தென்திருப்பேரையில் அம்ரூத் குடிநீர் திட்டப் பணிகளின்கீழ் ரூ.8.41 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டப் பணிகளை கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை பேரூராட்சி மேலரத வீதியில் ரூ.8.41 கோடி மதிப்பீட்டில் அம்ரூத் குடிநீர் திட்டப் பணிகளின்கீழ் 4 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கான அடிக்கல்லை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, இன்று அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். பின்னர் அவர் தெரிவித்ததாவது: இன்று தொடங்கப்படும் குடிநீர் திட்டத்தில் அமைக்கப்படும் இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி 4 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்டது. இதன் மூலம் 5 இடங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படவுள்ளது.
24 மணி நேரமும் இப்பகுதி மக்களுக்கு தண்ணீர் வழங்குவதற்கான திட்டம்தான் இத்திட்டம். இப்பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். தமிழ்நாட்டிலேயே முதன்முதலாக தென்திருப்பேரையில் 24 நேரம் குடிநீர் வழங்கப்படும் திட்டம் தொடங்கப்படுவது பெருமை தரக்கூடிய ஒன்று. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு, எப்பொழுதும் மக்களை விட்டு விலகவும் மாட்டோம், அகலவும் மாட்டோம் என்ற உறுதியோடு மக்களுடைய எதிர்பார்ப்புகளை, கோரிக்கைகளை நிறைவேற்றி தரக்கூடிய அரசாக விளங்கி வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஒவ்வாரு வாக்குறுதிகளாக நிறைவேற்றி வருகிறார். மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை செப்டம்பர் 15ம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் முதல் வழங்கப்படும். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான ஆட்சி, மக்களின் கோரிக்கைகளை ஏற்று மக்களுக்காக பணியாற்றிக்கொண்டிருக்கிற ஆட்சியாகும் என தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் .கனிமொழி கருணாநிதி தெரிவித்தார்.
விழாவில் மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்து தெரிவித்ததாவது: கடம்பாகுளத்தில் கடந்த மழைக்காலத்தில் வெள்ளம் ஏற்பட்டபோது தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் நேரில் சென்று பார்வையிட்டு, நீர்வளத்துறை அமைச்சர் அவர்களை தொடர்பு கொண்டு தற்பொழுது ரூ.36 கோடி மதிப்பீட்டில் புணரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத்தரத்தினை உயர்த்துவதற்காக பல்வேறு திட்டங்களை தந்து கொண்டிருக்கிறார்கள். மேலும், உண்மையிலேயே கஷ்டப்படும் குடும்பத்தலைவிகளுக்கு செப்டம்பர் 15ம் தேதி முதல் மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைக்கவுள்ளார்கள்.
தென்திருப்பேரை பேரூராட்சியில் குடிநீர் திட்டப்பணிகள் நிறைவு பெற்றவுடன் அனைத்து சாலைகளும் சரிசெய்யப்பட்டு சிறந்த பேரூராட்சியாக உயர்த்தப்படும். தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் மக்களின் அடிப்படை தேவைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சர்களை தொடர்பு கொண்டு பணிகளை செய்து வருகிறார். எனவே வர இருக்கின்ற காலத்திலும் நமது பாராளுமன்ற உறுப்பினர் மத்திய அமைச்சராகும் சூழ்நிலையை உருவாக்கும் வகையில் உங்களது ஆதரவினை தர வேண்டும் என தெரிவித்தார்.
விழாவில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தெரிவித்ததாவது: தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதை தலையாய கடமையாகக் கொண்டு ஒவ்வொரு ஊராட்சியிலும், பேரூராட்சியிலும், நகராட்சியிலும், மாநகராட்சியிலும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக அம்ரூத் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் 79 பேரூராட்சிகளை தேர்ந்தேடுத்து குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. நமது மாவட்டத்தில் தென்திருப்பேரை, ஆழ்வார்திருநகரி, வி.புதூர், விளாத்திகுளம் ஆகிய 4 பேரூராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
குறிப்பாக 24 மணி நேரமும் தண்ணீர் வழங்குவதற்காக தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட பேரூராட்சி தென்திருப்பேரை பேரூராட்சிதான். இத்திட்டத்தினை செயல்படுத்த ரூ.8 கோடி தென்திருப்பேரை பேரூராட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் முடிக்கப்பட்டு தென்திருப்பேரை பேரூராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 24 மணி நேரமும் குடிநீர் வழங்குவதற்கு தேவையான உதவிகள் மாவட்ட நிர்வாகம் மூலம் செய்யப்படும் என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சித்தலைவர் அ.பிரம்மசக்தி, தென்திருப்பேரை பேரூராட்சித் தலைவர் ஆ.மணிமேகலை ஆனந்த், துணைத்தலைவர் து.அமிர்தவள்ளி, செயல் அலுவலர் த.ரமேஷ்பாபு, ஏரல் வட்டாட்சியர் கைலாசகுமாரசாமி, ஆவின் தலைவர் சுரேஷ்குமார், ஆழ்வார்திருநகரி ஒன்றியக்குழு தலைவர் தலைவர் ஜனகர், ஆழ்வார்திருநகரி வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராஜன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் செல்வக்குமார், முக்கிய பிரமுகர்கள் உமரிசங்கர், ராமஜெயம் மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


