முன்னாள் முதல்வர் கர்ம வீரர் காமராஜர் அவர்களின் 121வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்திருநகரி பஜாரில் உள்ள காமராஜர் சிலைக்கு பாஜக தெற்கு மாவட்டத்தலைவர் சித்ராங்கதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதன்பின்னர் பொதுமக்களுக்கு 150 லிட்டர் பதநீரை இலவசமாக பனை ஓலையில் பொதுமக்களுக்கு வழங்கி பனை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
பொதுமக்களுக்கு இலவசமாக பதநீர் வழங்கியது குறித்து தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் கூறுகையில்,
பெருந்தலைவர் காமராஜருக்கு பிடித்த பதநீரை பொதுமக்களுக்கு அவரது பிறந்த நாளில் இலவசமாக வழங்கியுள்ளோம். பொதுமக்கள் ஆர்வத்துடன் குடித்து சென்றனர். பனைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றுவதாக சட்டமன்றத்தில் திமுக அரசு தெரிவித்ததோடு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர்களது வாழ்வாதாரத்தை காப்பாற்ற ரேஷன் கடைகளில் கருப்பட்டி மற்றும் பனைப் பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என்றார் அவர்.


