முன்கதை சுருக்கம்
ராஜதுரையின் கிராமத்தில் எதிரிகள் தீ வைத்தனர். அடிக்கடி தீ வைக்கிறார்கள் இனிமேல் ஓலை குடிசை கட்டக்கூடாது என ராஜதுரையின் ஊர் மக்கள் பிடிவாதமாக இருக்கிறார்கள். இதனால் சொந்தமாக செங்கல் சூளை உருவாக்கும் முதலாளியை ஊருக்கு கூட்டிக்கொண்டு வருகிறார்கள். அனைவருக்கும் ஓடு வீடு கட்டிகொடுக்கும் முயற்சியில் ஈடுபடுகிறான் ராஜதுரை. அவனை மற்ற சமூகத்தினர் பொறாமையில் கொலை பலியில் சிக்கி விடுகிறார்கள். இதனால் தாமிரபரணி ஆற்றங்கரையில் இருந்து சிற்றாற்றங்கரைக்கு ஓடினான்.
இனி.
57. மீண்டும் ஒரு கொலைப்பலி
நன்றாக தூங்கினான் ராஜத்துரை.
அதிகாலையில் எழுந்தான்.
புது இடம். இரவு முழுவதும் நன்றாக தூக்கம் வரவில்லை. இதற்கிடையில் கிராமத்தில் இவன் மீது சுமந்தப்பட்ட கொலைகுற்றம் மனதை மிகவும் வாட்டியது.
எழுந்தவன் அந்த விடிலியை விட்டு வெளியே வந்தான். வெளியே கண்ணுக்கு எட்டும் அளவுக்கு யாருமே இல்லை. பச்சைபசேலேன்று ரம்மியமாக இருந்தது. அங்கே வித்தியாசமான குருவிகள் கூப்பிட்டது. «ம்ற்கு தொடர்ச்சி மலை அருகில் இருந்த காரணத்தினாலும் குற்றால சாரல் அடித்துக்கொண்டிருப்பதாலும் சில் என்று இருந்தது. இதுவே புது உலகம் தான். ஒரு புறம் சாரல காற்றில் வந்து இவன் முகத்தில் பன்னீர் தெளித்தது.
பாவம் நம்ம ஊரில் தான் பனையேறிகள் கஷ்டப்படுகிறார்ள் என்றால் இங்கேயும் அப்படித்தான்.
பனையேறும் அத்தான் , இவன் எழும்பதற்கும் கிளம்பி சென்று விட்டார். பாவம் அவருக்கு பல்வேறு வேலை. குறைந்தது 50 பனை ஏறி இறங்க வேண்டும். மூஞ்சி கருக்கலில் சென்றால் தான் பனையேற முடியும். எனவே அவர் முறுக்குத்தட்டியை தூக்கிப்போட்டுக்கொண்டு கிளம்பிவிட்டார். இவனை பார்க்கவேயில்லை.
காலையில் தம்பிக்கு காபி போட்டு கொடுத்தாள் கற்பகம்.
“யய்யா தப்பா நினைக்காத. காலையில மச்சான் பின்னால போய் பயினி வாங்கனும். பயினி காய்க்கணும். உனக்கு கஞ்சியும் வெங்காயமும் வைச்சிருக்கேன். நீ காலையில சித்தாத்துல போய் குளிச்சிட்டு வந்து சாப்பிடுய்யா”. என்றாள்.
“சரி அக்கா” ராஜதுரை தலையாட்டியானன்.
“யய்யா, நான் வந்து இன்னைக்கு சாயங்காலம் அரண்மனைக்கு கூட்டிட்டு போறேன். அங்க உனக்கு நல்ல வேலை வாங்கித்தாரேன். போசமா இங்கேயே இருய்யா. மனசை போட்டு குழப்பாதே”. என்றாள்.
“சரிக்கா” என்றான் ராஜத்துரை.
கற்பகம் , ஒரு ஓலைப்பெட்டியை தலையில் வைத்துக்கொண்டாள். தொடர்ந்து இரண்டு ஆட்டுகுட்டியை கையோடு பிடித்துக்கொண்டாள். அவள் முன்னால் நடக்க ஆட்டுக்குட்டி அவளை பின்தொடர்ந்தது.
சோர்வுடன் எழுந்தான். அக்காள் நமக்கு உதவுகிறாள். நம் மீது கொலை பழி இருக்கிறது என்று தெரிந்தால் உதவுவாளா?. அவனுக்கு மனம் படபடப்பாகவே இருந்தது.
ஊரை நினைத்தான். “அங்க என்ன நடந்து இருக்கும். என் இன மக்களை என்ன செய்து இருப்பாவ. போலீஸ் என்ன செய்து கொண்ட இருக்கும்”.
“என்னை தேடி இந்த ஊருக்கு போலீஸ் வந்திருமா?”.
எழுந்தான்.
மனதை தைரியமாக வைத்துக்கொண்டான். “வரட்டும் வந்தால் பார்த்துக்கொள்வோம். நாம என்ன கொலையா பண்ணிவிட்டோம்.”
பாவம் இவன் மீது கொலைப்பழி இருக்கிறது என்பதை ஒரு நிமிடத்தில் மறந்து விட்டான்.
தன்னோடு துணிமணிகள் எதையும் எடுத்துக்கொண்டு வரவில்லை. அதை உணர்ந்த கற்பகம் அக்கா அத்தானுடைய சாரத்தினையும் ஒரு துண்டையும் எடுத்து வைத்திருந்தாள்.
அதை தோலில் தூக்கி போட்டுக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்.
சிற்றாறு சில்லென்று இருந்தது. ஒரு மூங்கு முங்கும் போது மனத் தெளிவு ஏற்பட்டது. நம்ம தாமிரபரணி ஆற்றில் கூட இத்தனை குளிச்சி இருக்குமா? என நினைத்தான். அக்கறைக்கு இக்கறை பச்சை என்பார்களே. அதுபோலத்தான் தாமிரபரணியிலேயே குளித்து இருந்துவனுக்கு சிற்றாறு வித்தியாசத்தினை காட்டியது. அதில் குற்றால சாரல் அருவியில் விழுந்த தண்ணீர் அதிக குளிர்ச்சியை காட்டியது.
குளித்து விட்டு வீட்டுக்கு வந்தான். அக்காள் வைத்திருந்த கஞ்சியை எடுத்து குடித்துக்கொண்டே வெங்காயத்தினை கடித்தான். தேவாமிர்தமாக இருந்தது. ஆகா. என்ன ருசி. காட்டுக்குள் இப்படி அமிர்தம் போன்ற உணவு கிடைத்து இருக்கிறதே. என ஆனந்தம் பட்டான். ஆனால் அந்த ஆனந்தம் அதிக நேரம் நீடிக்கவில்லை.
இவனால் இங்கே இருப்பு கொள்ளவில்லை. அப்படியே காலார வீரகேரளம் புதூரை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
*****
சர்க்கிள் இன்ஸ்பெக்டர் மிகவும் கோபமாக இருந்தார். “ராஜத்துரை மீது எப்.ஐ.ஆர் போட்டாச்சு. சாட்சி அய்யரும் மற்றொரு காவலாளியும் . அவன் தப்பவே முடியாது. நிச்சயம் ஜெயில் தண்டனையும் அதுவும் ஆயுள் தண்டனையும் உண்டு. ஆனால் ராஜத்துரையை பார்த்தால் பாவமாக அல்லவா இருக்கிறது”. சர்க்கிள் யோசித்தார்.
“பாவம் என்று சொல்ல முடியாது. அவன் கொலையல்லவா? செய்து இருக்கிறான்”.
“ஏட்டை” என சத்தமாக கூப்பிட்டார் இன்ஸ்பெக்டர்.
ஏட்டையா வந்து, சல்யூட் வைத்தார்.
“ஏமுய்யா ஏட்டு. ராஜதுரை சரவல் இழுக்கிற பையனா?”
“இல்லை எஜமான். எவனுவ கிட்ட கேட்டாலும் தங்கமானவனுன்னு சொல்லுதானுவ”.
“பொறவு எப்படிடே இவன் கொலை பண்ணியிருப்பான்”.
“எனக்கும் எஜமான் சந்தேகமாத்தான் இருக்கு”.
“நல்ல விசாரியுமே? நாளைக்கு அந்த பய பாவம் நம்ம மேலே விழுந்திரக்கூடாது”.
யோசித்தார் சர்க்கிள்.
“நல்ல பையனாவே இருக்கட்டும், நமக்கு டிமிக்கி கொடுத்துட்டு ஏன் ஓடுதான். பிரச்சனை இல்லாம ஓடுவானா?” என்று கேள்வி கேட்டார் சர்க்கிள்.
“ஆமாம் எஜமான் . அவன் ஓடுனதால எனக்கு சந்தேகமாத்தான் இருக்கு”.
“ஆமா எதைக்கேட்டாலும் மண்டையை மண்டையை ஆட்டும். ஒழுங்கா ஒண்ணைத்தையும் கண்டு பிடிச்சு சொல்லதேயும்”.
“சரி எஜமான்”.
“என்னவே சரி. அவன் அந்த டைமில கிணத்து பக்கம் ஏன் போவனும். அங்க இவனுவ இடம் எதுவும் இருக்கா?. தண்ணீ கிண்ணி பாய்க்க போயிருப்பானா?”
“ஒண்ணுமில்லை. எஜமான். இவன் போவ அவசியமில்லை”.
“பொறவு எதுக்கு போவணும்”.
அமைதியாக இருந்தார் ஏட்டு. சர்க்கிள்தான் தொடர்ந்தார்.
“அது அய்யர் கிணறு தானே?”
“ஆமாம் எஜமான்”.
“அங்க செத்து போன எழவெடுத்தவன் போலாம். ஆனா இந்த ராஜதுரை பைய எதுக்கு போனாம்”.
“இவுக இரண்டு பேருக்கும் மேட்டிவ் இருக்கு எஜமான்”.
“ம்”.
“ஏற்கனவே இரண்டு பேரும் அடிச்சிட்டு உருண்டுருக்காவுன”.
“எப்போ”.
“ஒரு ஆறு மாசம் முன்னால சாணக்குடி தீ பிடிச்சிதுல்லா. அப்ப செத்து போனவன்தான் தீ வைச்சிருக்கான். அவனை ராஜ துரை நையபுடைச்சி விட்டுருக்கான்”.
“அதை விசாரிச்சி எப்ஐஆர் போட்டீரா?”
“யாரும் கம்ளய்ண்ட் தரலை. இரண்டு சைடிலில் விசாரிச்சேன். திருட்டு பயலுவ அப்படி ஒரு சம்பவமே நடக்கலைன்னு சொல்லுதானுவ. இவன் பண்டார விளையில போய் காலை சரி பண்ணிட்டு வந்து கம்முன்னு உட்காந்துக்கிட்டான். ராஜதுரைக்கிட்ட கேட்டா ஒண்ணுமே தெரியாதுன்னு சொல்லிட்டான்”.
“பொறவு உமக்கு எப்படி தெரியும்?”
அரசல் புரசலா கேள்விப்பட்டேன்.
“சரி அதுதான் அடிக்கு அடி சரின்னு போச்சே.அதுக்காக இவனை அவன் கொன்னானா?”.
“அப்படித்தான் அய்யர் சொல்லுதாரு”.
“அய்யர் புடுங்கினாரு. நீ விசாரிச்சியாய்யா?”
“நல்லா விசாரிச்சேன் அய்யா”.
“அப்போ ராஜதுரை கொலையாளித்தானா?”
“அதுதான் சந்தேகமா இருக்கு எஜமான்”
“என்னவே ஏட்டு சொல்றீரு?”
“ராஜதுரை கொலை செய்யற அளவுக்கு போவனா தெரியலை?”
“அப்போ கொலையாளி யாரு?”
“கண்டு பிடிக்கணும். ஆனா அதுக்கு முன்னால இந்த கேஸ் பிரச்சனை தீக்க ராஜதுரையை கைது பண்ணணும்”.
“அதைத்தான் சொல்லுதேன். இவன் என்ன கண்டம் விட்டு கண்டமா ஓடிப்போயிட்டான். இங்கன கூடித்தான எங்கனையாவது கெடப்பான். இவனை பிடிக்க முடியலையாக்கும்”.
“பிடிச்சிருவோம் எஜமான்”.
“ஏட்டு இவன் எங்கே இருக்கானுன்னு பாருங்க. முதலுல அவனை பிடியுங்க. நல்லா விசாரிங்க. உண்மையான திருட்டு பய தப்பிடக்கூடாது. இந்த பயலுவ அரிவாளை கையில வைச்சிருப்பானுவ. ஆனா அது பாலையை மட்டும் தான் ஜீவுமுன்னு நினைச்சிக்கிட்டு இருப்பானுவ. இதுவும் ஆளை வெட்டுமுன்னு தெரிஞ்சும் அந்த காரியத்தை செய்ய நினைக்க மாட்டானுவ”.
“ உண்மைதான் எஜமான். நான் ராஜதுரையை கண்டு பிடிக்க«ன்”.
“அவனை கைது பண்ணலனாலோ. இல்லாட்டி அவன் தப்பி ஓடிட்டாலோ. அவ்வளவுதான் கொலை பழி இவன் மேலை தான் விழும். பொறவு என்னவே செய்ய”
மீட்டிங் முடிந்து வெளியே வந்த ஏட்டு கோபமாக இருந்தார். “சின்னபய நமக்கு டிமிக்கி கொடுக்கான். எழவு நம்ம கிட்ட என்ன நடந்ததுன்னு சொன்னா கூட காப்பாத்தி விடலாம். வெறுவாக்கெட்ட பய நம்மள புண்ணால்லா ஆக்குதான்”. என்று சலித்தப்படி சைக்கிளை எடுத்துக்கொண்டு கிரமத்துக்கு கிளம்பினார் ஏட்டு.
******
ராஜதுரை சித்தாற்று கரையில் நடந்த படியே வீரகேளம் புதூர் வந்தான்.
அந்த ஊரே வித்தியாசமாக இருந்தது. அருகில் வீராணம் கால்வாய். அந்த கால்வாயின் அணைக்கட்டு பகுதியை பார்த்தான்.
அதில் இருந்து வெட்டிய கால்வாய், அதன் அருகில் கால்வாயின் இருபுறமும் அரண்மனை ரொம்ப குளிர்ச்சியாக இருந்தது. அரண்மனைக்குள் வெள்ளம் புகுந்து விடக்கூடாது என அதற்கு முன்பே வடிகால். அந்த இடத்தில் அமைப்பே மிக வித்தியாசமாக இருந்தது.
அப்படியே காலரா நடந்து வந்து அரண்மனையை பார்த்தான்.
மிகப்பிரமாண்டமாக இருந்தது.
இங்கு வேலைக்கு சேர்ந்தால் பாதுகாப்பாகத்தான் இருக்கும். வேலை கிடைக்குமா?.
யோசித்தான். ஆனாலும் நம்பிக்கையோடு நடந்தான்.
சிறிய பஜார் தான். அதில் ஒரு டீக்கடை . அந்த கடையில் இரண்டு மூன்று பேருத்தான் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் ஜமீன்தார் வரலாற்றை பெருமையாக பேசிக்கொண்டிருந்தார்.
“நம்ம ஊரு ஜமீன்தார் பெரிய ஆளுடே. ஊரு உலகமெல்லாம் பேரு வாங்கினவரு”.
ராஜதுரை அவரது முகத்தினை பார்த்து அருகில் அமர்ந்தான்.
“இங்குள்ள அரண்மனை எப்போதும் குளிர்ச்சியாக இருக்க ணுமுன்னு ஜமீன்தார் அரண்மனை வளாகத்துக்குள்ள கால்வாய் வெட்டி வைச்சிருக்காரு. அந்தக் கால்வாய் அரண்மனைக்கு குளிர்ச்சியை கூட்டியதோடு, நிறைய வரலாற்றை உள்ளடக்கி இருக்கிடே” என்றார்.
அவர் சொல்லுவது ஒருபுறம் இருக்கட்டும். இந்த இடத்தில் அரண்மனை பற்றி பேசித்தீரவேண்டும்.
ஏன் என்றால் கண்டிப்பாக அக்கா அரண்மனையில் வேலைக்கு சேர்த்து விடுவார். முதலில் அரண்மனை பற்றிய விவரத்தினை அறிய வேண்டும்.
மெதுவாக அந்த தாத்தாவிடம் பேச்சுக்கொடுத்தான். அவர் வரலாற்றை பிட்டு பிட்டு வைத்தார்.
அந்த வரலாற்றை முதலில் பார்த்தால் தான் ஊத்துமலை ஜமீன்தார் வரலாறு நமக்கு தெரியும். அதன் பிறகு அங்கு ராஜதுரை வேலைக்கு சேரவேண்டுமா? வேண்டமா? என முடிவு செய்வோம்.
தாத்தா சொன்ன ஊத்துமலை வரலாற்றினை சுருக்கமாக காணுவோம்.
*****
தமிழ் வளர்த்த இருதால மருதப்பர். மிகவும் விசேசமானவர். தமிழை வளர்த்தவர். ஆனால் இவர் கதை மிகவும் சுராஸ்யமானது.
ஊத்துமலை ஜமீன்தார்களில் குறிப்பிடத்தக்கவர் இருதாலய மருதப்ப தேவர். இவர் 18 ம் நூற்றாண்டுகளில் ஆட்சி புரிந்தார்.
மன்னர் தமிழ்ப் பணியையும், ஆன்மீகப் பணியையும் இரண்டு கண்களாகப் போற்றி வந்தார். ஜமீனுக்கு உட்பட்ட ரங்கநாபுரம் கிராமத்திலுள்ள நிலங்களை ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி ஆலயத்தின் வளர்ச்சிக்காக எழுதி வைத்தார். சுப்பையாபுரம் கிராமத்திலுள்ள நிலங்கள் அனைத்தையும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும் வழங்கினார். அது மட்டுமல்லாமல் அம்பை அருகே உள்ள மன்னார் கோவிலில் அமைந்துள்ள ஆலயத்தின் கொடிமரம் மருதப்பர் செலவில் வழங்கப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் வீரகேரளம்புதூர் நவநீதிகிருஷ்ண சுவாமி கோவிலுக்கு இவர் ஆற்றிய தொண்டு ஏராளம். இவர் கீழப்பாவூர், வீராணம், கிருஷ்ணபேரி பகுதியிலுள்ள நிலங்களையும் எழுதி வைத்தார். அகரம் சிவன் கோவிலுக்கு ஊத்துமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள நிலங்கள் கொடுக்கப்பட்டன. கொல்லம் ஆண்டு 348 முதல் (கி.பி.1173) சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழாவும் ஊத்துமலை மன்னர்களால் நடத்தப்பட்டு வருகிறது.
இதில் என்ன விசேஷம் என்றால், சங்கரன்கோவில் தயார் ஆவுடையம்மாளுக்கு தாய்வீட்டு சீனதமே ஊத்துமலை ஜமீன் மூலமாகத்தான் இன்று வரை கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
மன்னர் இருதப்பரின் தந்தை நவநீதகிருஷ்ண பாண்டியன், தாயார் பெரிய நாயகி நாச்சியார் ஆவார்கள். மன்னரின் தாயார் சொக்கம்பட்டி ஜமீன்தாரின் சகோதரியாவார். ஆகவே சிறு வயது முதலே செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்தார் மருதப்பர். கேட்ட பொருளை உடனே கொண்டு வர வேண்டும் என்ற கட்டளையுடனும் வாழ்ந்து வந்தார்.
அப்போது தான் ராஜாவுக்கு காதல் வந்தது. சாதாரணமாகவே கேட்ட பொருளை வேண்டும் என்று கேட்டு சொல்லும் ராஜா, காதலியை மட்டும் விருப்பப்பட்டு கேட்டு பின் வேண்டாம் என்று விடுவாரா? ஆம், இந்த ராணியாகத்தான் ஒரு ராஜ்யம் உருவானது.
ஊத்துமலையில் இருந்து அரண்மனை வீரகேரளம்புதூருக்கு நகர்ந்து வந்தது. எப்படி? அது ஒரு சுவரஸ்யமான வரலாறு, அந்த வரலாற்றுக்கு சொந்தக்காரர், ராணி மீனாட்சி சுந்தர நாச்சியார். இவர் தான் மன்னர் மருதப்பரின் காதல் மனைவி. ராணியின் பிறந்த ஊர் குருந்தன்மொழி. இவரின் தந்தை பெயர் மருதப்பத் தேவர். தாயார் பெயர் தங்கம்மாள். பெற்றோர்கள் நாச்சியாரை நல்ல குணமுள்ள பெண்ணாக வளர்த்து வந்தார்கள். அழகு நிறைந்த பெண் அறிவும் அவருக்கு அதிகம்.
ஒரு நாள் வரி வசூல் செய்ய மன்னர் குருந்தன் மொழிக்குச் சென்றார். அங்கே மீனாட்சி சுந்தரநாச்சியாரை கண்டார். அவரது அழகில் மயங்கினார். உடனே அவரைத் திருமணம் செய்ய நினைத்தார்.
ஜமீன்தார் நினைத்தால் நடக்காமல் இருக்குமா என்ன? இதற்கு மீனாட்சி நாச்சியாரின் சொந்தங்கள் சம்மதம் தெரிவித்தது. ஆனால் மருதப்பரின் தாயார் எதிர்த்தார். தான் சொக்கம்பட்டி ஜமீன். அதுபோல தன் மகனுக்கும் ஒரு ஜமீன்தார் வீட்டில் இருந்து தான் பெண் வர வேண்டும் என்று நினைத்தார். ஆனால், மகன் மிகவும் பிடிவாதமாக எனக்கு இந்தப் பெண் தான் வேண்டும் என்று கூறி விட்டார். எனவே மகனின் விருப்பத்துக்காக தாயார் மனதை மா£ற்றிக் கொண்டார்.
ஆனால், பெண் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். நான் இருக்கும் குருந்தன்மொழி மிகவும் செழிப்பான இடம். இந்த இடத்தில் எப்போதுமே விவசாயம் நடக்கும். ஆனால், ஊத்துமலை அப்படி அல்ல. வானம் பார்த்த பூமி. எனவே அந்த பூமிக்கு நான் ராணியாகச் செல்ல முடியாது என்று திட்டவட்டமாக மறுத்து விட்டார்.
மருதப்பர் அப்படியே இடிந்து போய்விட்டார்.
எனக்கு அந்த பெண் வேண்டும். அதற்காக நான் என்ன செய்ய வேண்டும் என்றாலும் செய்வேன் என்று கூறிவிட்டு பெண்ணிடம் நேரில் சென்று உனக்காக நான் என்ன செய்ய வேண்டும் என்றாலும் தயாராக இருக்கிறேன். தயவுகூர்ந்து என்னை மட்டும் வேண்டாம் என்று சொல்லிவிடாதே என்று கேட்டார்.
அப்படியென்றால் எனக்குக் குளிர்ச்சியான இடத்தில் அரண்மனை வேண்டும். அதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று அந்தப் பெண் கூறிவிட்டார்.
உடனே அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டார். உடனடியாக சிற்றாற்றில் ஒரு அணை கட்டினார். அந்த அணையில் இருந்து ஒரு கால்வாய் வெட்டினார். அந்த கால்வாய்க்கு இருபுறமும் அரண்மனையை கட்டினார், கால்வாய்க்குச் செல்லும் மேல்பகுதியை மூடி இரண்டு அரண்மனைக்கும் இடையை போக்குவரத்தை ஏற்படுத்தினார். இதனால் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும் அரண்மனை ஏற்படுத்தப்பட்டது.
இந்த இடம் தான் ராஜத்துரை பார்த்து வந்த இடம். இந்த இடத்தில் அரண்மனை அமைத்த காரணத்தினால் ஊதுதுமலையில் இருந்து அரண்மனை வீரகேரளம்புதூருக்கு மாறியது. ராணி மிகவும் சந்தோஷமடைந்தார். ஒரு காலத்தில் மும்தாஜ்க்காக தாஜ்மகால் கட்டிய ஷாஜகானைப்போல் மருதப்பர் அவருக்கு தெரிந்தார். உடனே திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்து விட்டார்.
வீரகேரளம்புதூர் அரண்மணையில் வைத்து ராணி மீனாட்சி சுந்தர நாச்சியாருக்கும் மன்னர் இருதாலய மருதப்பர் தேவருக்கும் 1864ம் ஆண்டு மே மாதம் 25ம் தேதி திருமணம் கோலாகலமாக நடந்தது. இந்த அரண்மனையில் தான் இவருவரும் பல ஆண்டுகள் வாழ்ந்தார்கள்.
இதற்கிடையில் ராஜாவுக்கு இன்னொரு பிரச்சனையும் ஏற்ப்பட்டது.
குருக்கள்பட்டி அழகப்ப தேவர், மருதப்பத் தேவரின் நண்பர். இவர் மன்னர் வேட்டைக்குச் செல்லும்போதெல்லாம் உடன் வருவார். ஒருசமயம் இருவரும் காட்டுக்குள் சென்று கொண்டிருந்த போது நாகப்பாம்பு ஒன்று மருதப்பர் முன்வந்து படமெடுத்து ஆடியது. சிறிது நேரத்தில் தீண்டி விடும் நிலையில், அழகப்பத் தேவர் ஒரு வாளை எடுத்து நாகத்தின் தலையைச் சீவினார்.
அதிர்ந்து போன மருதப்பர். ஒரு நிமிடத்தில் தன்னுடைய உயிர் தப்பித்து விட்டது. அதற்கு காரணம் நண்பர் தான்.
அவரை அப்படியை நெஞ்சோடு நெஞ்சு கட்டிக் கொண்டார். தன்னிடம் இருந்த குதிரை ஒன்றை அவரிடம் கொடுத்தார். அதோடு மட்டுமல்லாமல் உனக்கு என்னவேண்டும் என்றாலும், எப்போது வேண்டும் என்றாலும் கேள் தருகிறேன் என்று வாக்குறுதியும் கூறியிருந்தார்.
இந்தச் சம்பவத்துக்குப் பின்பு தான் ராணியை திருமணம் முடித்தார். அரண்மனைய வீரகேரளம்புதூருக்கு மாற்றினார். ஆனாலும் ஊத்துமலையில் முகாம் இருந்தது.
ஒருநாள் மாலையில் முகாம் அலுவலகத்துக்கு புறப்பட்டார். தற்போது ஊத்துமலையில் ஆர்.சி.பள்ளி இருக்கும் இடத்தில் அரண்மனையும், ஜமீன் அலுவலகமும் இருந்தது. மன்னர் மருதப்பர் ராணா, குருக்கள்பட்டி, இலந்தைக்குளம், கரிசல்குளம் போன்ற முகாம் அலுவலகங்களுக்கு பயணம் செய்தார்.
ஊத்துமலையிலிருந்து குருக்கள்பட்டி முகாம் அலுலகம் செல்லப்பாதை இருந்தது. பெரும்பாலும் ஜமீன் வாகனங்கள், வண்டிகள் மட்டுமே அப்பாதை வழியாகச் செல்லும். தற்போதும் அந்தச் சாலை குருக்கள்பட்டி பிலாத்து என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. விசாலமான பாதையாக இருந்த அப்பகுதி இன்று சிறிய ஓடையாகச் சுருங்கி விட்டது.
குருக்கள்பட்டி செல்லும்போதெல்லாம் அழகப்பரின் வீட்டுக்கு மருதப்பர் செல்வது வழக்கம். அழகப்பத் தேவருக்கு ஒரே ஒரு பெண் குழந்தை இருந்தது. அவர் பெயர் அன்னபூரணி. தன் உயிரைக் காப்பாற்றிய அழகப்பருக்கும் குதிரையும், பொன்னையும், பொருளையும் கொடுத்ததோடு, உன் மகளின் வாழ்க்கைக்கு நான் பொறுப்பு என்று சொல்லி இருந்தார். அதாவது பெண்ணை திருமணம் முடித்துக் கொடுப்பதற்கு நான் பொறுப்பு என்று சொல்லியிருந்தார். ஆனால் அழகப்பர் அதை வேறு விதமாக நினைத்துக் கொண்டார். தன் மகளை மணமுடிப்பதாக வாக்கு கூறிவிட்டு, தற்போது வேறு பெண்ணைத் திருமணம் முடித்து விட்டாரே என்று வருந்தினார். எனவே, அவர் திருமணத்திறற்கு வரவில்லை.
மீனாட்சி நாச்சியாருடன் திருமணம் முடிந்த அன்று மாலை திருமணத்திற்கு குருக்கள்பட்டி அழகப்பத் தேவர் ஏன் வரவில்லை? என்று குருக்கள்பட்டி ஆய்வாளரிடம் கேட்டார். அதன்பின் அழகப்பத் தேவரை அழைத்து வரச்சொன்னார். மன்னர் ஆள் அனுப்பியும் அழகப்பத்தேவர் வரவில்லை. எனவேதான தற்போது அழகப்பத்தேவரின் வீட்டுக்குச் சென்றார் மருதப்பர்.
அங்கே அழகப்பர் அமைதியாக அமர்ந்திருந்தார்.
ஏன் ஓலை அனுப்பியும் திருமணத்துக்கு வரவில்லை. ஆள் அனுப்பியும் ஏன் அலுவலகம் வரவில்லை என்றார்.
என் ஒரே சொத்து என் மகள்தான். அவளின் வாழ்க்கைக்கு தாங்கள் பொறுப்பென கூறினீர்கள். இப்போது வாக்கு மீறிவிட்டீர்களே என்று கேட்டார் அழகப்பர்.
சற்றுநேரம் அமைதியாக இருந்தார். நான் ஒன்று சொல்ல, இவர் வேறு அர்த்தம் எடுத்துக் கொண்டார். ஆனால், என்ன சமாதானம் சொன்னாலும் புரிந்து கொள்ள மாட்டார் என்று அமைதியாக நின்றார்.
சரி.. உங்கள் கோபம் தணிய வேண்டும் என்றால் நான் என்ன செய்ய வேண்டும்?
அழகப்பர் அழுத்தமாகச் சொன்னார். நீங்கள் என் மகளை கண்டிப்பாகத் திருமணம் செய்ய வேண்டும்.
எப்படி முடியும்? அன்னபூரணிக்கு அப்போது 8 வயதுதான். பூப்பெய்ததும் இல்லை. அது முறையும் இல்லை. ஆனால், இதை அழகப்ப தேவரிடம் சொன்னால் கேட்பாரா, கேட்க மாட்டார். எனவே கண்டிப்பாக அவரை சந்தோஷப்படுத்த வேண்டும்.
அழகப்பத் தேவரின் வருத்தம் நீங்க வேண்டும் என்றால் அவர் சொன்னபடி கேட்க வேண்டும். இல்லையென்றால் அவரது கோபம் தனியாது எறு யோசித்த மருதப்பர் மாலை வாங்கி வரச்சொல்லி பணியாளர்களை அனுப்பினார்.
அந்த பெண்ணு மாலை போட்டு திருணம் செய்து கொண்டார். இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால் அன்னபூரணிக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.
காலையில் மீனாட்சி சுந்தரியுடன் வீரகேரளம்புதுரில் முறைப்படி திருமணம் செய்து கொண்டவர். அன்று மாலையே மருதப்பர்குருக்கள்பட்டி அன்னபூரணியைத் திருமணம் செய்து கொண்டார்.
இந்த திருமணம் காட்டுத்தீப்போல் எட்டுத்திக்கும் பரவியது. மருதப்பரின் தாயார் பெரியநாயகி நாச்சியார் வெகுண்டு எழுந்தார். உடனே, குருக்கள்பட்டியை நோக்கி வில்லுவண்டியில் கிளம்பினார்.
வில்லுவண்டி அழகப்பத்தேவர் வீட்டு வாசலில் நின்றது.
மருதப்பருக்கு, தாயார் கோபத்துடன் வந்திருக்கும் விஷயம் தெரிந்தது. உடனே வெளியே வந்தார். தாயாரிடம் மன்னிப்பு கேட்டார். “தாயே, எனது உயிரைப் காப்பாற்றிய அழகப்பத்தேவருக்கு நன்றி செலுத்தும் வகையிலே அவரது மகளுக்கு தாலி கட்டினேன்” என்று மருதப்பர் சொன்னார்.
“போதும் நிறுத்து, காலையில் ஒரு பெண்ணுடன் திருமணம. மாலையில் மற்றொரு பெண்ணுடன் திருமணமா? இதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்” என்று கூறிவிட்டு எனக்கு நீ உண்மையான மகனாக இருந்தால் உடனே என்னோடு புறப்பட்டு வா” என்று கூறிவிட்டார்.
பெரிய ராணி உடனே புறப்பட்டு வீரகேரளம்புதூர் வந்தார். மருதப்பரும் அன்னையின் பின்னாலேயே புறப்பட்டு வந்து விட்டார். ஆனாலும் பெரிய ராணிக்கு கோபம் தணிந்த பாடில்லை. மறுநாள் காலையில் எழுந்த ராணி, மருமகள் மீனாட்சியிடம் , “இந்தத் தவறு செய்த என் மகனை நான் பார்க்க விரும்பவில்லை. இனிமேல் அவன் என்னைப் பார்க்கக் கூடாது. நான் என் பிறந்த வீட்டுக்குச் செல்கிறேன்” என்று பிடிவாதமாக கூறிவிட்டு சொக்கம்பட்டிக்கு சென்று விட்டார்.
அதன்பிறகு பல முறை அன்னையைப் பார்க்க மருதப்பர் சென்றும்கூட தான் அவரை பார்க்க விரும்பவில்லை என்று மறுத்துள்ளார். அதோடுமட்டுமல்லாமல் இரண்டு ஆண்டு கழித்து வீரகேரளம்புதூர் வந்தார். அரண்மனையில் தங்கினார். ஆனாலும் கூட மருதப்பரைப் பார்க்கவில்லை. காலம் கடந்தது.
பெரிய நாச்சியார் இறந்து விட்டார். அதுவரை மருதப்பரை பார்க்கவில்லை. இதில் கொடுமை என்னவென்றால், பெரிய நாச்சியார் இறந்தபிறகு தான் குருக்கள்பட்டி அன்னபூரணி பூப்பெய்தினார்.
அழகப்பப் தேவருக்கும் மருதப்பத்தேவருக்கும் பகை ஏற்பட்டது. தனது மகள் ஏமாற்றப்பட்டதாகவே அழகப்பத்தேவர் நினைத்தார். இதனால் “ராணி போல் வாழ வேண்டிய தன் மகள் இப்படி குருக்கள்கோட்டை குடிசை வீட்டில் வாழ்கிறாளே” என்று வருத்தப்பட்டார்.
இதை அடிக்கடி தன்னுடைய மகன்களான சின்ன மகாலிங்கம், பெரிய மகாலிங்கம் ஆகியோரிடம் கூறிவந்தார்.
எனவே, அன்னபூரணியின் சகோதரர்கள் மருதப்பர் இல்லாத சமயத்தில் வீரகேரளம்புதூர் அரண்மனையில் கொண்டு வந்த அன்னபூரணியை விட்டனர்.
பால் மணம் மறந்து பருவ மணம் எட்டியிடிருந்தாள் அன்னபூரணி. ஆனாலும் உலகியல் அறிவே சரியாக புரிபடாத நிலையிலும் இருந்தார். அன்னபூரணிக்கு ஒரே வியப்பு. வீரகேரளம்புதூர் அரண்மனையில் ஏற்கனவே மன்னருக்கு மனைவி இருப்பதை அறிந்தார். தன் தந்தையை நினைத்து நொந்து கொண்டார்.
தனது வாழ்க்கையை இப்படி வீணடித்து விட்டாரே தந்தை, என்று அவரை சபிக்க ஆரம்பித்து விட்டார்.
அரண்மனையில் இருந்தால் இருக்கட்டும் என்று மருதப்பர் நினைத்தாலும் கூட, அழகப்பரின் ஒவ்வொரு செயலும் மருதப்பரை வருத்தப்பட வைத்தது.
மன்னர் பரிசாக ஒரு குதிரையை கொடுத்து இருந்தாரே, அந்த குதிரையை வாடகைக்கு விட்டு சம்பாதிக்க ஆரம்பித்தார் அழகப்பர். இது மிகவும் மன்னரை அவமானப்படுத்தியது.
குருக்கள்பட்டி கிராம முன்சீப்பைப் பார்த்தார். தனக்கும் அன்னபூரணிக்கும் நடந்த திருமணத்துக்கு விவாகரத்து வேண்டும் என்று மனுதாக்கல் செய்தார். முடிவில் அன்னபூரணிக்கு விவாகரத்து கிடைத்தது.
தனக்கு திருமணம் நடந்தததோ, விவாகரத்து நடந்தததோ தெரியாத அன்னபூரணியின் நிலை தான் பரிதாபம்.
அதன்பின் அழகப்பத்தேவருக்கும், மருதப்பருக்கும் பிரச்சனை தீவிரமானது. சண்டை பெரிதானது. இதனால் கடும் கோபத்துடன் மருதப்பர், அழகப்பரை நோக்கி மோத தயாரானார். மன்னரால் தனக்கோ, தனது குடும்பத்தினருக்கோ தீங்கு நேரலாம் என நினைத்து அழகப்பத்தேவர் குடும்பத்துடன் கிறிஸ்துவ சமயத்துக்கு மாறினார்.
அந்த காலத்தில் கிறிஸ்துவ சமயமும், ஆங்கிலேய அரசாங்கமும் இணைந்து செயல்பட்டன. எனவே, கிறிஸ்துவ பிஷப் சொல்வதை யாராலும் தட்ட முடியாது.
ஊத்துமலை ஜமீன் பிரச்சனையில் சமாதாத் தூதுவராக வந்த கிறிஸ்துவ பிஷப், மருதப்பரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பேச்சுவார்த்தை முடிவுக்கு வரவில்லை.
ஆனாலும், அன்னபூரணியை வீரகேரளம்புதூர் அரண்மனையில் உள்ள ஒரு பகுதியான லஷ்மி சாவடியில் தங்க வைத்தார். இது மருதப்பரை மிகவும் பாதித்தது.
இதற்கிடையில் மருதப்பர் இறந்தார். ஆன்மிக அன்பர்களும், தமிழ்ப் புலவர்களும் மன்னரை பர்க்க வந்தனர். சில மாதங்களுக்கு முன்பு தான் சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியாரும் சிறு வயதில் மரணமடைந்து இருந்தார். அவருடைய தமிழ்ப் பணி, ஆன்மிக பணிமனதில் நிறைந்திருந்த பல்வேறு ஆவல்களை பூர்த்தி செய்ய இயலாத நிலையில் மன்னரும் மரணமடைந்தார். கலங்கி விட்டார். ராணி செய்வதறியாது தவித்தார்.
தன் மன்னரைப் போலவே மாவு பொம்மை ஒன்றை தயார் செய்தார். அவர் உயிரோடு இருப்பது போலவே அவருக்கு உடை அணிந்து வைத்தார். அந்த மாவு பொம்மை காலடியைத் தொட்டு தினமும் தனது வாழ்க்கையை நடத்த ஆரம்பித்தார்.
அந்த மாவு பொம்மை தற்போதும் வீரகேரளம்புதூரில் உள்ள அரண்மனையில் அவரது வாரிசுகள் பத்திரமாக வைத்து பாதுகாத்து வருகிறார்.
துயரம் கொண்ட ராணி யாதுமறியாது தவித்து நின்ற காலங்களில் அவருக்கு உண்மையாக உதவுபவர் யாருமில்லை. வீரகேரளம்புதூரில் ஏற்பட்ட காலராவில் தத்து புத்திரன் நவநீத கிருஷ்ண மருதப்பரும் மரணமடைந்தார்.
தன் வயிற்றில் புத்திர பாக்கியம் இல்லை என்ற கவலை ஒரு பக்கம். கொண்டவரும் மறைந்து விட்டார். இடையில் வந்த தத்து புத்திரனும் மரணமடைந்து விட்டான். அன்னபூரணியின் ஆட்களால் இடையூறு வேறு. இதனால் பழைமையான ஜமீனை நிர்வாகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
ஆனாலும் மருத்தப்பர் பல்வேறு நல்ல விசயங்களை செய்துள்ளார்.
இருதாலய மருதப்பர் என்று செல்லமாக அழைக்கப்பட்ட மருதப்பத் தேவரின் வாழக்கை வரலாறு, சில சோகங்களையும் சுவாரஸ்யங்களையும் கொண்டு இருந்தாலும் கூட அவர் தமிழுக்கு ஆற்றிய பணி மிகவும் சிறந்தது.
ஊத்துமலை ஜமீன்தார் கழுகுமலைக்கு காவடி எடுத்துச் சென்ற போது அவருக்கு சிரம பரிகாரமாக ரெட்டியாரால் பாடப்பட்டவையே காவடிச் சிந்தாகும். இதற்கு ராக தாள அமைப்புகளை உருவாக்கியவர் கரிவலம் வந்த நல்லூரைச் சேர்ந்த பொன்னம்மாள் எனக் கூறப்படுகிறது.
காவடிச் சிந்தின் முதல் பதிப்பு ரெட்டியார் காலத்திலேயே அச்சாகி வெளி வந்தது. இவை திருநெல்வேலி நெல்லையப்ப கவிராஜரின அச்சுக்கூடத்தில் ஊத்துமலை ஜமீனின் பொருளுதவியுடன் பதிக்கப்பட்டது. எளிமையும், இனிமையும், பக்திமையும் கொண்ட இக்காவிச் சிந்து திச்ரம், கண்டம், மிச்ரம் போன்ற நடைகளைப் பெற்றிருந்ததால் இசை வல்லுநர் பலரும் விரும்பிப் பாடும் பெருமைச் சேர்ந்துள்ளது.
சொல்லப்போனால் காவடிச்சிந்தின் பெரும் புகழ், ஐ.நா.சபை வரை பரவியது. ஆம், இசைப் பேரறிஞர் எம்.எஸ்.சுப்புலெட்சுமி அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்தின் அருமை கருதி அதனை ஐநா சபையில் பாடி பெருமை சேர்த்துள்ளார்.
அந்தக் காத்தில் புலவர்களது புலமையைச் சோதிப்பதற்கு அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்து மாதரி உம்மால் பாட முடியுமா? என்றே கேட்பார்களாம். இதிலிருந்து காவடிச்சிந்துக்கு எவ்வளவு மதிப்பு இருந்தது என்பதை அறிய முடிகிறது.
ரெட்டியாரின் காவடிச் சிந்துகளில் இருபத்திரண்டு அச்சேறியவை ஆகும். இன்னும் பல சிந்துகள் அச்சேறாமல் உள்ளது என்று கூறுவார்கள். மேலும் வீரகேரளம்புதூர் பற்றி இவர் இயற்றிய நூலான வீரைத் தலபுராணம், வீரை நவநீத கிருஷ்ணசாமி பதிகம், வீரை அந்தாதி, வீரை சிலேடை வெண்பா, வீரைப் பிள்ளைத் தமிழ், கோமதி அந்தாதி முதலியவை சிறப்பானவையாகும். அவைகள் அச்சிட பெற்றதாக தெரியவில்லை.
கழுகுமலை கந்தன் மீது இவருக்கு இருந்த தெய்வ பக்தியை கண்டு நெல்லை மாவட்ட குறுநில மன்னர்கள் இவரை பாராட்டினர். கே.வி.சீனிவாச அய்யங்கார் 1928ல் தாம் வெளியிட்ட சங்கீத கோவையில் ரெட்டியாரின் காவடிச் சிந்தின் இசையழகை பாராட்டியுள்ளார். மேலும் ஏட்டுப்பிரதிகளாகவே இருந்த காவடிச் சிந்தை கு.அழகிரிசாமி வெளியிட்டார். குறிப்பாக கம்பன், ஜெயங்கொண்டார், அகத்தியர் போன்றவர்கள் ரெட்டியாரைக் கவர்ந்த கவிஞராவார்கள்.
யமகம், மடக்கு, திரிபு, சந்தம் முதலிய அமைப்புகளோடு செய்யுளை மிக விரைவில் இயற்றவல்லவர். இவரது இயல்பான பேச்சிலே சிலேடை மிளிரும். சித்திர கவிக்கு இவர் இணையற்றவர். காவடிச்சிந்தின் முறை ஏற்பட்டது இவரால் தானே… இவ்வாறு ரெட்டியார் பற்றி உ.வே.சா பாராட்டிக் கூறியுள்ளார்.
ரெட்டியார் பார்க்க மிகவும் அழகாக இருப்பாராம். மேலும் கம்பீரமும், சுதந்திர மனப்பான்மையும் உடையவராக இருந்தார். எப்போதுமே இரண்டு பொருள்பட சாதூர்யமாக பேசுவதில் வல்லவர். இவரது நினைவாக சென்னிகுளத்தில் ஒரு பள்ளிக்கூடமும், நினைவுச் சின்னமும் உள்ளது.
ஒருமுறை எட்டயபுரம் வந்தார் அண்ணாமலை ரெட்டினார். அங்கு கோயிலுக்கு வந்த ஜமீன்தாரியை, தங்கச்சி வந்தியா? என்று கேட்டார். உடனே அனைவரும் கோபமடைந்தனர். ஜமீன்தாரியை இந்தக் கவிஞர் ஒருமையில் பேசிவிட்டாரே என்று எட்டயபுரம் ராஜாவிடம் சென்று கூறினார். அதற்கு பதில் பேசிய ரெட்டியார், அந்த அம்மா கையில் வைத்திருந்தது தங்கச் சிவந்தியா? அதாவது தங்கத்தில் உருவான சிவந்தியா என கேட்டேன் என்று கூறினார்.
உடனே அவர் அறிவை வியந்த ராஜா, அவரைத் தன்னோடு இருக்கக் கூறினார். உங்கள் பெயர் என்ன என்று கேட்டபோது தமய பர்வதம் என்று கூறினார். அதிலேயும் குழப்பமடைந்த ஜமீன்தார் விபரம் கேட்டபோது, தமயன் என்றால் அண்ணா, பர்வதம் என்றால் மலை. அண்ணாமலை என்பதையே இப்படிக் கூறினேன் என்றார்.
இருபது வயதுகூட நிரம்பாத சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார், ஊத்துமலை ஜமீனுக்கு சில வேளை வரவில்லை என்றால் அவரைத் தேடி அரண்மனை பல்லக்குச் சென்று விடுவது வழக்கமாக இருந்தது.
அப்படித்தான் ஒரு சமயம் அண்ணாமலை ரெட்டியாரைத் தேடி பல்லக்கு வந்தது.
அப்போது மேலத்தெரு முத்தையா பாண்டியன் அவசரமாக ஓடிவந்து, புலவர் முகத்தை பார்க்கிறார்.
“என்ன பாண்டியன்? இவ்வளவு அவசரம்” என்று புலவர் கேட்க, “என் மகள் நேற்று சடங்காயிருக்காள் விஷேசம் நடத்த வேண்டும். அதுக்காக ஊத்துமலை மகாராஜாவை நானும் உங்களுடன் வந்து பாக்கனும்” என்று கூறினார்.
“மகாராஜாவைப் பார்த்து என்ன செய்யப் போகிறீர்?” என்று புலவர் கேட்க,
“அவரிடம் சடங்கு நடத்த அரைக்கோட்டை அரிசியும், ஒரு ஆடும் கேட்கணும். அதுக்கு உங்க சிபாரிசு வேணும்” என்று பாண்டியன் கூறினார்.
“உம்ம மகாராஜாவைத் தானே பார்க்க விரும்புகிறீர்… நீரே போய் கேட்கலாமே.. இதுக்கு என் சிபாரிசு எதுக்கு” என்று புலவரின் பேச்சை இடைமறித்தார் பாண்டியன்.”உங்க பின்னாலேயே வருகிறேன். நீங்க பல்லக்கில் முன்னாலே போங்க.” என்று சொல்லிக் கொண்டே அவருடன் புறப்பட்டு விடுகிறார்.
ஊத்துமலை மன்னர் இருதாலய மருதப்ப தேவர் தம்முடைய வீரகேரளம் புதூர் அரண்மனை வித்வத்சபையில் புலவர்கள் புடைசூழ அமர்ந்திருக்கிறார்.
அவ்வேளையில் மகாராஜா என்று அழைத்துக் கொண்டே அண்ணாமலை ரெட்டியார் ஆவலுடனே உள்ளே நுழைய.. தம் நிலையையும் மறந்து மன்னர் ஓடி வந்து ஆவி சேர்த்து புலவரை தழுவிக் கொள்கிறார்.
மகாராஜா, “நான் நேற்றே வரவேண்டியது. முடியவில்லை. மன்னிக்க வேண்டும். எனக்காக மெனக்கெட்டு பல்லக்கை அனுப்ப வேண்டுமா?” என்று புலவர் ஆதங்கப்பட்டார்.
“உமக்காகவா நான் அனுப்பினேன், தமிழக்காக அனுப்பினேன். தமிழ் நடந்து வரலாமா?” என்று மன்னர் கூற “காவடிச் சிந்து நடந்து தானே வரவேண்டும்” என்றார் புலவர்.
“அது கூடாது என்று தானே, உமக்கு காவடிச் சிந்தை நாமே அச்சு வாகனம் ஏற்றியிருக்கிறோம்” என்ற மன்னரின் மொழி கேட்டு நெகிழ்ந்து போனார் ரெட்டியார்.
அவருடைய அன்பு பிடியில் சிக்கத் தவித்தார்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த முத்தையா பாண்டியனுக்கு எதுவுமே புரியவில்லை.
அந்தவேளை மகராஜாவின் பார்வை பாண்டியன் மேல் விழுகின்றது. “யார் இவர்?” என்றார். “புலவரோ, மகாராஜா இவர் எங்கள் சென்னிகுளத்தார். இவருடைய மகளுக்கு சடங்கு வைக்க வேண்டும். அதற்கு மகராஜாவிடம் இரண்டு சன்மானம் கேட்க வேண்டும் என்று வந்திருக்கிறார். இவர் கேட்க கூடிய இரண்டில் ஒன்று உறுதியாக நடக்கும். ஒன்று நடக்காது. மற்றபடி மகராஜா திருவுள்ளபடி” என்றார்.
புலவர் சொல்லும்போதே கேட்டுக் கொண்டிருந்த முத்தையா பாண்டியனின் மனம் திடுக்கிட்டது.
“புலவரை சிபாரிசுக்கு கூட்டி வந்தது தப்பா போச்சே. அவரே மகராஜாவிடம் ஒண்ணு நடக்கும். ஒண்ணு நடக்காது என்று சொல்கிறாரே. மகராஜா ஒருவேளை ரெண்டு கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளும் வாய்ப்பையும் இவரே தட்டிப் பறித்து விட்டாரே. ராஜா சொல்லக்கூடியதை இவரே ஏன் சொல்லனும்? புலவர் மகா திருடனாக இருப்பார் போலிருக்கே” என்று புத்தி பேதலித்தார்.
மன்னரோ, “புலவரே இவருக்கு அரிசியும், ஆடும் வேண்டும் என்பதை என்ன அழகாகச் சொல்லிவிட்டீர். ஆடு நடக்கும், அரிசி நடக்காது. அழகு, அழகு உமது தமிழே அழகு சென்னி என்றால் தலை அல்லவா?. தமிழ் உலகம் சென்னி குளத்தாராகிய உம்மை என்றும் தலையில் வைத்துப் போற்றும்” என்று சொல்லிக் கொண்டே, “யாரது?” என்று வேலைக்காரர்களை கூப்பிட்டு முத்தையா பாண்டியன் வீட்டுக்கு அரிசியும், ஆட்டையும் உடனே அளிக்க ஏற்பாடு செய்தார்.
“நடக்க முடியாத அரிசியைத் தலைச் சுமையாக கொண்டு செல்லுங்கள்” என்று உத்தரவு பிறப்பித்து விட்டு, “புலவரே, நமது சமஸ்தானத்தில் நடக்காததும் நடக்கும்”, என்று கூறி மகிழ்ச்சி அடைகிறார்.
இவ்வாறு ஊத்துமலை இருதால மருதப்பத் தேவரின் அன்பில் அகப்பட்டு திக்குமுக்காடிக் கொண்டிருந்த அண்ணாமலை ரெட்டியார், தமது இளம் வயதிலே உடல் நலமில்லாமல் சென்னிகுளத்தில் உள்ள தனது வீட்டில் படுத்திருந்தார். இருபத்தாறு வயதே ஆன ரெட்டியார் வாடி வதங்கி படுக்கையில் சுருண்டு கிடக்கின்ற செய்தியை அறிந்த மன்னர் கவிஞரை பார்க்க வர மன்னரைக் கண்ட கவிஞர் முகம் மலர்ந்தது.
“வாடா மருதப்பா, வாடி விட்டேன் பார்த்தாயா?” என்று சொல்லி ஏங்க மன்னருடன் வந்திருந்தோர் “வாடா” என்று பேசிவிட்டாரே புலவர் என்று சங்கடப்பட்டனர்.
மன்னரோ, “புலவரே, நான் வாடாமல் இருப்பதால் தான் உம் வாட்டம் போக்க வந்திருக்கிறேன்” என்று சொல்ல சாகும்போது மன்னரின் நயமான அந்தத் தமிழைக் கேட்ட அண்ணாமலையாரின் கைகள் தாமே குவிந்தன. கண்களும் மலர்ந்து பனித்தன.
இதுபோன்று ஊத்துமலை ஜமீன்தாருக்கு சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியாரையும் சேர்ந்து பல சுவையான வரலாறுகள் கூறுவார்கள்.
தமிழ்ச்சான்றோர்களல் போற்றப்பெற்ற தமிழகத்தின் தலைசிறந்த ஜமீனான ஊத்துமலையின் மன்னர் இருதாலய மருதப்பத் தேவர் தமிழை ரசிப்பதிலும் புலவர்களை ஆதரிப்பதிலும் மட்டற்ற மகிழ்ச்சியாளர்.
மருதப்பரின் தமிழ்ப் புலமையும், தமிழத் தொண்டும் சிறப்புகுரியது. தமிழ் அறிஞர்பால் அவர் கொண்டிருநத அன்பும் பரிவும் அளவிடற்கரியது. குறிப்பாக தமிழ்ப் புலவர்களால், சான்றோர்கள் பலரால் போற்றப்படும் மாமேதையாக விளங்கினார் மருதப்பர்.
சான்றோர்களால் போற்றப் பெறும் பெருமை பெற்ற இருதாலய மருதப்பரை அண்ணாமலை ரெட்டியார், புளியங்குடி வீரமுத்துக் கவிராயர், முகவூர் கவிராயர்கள் உள்பட 35க்கும் மேற்பட்ட கவிராயர்கள் போற்றிப் பாடியுள்ளனர். குறிப்பாக தலங்கள் பல சென்று இறைவனைத் தவிர மானிடரைப் போற்றி பாடாமல் விரதமிருந்த கல்லிடைக்குறிச்சி வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் கூட விதி விலக்காக மருதப்பரைப் போற்றி பாடியுள்ளார் என்றும் கூறுவர்.
தமிழகமெங்கும் ஓலைச்சுவடிகளை தேடித் தொகுத்து பதிப்பிப்பதில் வரலாற்றுப்புகழ் பெற்ற தமிழ் தாத்தா உ.வே.சா, நெல்லைப் பகுதிக்கு வரும்போதெல்லாம் ஊத்துமலை ஜமீனில் தான் தங்குவார். பல நேரங்களில் மாட்டு வண்டி நிறைய ஓலைச் சுவடிகளை தாத்தாவோடு அனுப்பி வைத்துள்ளார் மன்னர்.
மருதப்பருடன் நெங்கிய நட்பு கொண்டிருந்த உ.வே.சா., அவரது தினசரி காலப்போக்கை நேரில் உணர்ந்து நெஞ்சுருக தன் சரிதையில் கூறியுள்ளார்.
தாத்தா கதையை சொல்லி முடித்தார்.
ராஜதுரைக்கு சந்தோசம். மிகப்பெரிய தமிழ் அறிஞர் வாழ்ந்த அரண்மனையில் வேலைக்கு சேர போகிறோம். அவர் மாவு பொம்மையாக இருக்கும் ஒரிடத்தில் வேலைக்கு சேர போகிறோம்.
ஆகா. என்ன பெருமை என நினைத்தான்.
ஆனால் அரண்மனையில் வேலை கிடைத்ததோ இல்லையோ அங்கு வேறு பிரச்சனை ஒன்று இவனை பழி வாங்க காத்து இருந்தது.
அந்தபிரச்சை இவனை நாட்டை விட்டே விரட்டியது.
(முத்துக்கிளி தொடர்ந்து கூவுவார்)


