம் சுடலை கைலாசத்தில சிவனுக்கும், சக்திக்கும் பிறந்தவிய. அங்குமாமிச பிரியராக சுடலை மாறினதால அவுக பூலோகம் அனுப்பபட்டாவ”.
“அந்த சமயத்தில சிவபெருமான் கிட்ட நிறைய வரத்தையும் வாங்கி கிட்டாரு. சுடலை பூலோகம் வந்தாரு. வடநாடுபோய் பல இடங்களில் புண்ணிய தலங்களில் குளிச்சாரு. அதுக்கு பொறவு தாமிரபரணி ஆத்தில பாபநாசத்தில வந்து குளிச்சாரு. அவரு கடைசியில பூலோகத்தில பேசும் தெய்வமா இருக்க முடிவு பண்ணுனாரு. ஊ-ர்காடு, சீவலப்பேரி, ஆறுமுக மங்கலம், ஆழிகுடி, விஜயநாராயணம், பொழிகக்கரைன்னு பல இடத்தில இவரு இருந்து அருள்பாலிக்க ஆரம்பிச்சாரு”.
ஆச்சி தொடர்ந்தாள்.
“சுடலை மக்களோட இஷ்ட தெய்வமானாரு. குடும்ப தெய்வமா ஆனாரு. ஒரே கிராமத்தில உள்ள பல குடும்பத்துக்கு சுடலை குலதெய்வமா இருந்தாரு”.
“ இதனால இவருக்கு பல பேரு. ஒரு இடத்தில கீரை தண்டு சுடலைன்னு இவரு அருள் புரிஞ்சாரு. அந்த கதையைத்தான் சொல்லப்போறேன்”.
“என்ன ஆச்சி. கீரைத்தண்டு சுடலையா? இப்படியுமா சுடலைக்கு பேரு வைப்பாவ?” ராசுக்குட்டி ஆச்சரியமா கேட்டான்.
“ஆமாம் அப்படித்தான் பேரு இருக்கு. அதை பத்தித்தான் சொல்லப்போறேன்” என்றாள் ஆச்சி.
“பேரை வித்தியாசமா இருக்கே சொல்லு ஆச்சி” என்றான் ராசுக்குட்டி.
ஆச்சி கதை சொல்ல ஆரம்பித்தாள். “தாமிரபரணி ஆத்தங்கரையில புத்தனேரின்னு ஒரு கிராமம் இருக்கு. அந்த கிராமத்தில தான் கீரைத்தண்டு சுடலை இருக்காரு”.
“அதாவது புத்தனேரியில் வாழ்ந்த யாதவர் சமுதாயத்தில ஆச்சி ஒருத்தி தினமும் தயிர் விக்க முறப்பநாடு வந்திக்கிட்டே இருந்தா. ஒரு நா முறப்பநாட்டில விற்பனை முடிச்சிட்டு தாமிரபரணி ஆத்தில குளிச்சிட்டு ஊருக்கு வருவா. அப்படித்தான் அன்னைக்கும் தாமிரபரணி ஆத்தில குளிச்சிட்டு ஊருக்கு கிளம்புனாவ அந்த ஆச்சி”.
“நீயே ஒரு ஆச்சி. தயிர் கார ஆச்சி இன்னொரு ஆச்சியா?” சிரித்தான் ராசுக்குட்டி.
“ ஏலே ஒழுங்கா கதை கேளு இல்லாட்டி எனக்கு கோபம் கோபமா வரும்”.
அமைதியானான். “இந்த ஆச்சி கதை சொல்லாம விட்டுற கூடாது. பேசமா இருப்போம்” என முடிவு செய்தான் ராசுக்குட்டி.
“அந்த பால்கார அம்மா ஒரிடத்தில வரும்போது அங்கு கீரை தோட்டம் போட்டு இருந்தாவ. அங்க கீரை வகை வகையா இருந்துச்சு . இன்னைக்கு மதியம் கீரை கறி வைக்கலாமேன்னு அந்த ஆச்சி பக்கத்தில இருந்த கீரைத்தோட்டத்தில இறங்கினாவ. அங்க நல்ல செழிப்பா வளர்ந்து இருந்த இரண்டு கீரையைப் பிடுங்கி தனது தயிர் கூடையில போட்டுக்கிட்டாவ”.
“வயக்காட்டில இறங்கிய காரணத்தினால் காலில சகதியாக இருந்துச்சு. அதனால பக்கத்தில உள்ள குட்டைக்கால் குளத்துக்கரையில கூடையை வைச்சிட்டு , குளத்துக்குள்ள இறங்கி சகதியைக் கழுவினாவ. அதுகப்புறம் கரைக்கு வ்ந்தாவ”.
“அப்பத்தான் அங்க ஒரு சம்பவம் நடந்துச்சு. பெட்டியில் இருந்த கீரைத்தண்டு அருகில் விழுந்து குளக்கரையில முளைத்து நின்னுச்சி”.
“அது எப்படி ஆச்சி உடனே முளைக்கும்”. ராசுக்குட்டி கேட்டான்.
“நீ கேட்ட படித்தான் அந்த தயிர் கார ஆச்சியும் நினைச்சிருக்காவ. யாரோ நமக்கு தெரியாமல் நட்டு வச்சிட்டு போயிட்டாவன்னு அதை புடுங்க முயற்சி பண்ணியிருக்காவ. ஆனா முடியலை. தம் கூட்டி கீரையை புடுங்க முயற்சி செய்து இருக்காவ. இதுக்கிடையில சுடலை மாடன் இந்த ஆச்சி பறிச்ச கீரையில உட்காந்து இருக்காரு. இது தெரியாம ஆச்சி கீரையை ஆய, அதுகூட சுடலைமாடசாமி வந்திட்டார். இது பத்தி ஒண்ணுமே புரியலை ஆச்சிகக்கு”.
“குளத்து கரையில இருந்த ஆச்சி கீரைத்தண்டு இப்படி முளைச்சி கிடக்கேன்னு பலங்கொண்ட மட்டும் தம் கூட்டி பிடிங்கினாரு. சுடலை விடுவாரா? நல்லா பூமியை பிடிச்சிக்கிட்டாரு”.
“ஆனாலும் ஆச்சி விடலை. தன் கையில வைச்சிருந்த பன்னரிவாளை எடுத்தார். கீரைத்தண்டு அடியில பிடிச்சி அறுத்தாரு”.
“சுடலை உடனே தன்னோட விளையாட்டை காட்டினாரு. கீரைத்தண்டில இருந்து ரத்தம் கொள கொளன்னு கொட்ட ஆரம்பிச்சிட்டு”.
“பயந்தே போன ஆச்சி மிரண்டு போயிட்டா. ஊத்து மாறி ரத்தம் வருது. ஆனாலும் மனதுல தைரியத்தை ஏற்படுத்திக்கிட்டு ஆச்சி, கீரை தண்டை அப்படியே போட்டுட்டு தயிரு பெட்டியை தூக்கிட்டு, வீட்டுக்கு ஓடியே வந்துட்டா. அங்க நிறைமாத கர்ப்பிணியா அவ மவபுள்ளை பேத்தி பேருகாலத்துக்கு வந்து இருக்கா. இவ வீட்டுக்கு போனவுடனே அவளுக்கு தீடீருன்னு வயிற்று வலி வந்துட்டு”.
“உடனே ஆச்சி போய் பக்கத்து தெருவில இருந்த மருத்துவச்சியை கூட்டிட்டு வந்தா. அவ வந்து பேறுகாலம் பாக்க முயற்சி செஞ்சா. ஆனா அதுக்குள்ள குழந்தை இறந்தே பிறந்துட்டு. எல்லோருக்கும் அதிர்ச்சியா போயிட்டு. நல்லா இருந்த புள்ளைக்கு இப்படி ஆகிபோச்சேன்னு வருத்தப்பட்டா ஆச்சி”.
“ஆனா வந்த மருத்தவச்சி, தீடிருன்னு சாமி வந்து ஆட ஆரம்பிச்சிட்டாவ. இந்த குழந்தை சாவுக்கு காரணம் யாரு தெரியுமா? சுடலை தான். அவரு தயிரு காரி கூட கீரைதண்டுல வந்தாரு. இந்த ஆச்சி தெரியாமலேயே தயிரு கூடையில சுமந்து வந்திருக்கா. குட்டைகரை குளத்தில அவரு வளர்ந்து திருவிளையாடலு காட்டியிருக்காரு. ஆனா பாவி மவா புரியாம அதை அருவா வைச்சி அறுத்து இருக்கா. அதனாலத்தான் பலி வாங்க வந்துட்டாரு சுடலை. அதனால அவருக்கு நிலையம் போட்டு வணங்கு. இல்லாட்டி இன்னும் பல உயிரை பலி வாங்காம விடமாட்டாருன்னு சொல்லி மயங்கி விழுந்துட்டா”.
“எல்லோரும் அசந்தே போயிட்டாவ. ஏதோ ஒரு சிசு பலியாயிட்டு, பெரிய உசுரை காப்பாத்தி தாரும். எங்க குடும்பத்தை முள்மொறிவு இல்லாம காப்பாத்துமுன்னு விழுந்து கும்பிட்டாவ. ஒரு நல்ல நாளுல குட்டைகால் குளக்கரையிலே சுடலை கீரைத்தண்டா வளர்ந்த இடத்தில கல்போட்டு கும்பிட்டாவ. கீரையில இருந்து வந்த சுடலை. அதுனால கீரைத்தண்டு சுடலைன்னு இவருக்கு பேரு வைச்சி கும்பிட ஆரம்பிச்சிட்டாவ”.
ராசுக்குட்டி அந்த கதையை ஆடாமல் அசையாமல் இருந்து கேட்டான்.
“சுடலை சாமி துடியான சாமி. தயிர் கூடை ஆச்சி குடும்பத்தில கொஞ்சம் கஷ்டம் தான் ஆனாலும் கொடை தவறாம கொடுப்பாவ. கோயிலில சுடலை சாமி வேட்டைக்கு போவும் போது கணியான் தன்னோட நாக்கை வெட்டி திரளை கொடுப்பாரு. இதை யாரும் பாக்க கூடாது. கொடையில திரளை கொடுக்கும் போது யாரும் பேச கூடாது. குழந்தை கூட அழக்கூடாது அந்த அளவுக்கு பயபக்தியா இருப்பாவ. ஆனா ஒரு ஆளு சுடலை என்ன பொல்லாத சுடலை. இந்த சுடலைக்கு எப்படித்தான் திரளை கொடுக்காவ பாப்போமுன்னு ஒரு மரத்து மேலே ஏறி கிடந்து பாத்து இருக்காரு”.
“திரளை கொடுக்கும் போது அடக்க முடியாம தும்மிட்டாரு. சுடலை சாமியாடி அதை கவனிச்சிட்டாரு. கண்கள் உருள கோபத்தோட அவரை பாத்து முறைச்சிகிட்டே கோயிலுக்கு வந்திருக்காரு. யப்பா நான் கொடையை ஏத்துக்கிட்டேம்பான்னு ஏளனமா சொல்லியிருக்காரு. மறு நாள் மரத்தில ஏறி வேடிக்கை பாத்தவரு ரத்தம் ரத்தமா கக்கி செத்துட்டாரு”.
“அவரு சாவும் போது தான் பண்ணின தப்பையும் மத்தவங்க கிட்ட சொல்லி, கீரைத்தண்டு சுடலைக்கிடடே கவனமா இருங்கன்னு சொல்லிட்டு செத்துபோயிட்டாரு”.
“இதனால கீரைத்தண்டு சுடலைன்னாலே எல்லோருககும் பயம். இதனால கோயில்கொடை கொடுக்க முடியலை. ஆச்சி வீட்டிலேயும் தனியா கொடை கொடுக்க முடியலை. இதனால சாமிகிட்ட வேண்டி வணங்கி. என்னால பெரிசா கோயில்கொடை கொடுக்க முடியலை. தயவு செஞ்சி நாங்க தேங்கா விடலைபோட்டாலே எங்களுக்கு எல்லா அருளும் தரணுமுன்னு சொல்லி வேண்டி நின்னு இருக்காவ. அதுகப்புறம் அப்படி எல்லோரும் வணங்கி வாரவ. இன்னைக்கும் கீரைதண்டு சுடலை எல்லோருக்கும் அருளை அள்ளித்தாரவ. அந்த ஊருல குழந்தை அழுது கிட்டே இருந்தா, இந்த கோயிலுக்கு காணிக்கை நேர்ந்து போட்டால் குழந்தை அழுவது நிக்குது. பள்ளி கூடத்தில பரிச்சை எழுத பயந்தா இந்த சாமியை வணங்கி நின்னா தைரியம் தானே வந்துரும் ஆமா”.
“அப்படியா ஆச்சி. எனக்கும் பரிட்சை எழுத பயமா இருக்கு. உம் முந்தியில நேந்து காணிக்கை முடிஞ்சு போடு ஆச்சி” என்றான் ராசுக்குட்டி.
“சரி” என்றவாரு 10 பைசாவை எடுத்து தனது முந்தானையில் கீரைத்தண்டு சுடலைக்கு நேர்ந்து முடிந்தாள் ஆச்சி.
“ராசுக்குட்டிக்கு ஒரே சந்தோசம்”.
(தொடர்ந்து ஆச்சி கதை சொல்லுவாள்)


